அமெரிக்க நாட்டின் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 380 ஆண்டு கால தொல் பழம் சிறப்புமிக்க ‘ஹார்வர்ட்’ பல்கலைக் கழகத்தில் உலக செம்மொழிகளான இலத்தீன், கிரீக், ஹீப்ரு, பெர்சியன், சமஸ்கிருதம், சீனம் ஆகியவற்றை வளர்க்கவும், மொழி ஆராய்ச்சிக்காகவும், அம்மொழிகளைக் கற்பிக்கவும், தனி இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், செம்மொழியாகவும், “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” என்று பெருமை பேசும் தமிழினத்தின் தாய்மொழியாம் தமிழுக்கு அமெரிக்காவின் ‘ஹார்வர்ட்’ பல்கலைக் கழகத்தில் தனி இருக்கை இல்லை. எனவே சீரிளமை திறம் வாய்ந்த நல் செந்தமிழுக்கு தனி இருக்கையை ஏற்படுத்திட அமெரிக்க வாழ் தமிழர்களான திரு. டாக்டர் விஜய் ஜானகிராமன், திரு. டாக்டர் எஸ்.திருஞானசம்பந்தம் ஆகியோர் மேற்கொண்டுள்ள முயற்சி தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிப் பாராட்டத்தக்கதாகும். இவர்களின் தீவிர முயற்சியால் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தனித் துறையை தமிழுக்கு என்று உருவாக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஆனால் அதனை அமைப்பதற்கு சுமார் ஆறு மில்லியன் டாலர் தொகையை இரண்டு ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய் தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில், திரு டாக்டர் விஜய் ஜானகிராமன், திரு டாக்டர் எஸ்.திருஞானசம்பந்தம் இருவரும் ஓராண்டு முடியும் தருவாயில் ரூ.6.7 கோடி தொகையை செலுத்தி உள்ளனர். மீதி செலுத்த வேண்டிய தொகையைப் பெறுவதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் வருகை தந்துள்ள அவர்கள் இருவரும் தமிழத்தில் தமிழ் ஆர்வலர்கள் மட்டுமல்ல, தமிழக அரசின் பங்களிப்பும் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலகில் 65 நாடுகளில் பரந்து வாழும் தமிழர்களின் பன்னெடுங்கால கோரிக்கை, அந்தந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழிக்கு என்று தனி இருக்கைகள் உருவாக்கித்தர இந்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆகும்.
தமிழ்நாட்டில் ஆட்சிப் பீடத்தில் இருந்தவர்கள், தமிழ் மொழியின் உயர்வுக்கும், பண்பாட்டு சீர்மையைப் பாதுகாக்கவும் இதுபோன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரிய ஒன்றாகும்.
“தேமதுர தமிழோசை உலகம் முழுவதும் பரவும் வகை செய்ய வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உள்ளிட்ட அயல்நாடுகளில் ஆட்சிமொழி என்கிற சிறப்பும் பெருமையும் இந்திய மொழிகளில் தமிழ் மொழிக்கு மட்டுமே இருக்கின்றது. அமெரிக்காவின் ‘ஹார்வார்ட்’ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.
இதைப்போன்று உலகின் முக்கிய பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு தனி இருக்கை அமைய உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment