தமிழகத்தில் காவிரிப் படுகையில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகி, தொடர் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன.
நான் ஒரு மாத காலம் தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் கிராமம் கிராமமாகச் சென்று, மீத்தேன் திட்டத்தால் காவிரிப் படுகை அடியோடு நாசமாகும் என்பதனை எடுத்துக்கூறி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தியதோடு, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களை இணைத்து, தஞ்சையிலும் சென்னையிலும் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டோம். இந்நிலையில், மீத்தேன் எடுப்பதற்காக, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு, மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை, குறித்த காலக் கெடுவுக்குள் பணியைத் தொடங்காததால் இரத்துச் செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை இரத்துச் செய்யவில்லை. மறைமுகமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம், மீத்தேன் எரிவாயு எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாகச் செய்தி பரவியதால், காவிரி தீர மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விவசாய சங்கத்தின் சார்பில் பி.ஆர். பாண்டியன், சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார்.
ஆகஸ்டு 5 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீத்தேன் எரிவாயு அபாயம் குறித்து தீர்ப்பு ஆயத்தில் நான் விளக்கம் அளித்ததால், தீர்ப்பு ஆயத்திற்கு ஆலோசனைகள் கூறுகின்ற விதத்தில் நான் உதவுமாறு தீர்ப்பு ஆய நீதிபதி நீதியரசர் ஜோதிமணியும், தொழில் நுணுக்க நிபுணர் நாகேந்திரனும் அறிவித்தனர்.
இன்று (10.8.2015) வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓஎன்ஜிசி நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு இம்மி அளவும் இல்லை என்றும்; மிகத் தவறான தகவல்களைத் தந்து மனுதாரர் வழக்குத் தொடுத்து இருப்பதாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் மாசிலாமணி வாதாடினார்.
இதுகுறித்து நான் பின்வருமாறு வாதத்தை முன்வைத்தேன்:
ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மறைமுகமாகச் செயல்படுகிறது என்ற கருத்து, காவிரி தீரம் எங்கும் மக்களிடம் பரவி உள்ளதால், விவசாயிகள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். திரு பி.ஆர். பாண்டியன் வேண்டுமென்றே தவறான தகவல்களை சுயநலத்திற்காகத் தரவில்லை. அவரது தந்தையார் பொது உடைமை இயக்கத் தலைவர்களுள் ஒருவர் ஆவார். எனவே அவரை ஒரு சமூக விரோதியாக ஓஎன்ஜிசி நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது மிகவும் தவறு; அவர் மீது களங்கத்தைச் சுமத்தும் செயல் ஆகும்.
மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை அமெரிக்காவில் நியூ யார்க், வெர்மாண்ட் மாநிலங்களும் ஐரோப்பாவில் பிரான்ஸ் ஜெர்மனி ஸ்பெயின் நாடுகளும், கனடாவில் சில மாநிலங்களும் தடை செய்துள்ளன. எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காலத்திலும் ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தாது என்ற திட்டவட்டமான உறுதிமொழியை இந்த வழக்கில் தீர்ப்பு ஆயம் பெற்றுத் தர வேண்டுகிறேன் என்று நான் கூறினேன்.
தீர்ப்பு ஆய நீதிபதி ஜோதிமணி அவர்கள் அதனையே முழுமையாக ஏற்றுக் கொண்டதோடு, ஓஎன்ஜிசி நிறுவனமும் அத்தகைய உறுதிமொழியைத் தந்ததால், ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment