முழு மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை போராட்டக் களத்திலேயே மரணம் அடைந்த துயர நிகழ்ச்சி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தி இருக்கின்றது. டாஸ்மாக் கடைகளை உடனடியாக இழுத்து மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற போர்க்குரல் ஒட்டுமொத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. கலிங்கப்பட்டியில் மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய அறவழிப் போராட்டத்தில் கலகம் விளைவித்து, காவல்துறை தர்பாரை ஜெயலலிதா அரசு ஏவிவிட்டது.
இந்நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில், ஹாரிங்டன் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அக்கல்லூரி மாணவர்கள் பலமுறை அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர். ஜெயலலிதா அரசின் அலட்சியப் போக்கைக் கண்டு கொதித்து எழுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு அருகே இருந்த டாÞமாக் கடையை மூடக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டாÞமாக் கடையின் உள்ளே இருந்து மாணவர்கள் மீது சிலர் மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்கள் மீது மது பாட்டில்கள் வீசப்பட்டதால், அவர்கள் டாÞமாக் கடை மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன், மாணவிகளும் முன்நின்று முழக்கம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், காவல்துறையினர் மதுக்கடையை அகற்றக் கோரிய மாணவர், மாணவிகள் மீது ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தி விரட்டி உள்ளனர். மாணவிகளை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, மிதித்து அவர்கள் மயக்கம் அடையும் வரை கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்களை இரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் காயப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது ஜெயலலிதா அரசு ஏவிவிட்ட காவல்துறையின் குண்டாந்தடி தர்பாருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை அடக்குமுறை மூலம் முறியடித்து விடலாம் என்று ஜெயலலிதா அரசு நினைக்குமானால், விளைவுகள் விபரீதமாகும் என்று எச்சரிக்கிறேன்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹாரிங்டன் சாலை டாஸ்மாக் கடை மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கடைகளையும் மூட வேண்டிய நிலைமை உருவாகி வருவதை ஜெயலலிதா அரசு உணர்ந்துகொண்டு, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment