மரபணு
மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்றாக புதிய வகை பருத்தியை மத்திய அரசு
அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேசில்லஸ் துரிஞ்சின்சிஸ் - பி.டி
(Bacillus Thuringiensis -BT) என்பது
மண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிர் ஆகும். இதில் உள்ள புரதம் பருத்திச் செடிகளைத்
தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உடையது என்று கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி
நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதைகளை உருவாக்கின. அதாவது பி.டி. நுண்ணுயிரியின்
புரதத்தை எடுத்து பருத்திச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்தி, காய்ப்புழு
தாக்காத பருத்தியை உற்பத்தி செய்தன.
மரபணு
மாற்றப்பட்ட பருத்தி விதைகளை பி.டி.விதைகள் என்று அமெரிக்காவின் மான்சான்டோ
நிறுவனம் சந்தைக்குக் கொண்டு வந்தது. அதன் துணை நிறுவனமான ‘மஹிகோ’ இந்தியாவில்
பி.டி. பருத்தி சாகுபடி மூலம் மகசூல் பெருகும் பி.டி.பருத்திச் செடிகளை
காய்ப்புழுக்கள் அழித்து விடாமல் பாதுகாக்க முடியும் என்றெல்லாம் விளம்பரப்
படுத்தியது.
இந்தியாவில்
மரபணு மாற்று பருத்தி சாகுபடிக்கு மரபீனிப் பொறியியல் ஏற்புக்குழு 2002, மார்ச்சில்
அனுமதி அளித்தது. இந்திய அரசின் அங்கீகாரத்துடன் அமெரிக்காவின் மான்சான்டோ
நிறுவனம் பி.டி. பருத்தி விதைகளை இங்கு தாராளமாக சந்தையில் விற்கத் தொடங்கியது.
இதன் கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும், மத்திய
அரசு வழங்கி உள்ள அனுமதியாலும் மராட்டிய மாநிலத்தில் விதர்பா மாவட்ட விவசாயிகள்
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பி.டி. பருத்தி விதைகளை வாங்கிப் பயிரிட்டனர். ஆனால், ‘மஹிகோ’ நிறுவனத்தின்
பி.டி. பருத்தி விதைகள், விவசாயிகள் எப்போதும் பயிரிடும் பருத்தி ரகங்களைக்
காட்டிலும் குறைவான முளைப்புத்திறன் கொண்டிருந்தன. முளைத்துப் பயிரான பருத்திச்
செடிகளின் இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகள்
பலி ஆகின. பருத்திச் செடிகளில் இருந்த காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல், அவை
மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்று முன்பைவிட அதிகமாக செடிகளை அழிக்கத்
தொடங்கின. உடனே மான்சான்டோ நிறுவனம் தனது தயாரிப்பான பூச்சிக்கொல்லி மருந்துகளை
அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் இதனையும் அதிக விலை கொடுத்து வாங்கி, பருத்தி
வயல்களில் பயன்படுத்தினர். ஆனால், காய்ப்புழுக்களைக்
கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுவரை
அறிந்திருந்த புதிய வகை பூச்சிகளும், நோய்களும்
பருத்திச் செடிகளைத் தாக்கின. புகையிலை வளைய வைரஸ் புதிதாக பி.டி. பருத்தியை
தாக்கியது. அதற்கும் ஒரு மருந்தை ‘மஹிகோ’ நிறுவனம்
விவசாயிகள் தலையில் கட்டியது. இவ்வளவுக்குப் பிறகும் பி.டி. பருத்தி விளைச்சல்
பாரம்பரிய பருத்தியைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது. நிலமும்
மலடாகிப் போயின. நட்டத்தைத் தாங்க முடியாத விவசாயிகள் தற்கொலைக்குத்
தள்ளப்பட்டனர். மராட்டியம், ஒரிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான
விவசாயிகள் கடனாளிகள் ஆகி, முடிவில் தற்கொலை செய்துகொள்ளக் காரணமாயிற்று. பி.டி.
பருத்தி சாகுபடியால், தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும்
விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பி.டி.பருத்தி விதைகளை விற்பனை செய்த ‘மஹிகோ’ நிறுவனத்திடம்
விவசாயிகள் நட்ட ஈடும் பெற முடியவில்லை.
அமெரிக்க
பன்னாட்டு நிறுவனமான ‘மான்சான்டோ’ இந்தியா
போன்ற நாடுகளில் மரபு சார்ந்த மறுசுழற்சி முறையிலான விவசாயத்தை ஒழித்து, விதைச்சந்தையை
கைப்பற்றுவது, விதைகளுக்கு காப்புரிமைப் பெற்று ஏகபோகமாக சந்தையை
கைப்பற்றுவது, வடிவுரிமைகளை மீறியதாக வழக்குத் தொடுத்து சிறு விவசாயிகளை
அழிப்பது, உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றப்பட்ட பி.டி.
வகை விளைப் பொருட்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தூண்டுவது போன்ற செயல்களில்
தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
நமது
விவசாயத்தின் தற்சார்பை அழிக்கும் ‘மான்சான்டோ’ நிறுவனத்தின்
பி.டி. பருத்திக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வை
ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பி.டி. பருத்திக்கு மாற்றாக மரபணு ஆராய்ச்சி மூலம், மரபு
சார்ந்த வகை பருத்தியை அறிமுகம் செய்யப்போவதாக விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்
கழகமும் (CSIR) மற்றும் உயிரி தொழில்நுட்பத்
துறையும் (DBT) தெரிவித்துள்ளன.
மரபணு
மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்று என்ற பெயரால் மீண்டும் மான்சான்டோவின்
மரபீனி பருத்தி விதைகளையே வேறொரு வடிவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு
முயற்சிப்பதாக ஐயப்பாடு எழுந்துள்ளது. எனவே, மரபணு
மாற்றப்பட்ட பருத்தியை எந்த வடிவத்திலும் பயிரிட அனுமதிக்கக்கூடாது; நமது
பாரம்பரிய பருத்தி ரகங்களைப் பாதுகாத்து, வேளாண்
துறையில் தற்சார்பை காக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன்
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment