பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், ரூபாய் மதிப்பு சரிவையும் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி இருக்கின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்தபோது வீழ்ச்சி விகிதத்திற்கு ஏற்ப மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலன் மக்களுக்கு போய் சேரவில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு உயர்த்தியது. 2014 நவம்பர் முதல் 2015 பிப்ரவரி வரை கலால் வரிகளை பெட்ரோலுக்கு ரூ 7.75ம், டீசலுக்கு ரூ 7.50ம் மத்திய அரசு உயர்த்தியது. பன்னாட்டு சந்தையில் இந்திய கொள்முதல் செய்யும் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 84.71 டாலராக இருந்தது. இதன் விலை தற்போது 59 டாலராக குறைந்திருக்கிறது.
பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பெட்ரோல் விலை 12 முறையும், டீசல் விலை 8 முறையும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பெட்ரோல் விலையில் ரூ 18.40ம், டீசல் விலையில் ரூ 15.47ம் குறைந்தது என்றாலும், மூன்று முறை அறிவிக்கப்பட்ட விலை உயர்வால் பெட்ரோல் விலை ரூ 7.96 ஆகவும், டீசல் விலை ரூ 6.07 ஆகவும் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே பா.ஜ.க அரசு பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏறபவே பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்வதாகக் கூறுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலைவாசி ஏற்றம் தொடர்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மேலும் விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும்.
எனவே மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment