நேற்று விருத்தாசலத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உரை ஆற்றிய பிரச்சாரக் கூட்டத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இந்தக் கூட்டத்திற்கு ஆள் திரட்டுவதற்காக ஆயிரக்கணக்கான வண்டிகளில் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்தனர். சுட்டெரிக்கும் நெருப்பு வெய்யிலில் காலை 10 மணிக்கே அவர்களை உட்கார வைத்தனர். வெய்யிலின் கொடுமை தாங்காமல் நிழல் தேடிச் செல்ல முனைந்தபோது, அண்ணா திமுகவினரும், காவல்துறையினரும் அவர்களைத் தடுத்து மிரட்டி அங்கேயே உட்கார வைத்தனர். தாகத்தால் தவித்த பெண்கள் தண்ணீர் தண்ணீர் என்று கெஞ்சியபோதும், தண்ணீர் தரவில்லை. வெய்யிலின் உக்கிரம் அதிகமாகி அனலாகத் தகிக்கத் தொடங்கியது. நெருப்பில் போட்டு வாட்டுவதைப் போலத்தான், உச்சி வெய்யிலில் உட்கார வைத்து வாட்டி வதைத்தனர்.
நான்கரை மணி நேரம் கழித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதா மேடைக்கு வந்தார். அவர் அமர்ந்து இருந்த மேடையின் இருபுறங்களிலும் வரிசையாக ஏர் கண்டிசன் பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தக் குளிர்ந்த காற்று ஜெயலலிதாவுக்கு வெண் சாமரம் வீச, ஒரு பெரிய சோபாவில் வசதியாக உட்கார்ந்து கொண்டு, தான் எழுதிக் கொண்டு வந்ததை வாசிக்கத் தொடங்கினார்.
வெய்யிலின் கொடுமையால் நான்கு பேர் சுருண்டு விழுந்து இறந்தனர்; மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பலர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதைக் கேட்கும்போதே நெஞ்சம் நெருப்பாகக் கொதிக்கிறது.
ஆனால் அரசுத்தரப்புக் காவல்துறை கூறும் செய்தி என்னவென்றால், சிதம்பரத்தைச் சேர்ந்த 62 வயதான கருணாகரன் டேவிட்என்பவரும், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த 45 வயதான இராதாகிருஷ்ணன் என்பவரும் வெய்யிலின் கொடுமையால் உயிர் நீத்ததாகக் கூறுகிறது. உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த 16 பேர்களை, பத்திரிகையாளர்கள் வந்து பேட்டி எடுத்து விடுவார்கள் என்று கருதி, நேற்று இரவிலேயே அவர்களைக் கட்டாயப்படுத்திக் காவல்துறை அங்கிருந்து வெளியேற்றியது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
பற்றிப் படரக் கொழு கொம்பு இன்றிக் கிடந்த முல்லைக்குத் தன் தேரை வழங்கிய பாரி உலவிய திருநாடா இது? குளிருக்கு நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்த பேகன் நடமாடிய பூமியா இது? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் கருணையைப் போதித்த மண்ணா இது?
அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை
என்றார் திருவள்ளுவர். மனிதர்கள் மட்டும் அல்ல; விலங்குகள் நோய்ப்பட்டாலும் தனக்கு வந்த நோய்போலக் கருதாவிடின் அறிவு இருந்து என்ன பயன்? என்றார் செந்நாப்போதார்.
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாகச் சொல்வதுண்டு. அந்த அரக்க குணம் கொண்ட நீரோவுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்? அவர் மனதில் மனிதாபிமானமோ, இரக்கமோ எள் அளவும் இல்லை.
யார் அவதியுற்றாலும் அதைத் தடுக்கத் துடிப்பதுதான் தாய்க்குணம். அம்மா என்று அழைத்தால் அது பாசத்தின் பிரவாகம். ஆனால் தமிழ்நாட்டில் அம்மா என்ற சொல்லை இரக்கம் அற்ற கொடுங்குணத்திற்கும், எவரையும் மிரட்டித் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி காணும் வக்கிரத்திற்கும் இலக்கணம் சொல்லும் பெயராக ஜெயலலிதா ஆக்கி விட்டார்.
கும்பகோணம் மகாமகத்தில் உடன்பிறவாச் சகோதரியோடு புண்ணியத் தீர்த்தம் எனக் குடம் குடமாக நீர் முழுக்காடிய ஜெயலலிதாவால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கடியில் சிக்கி மிதிபட்டு நசுங்கிச் செத்தார்கள். ஈவு இரக்கம் அற்ற அடங்காத ஜெயலலிதாவின் ஆணவப் போக்கு இன்றுவரையிலும் மாறவே இல்லை. அவர் ஒருக்காலும் திருந்த மாட்டார்.
தாகத்தால் நா வறண்டு அக்கினி வெய்யிலில் பரிதவித்தபோது, அந்தச் சகோதரிகளும் பாதிக்கப்பட்டவர்களும் எழுப்பிய வேதனைப் புலம்பல் இன்றைய முதல்வரின் ஆணவ அதிகார வெறிப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சாபமாகவே அமையும். குடிமக்களின் உடைமைகள், உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே, உயிர்களைப் பறிக்கிறது என்றால், உலகம் அங்கீகரித்த மனித உரிமைகள் மண்ணாவதா?
இறந்தவர்கள் குடும்பத்திற்குப் பத்து இலட்சமும், காயமுற்றோருக்கு ஒரு இலட்சமும் அண்ணா தி.மு.க. கட்சியில் இருந்து வழங்க வேண்டும்.
முதல் அமைச்சர் பொதுக்கூட்டத்திற்குச் சென்று பரிதாபமாக உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேமுதிக மக்கள் நலக் கூட்டணி த.மா.கா இணைந்த கூட்டணியின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்டோருக்குத் தக்க சிகிச்சை அளிக்க வலியுறுத்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் அமைச்சர் கலந்து கொண்ட விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் சிலர் உயிர் இழக்கவும், பலர் உடல் நலிவுறவும் காரணமான சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது? எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment