Saturday, April 9, 2016

"போர்வாள் வைகோ கடிதம்"

இமைப்பொழுதும் நீங்காது, என்இதயத் துடிப்போடும், இரத்தச் சூழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!

ஏப்ரல் 5 ஆம் நாள்; எனது தந்தை வையாபுரியார் உயிர் நீத்த நாள். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் உள்ள மத்தியாஸ் மருத்துவமனையில் 1973 ஏப்ரல் நான்காம் தேதி நள்ளிரவு 12.10 நிமிடம் அளவில் அவரது உடலைவிட்டு உயிர் நீங்கியது. நானும், எனது அன்னை மாரியம்மாள், தம்பி வை.இரவிச்சந்திரன் மூன்று அக்காமார்கள் ராஜி அம்மாள், சரோஜா, தேவராணி ஆகியோரும் கலங்கிய மனதுடன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கலிங்கப்பட்டிக்குப் புறப்பட்டோம்.

தி.மு..வின் குமரி மாவட்ட முன்னணித் தலைவர்களான எம்.சி.பாலன், திரவியம், ஜி.எம்.ஷா ஏற்பாடு செய்த காரின் பின் இருக்கையில் அப்பாவின் சடலத்தை வைத்து, ஓரத்தில் அக்கா ராஜியும், முன் இருக்கையில் நானும் அமர்ந்து புறப்பட்டோம். மற்றவர்கள் வேறு கார்களில் வந்தார்கள். புறப்படும்போதே விடியற்காலை நான்கரை மணி ஆகிவிட்டது. கலிங்கப்பட்டிக்கு வந்து சேரும்போது பொழுது விடிந்து, காலை ஏழரை மணி ஆகிவிட்டது. அன்று பிற்பகலிலேயே கலிங்கப்பட்டி சுடுகாட்டில் என் அப்பாவின் சடலத்தைச் சிதையில் வைத்து கொள்ளிக்குடம் சுமந்து நான் சுற்றி வர தீ மூட்டப்பட்டது.

இந்த மயானத்தில்தான் எங்கள் வீட்டுக்கு விசுவாசமாக வேலை செய்த அருந்ததியர் சமூகத்துப் பெருமாள் உடலும் எரிக்கப்பட்டது. சென்னை அண்ணா நகர் வீட்டில் இன்று உதவியாக இருக்கும் சந்துருவின் பாட்டனார் ஆதிதிராவிட சமூகத்து சங்கிலியின் உடலும் தகனம் செய்யப்பட்டது. ஆம்! கலிங்கப்பட்டி சுடுகாடுதான் அனைத்து சாதி மக்களுக்கும் பொது சுடுகாடு ஆகும். இது நாங்கள் ஏற்படுத்தியது அல்ல. கலிங்கப்பட்டி கிராமத்தில் பல தலைமுறைகளுக்கு முன்னால் சுமார் 500 ஆண்டுக் காலமாக இந்த சமத்துவ மயானம் வர்ணபேதம் கருதாமல் அனைத்து சாதி மக்களையும் தன் மண்ணில் சாம்பலாகச் சுமக்கிறது.

நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது என்னுடைய தகப்பனார் வையாபுரியார், அவரது தந்தையும் எனது பாட்டனாருமான .கோபால்சாமி அவர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுப்பார். மேலமரத்தோணி கிராமத்தில் என் பாட்டனார் தன் சொந்தச் செலவில் கட்டிய சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குப் பூசை செய்வதற்கும், விளக்குப் போடுவதற்கும் எங்கள் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து இருந்த அந்தணர் வருவார். அன்று நண்பகலில் உறவினர்களுக்கு எல்லாம் நல்ல சைவ உணவு வழங்கப்படும்.

என் தந்தையார் மறைந்து 43 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று கலிங்கப்பட்டி இல்லத்தில் நான் உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல், யாரிடமும் பேசாமல் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். சிறைச்சாலையில் இருந்தபோது அந்நாளில் அங்கும் விரதம் கடைபிடித்தேன்.

இந்தக் கடிதத்தை சேவல் கூவிய விடிகாலையில், பொழுது புலர்வதற்கு முன்னதாகவே அலைபேசியில் நான் சொல்லச் சொல்ல தம்பி தாயகம் இளங்கோ கணிப்பொறியில் தட்டச்சு செய்துகொண்டு இருக்கிறார். என் மௌன விரதம் இன்று இல்லை. நான் கடைப்பிடித்து வந்த மௌன விரதத்தை இன்று கைவிடச் செய்தவர் வேறு யாரும் அல்ல, 28 ஆண்டுகளாக நான் உடன்பிறவாத தம்பியாகப் பாசம் காட்டி வந்த திருமிகு திருமாவேலன் அவர்கள்தான்.

நமதுசங்கொலிஇதழின் முதல் பக்கத்திலேயே சித்தரிக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தைக் கண்ட மாத்திரத்தில் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பீர்கள்! ‘சங்கொலிநமது ஏடுதானா? அல்லது கட்சியைவிட்டே கைமாறிவிட்டதா? என்ற சந்தேகம் எழத்தானே செய்யும்.

ஆனந்த விகடன்வார ஏடு தமிழ்நாட்டின் இதழியல் வரலாற்றில் ஒரு பொன்னேடு ஆகும். தமிழ் மீதும், தமிழ் மண்ணின் மீதும், பண்டைத் தமிழ் மன்னர்கள் மீதும் தீராக் காதலை எனக்கு ஏற்படுத்தியகல்கிகிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆனந்தவிகடனில்தானே தொடக்கத்தில் தனது எழுதுகோலை உலவவிட்டார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய முதலாவது சிறுகதையானகொக்கரக்கோஆனந்தவிகடன் இதழில்தானே பிரசுரமானது. தமிழ் இலக்கியத்திற்கு அரும் சேவை செய்த ஜெயகாந்தனின் முத்திரை கதைகளை ஆனந்த விகடனில்தானே நான் படித்தேன். “விடுதலைப் புலிகளை நேற்றும் இன்றும் நாளையும் ஆதரிப்பவன் நான்என்று கூறியதற்காக வேலூர் மத்தியச் சிறையில் 19 மாத காலம் இருந்துவிட்டு, அண்ணன் கலைஞரின் வற்புறுத்தலால் பிணையில் விடுதலையான பின், ‘அரசியல் உலகில் ஓர் அதிசயம்என்று எதையுமே சாதிக்காத இந்த சாமான்யன் வைகோவைப் பாராட்டித் தலையங்கம் தீட்டியதும் ஆனந்தவிகடன் ஏடுதானே! அந்த நன்றியை நான் எப்படி மறப்பேன்?

அடிக்கடி ஒரு திருக்குறளை என் மனதுக்குள் நினைவுபடுத்திக் கொள்வேன்
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்


உன்னைப் படுகொலை செய்கின்ற தீமையை ஒருவர் இழைத்தாலும் அவர் என்றோ ஒருநாள் உனக்குச் செய்த ஒரு நல்ல உதவியை எண்ணினால் அந்தப் பொல்லாத தீமை மனதைவிட்டு அகன்று விடும்.

திருவள்ளுவர் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார்! ஆம்; ஆனந்தவிகடன் 6.4.16 நாளிட்ட இதழில்போர்வாள் அட்டகத்தி ஆன கதைஎன்ற விமர்சனக் கட்டுரையை எழுதிய தம்பி திருமாவேலன் அவர்கள், கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்த எடுப்பிலேயேநான் சயனைடு சாப்பிட்டுவிட்டேன்என்று மிகுந்த பாசத்தோடு எழுதி இருக்கிறார் அல்லவா, அவர் வாழ்க; அவரது மேலான எழுத்துக்கு மிக்க நன்றி! சயனைடு சாப்பிட்டால் ஒரு நிமிடத்துக்கு மேல் உயிர் உடம்பில் தங்காது. அந்த ஒரு நிமிடத்தில் உடம்பில் எவ்வளவு வலி ஏற்படும் என்பது சயனைடு சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

என் இனிய சகாக்களே! ஆத்திரப்படாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி, நேரம் காலை 7 மணி. பறவைகளின் அருள்மொழியான கான ஒலிச்சத்தம் வைகறையில் தொடங்கி ஓய்ந்துவிட்ட நேரம். அந்த அடர்ந்த வன்னிக் காட்டில் நாங்கள் மூவர் தரையில் அமர்ந்து இருக்கிறோம். எனக்கு இடது பக்கத்தில் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் தமிழ்க் குலத்துக்குத் தரணியில் அழியாத முத்திரையைப் பதித்தவர், நான் நெஞ்சால் பூசை செய்யும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அமர்ந்து இருக்கிறார்.

வலப்புறத்தில் யார் தெரியுமா? 1993 ஆம் ஆண்டு சிறியதோர் கப்பலில் ஈழத்துக்குப் பயணித்தபோது, தனக்கு உரிமை இல்லாத பன்னாட்டுக் கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து அக்கப்பலைச் சுற்றி வளைத்து, இந்தியக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டாரே மாவீரன் கிட்டு அவர்கள், உட்கார்ந்து இருந்தார்.

சாப்பாட்டுத் தட்டில் உணவு வைக்கப்பட்டு இருந்தது. நான் தொடவே இல்லை. தலை கவிழ்ந்தவாறு அமர்ந்து இருந்தேன். கண்களில் பொங்கிப் பெருகிய கண்ணீர் என் கன்னங்களில் வழிந்து ஓடி சொட்டுச் சொட்டாக சாப்பாட்டுத் தட்டில் விழுந்தது. என் தோள்களைப் பாசத்தோடு பற்றிக் கொண்ட பிரபாகரனும், கிட்டுவும்ஏண்ணே வருத்தப்படுறிங்க? எங்களுக்கு ஒன்றும் ஆபத்து வராது, மனதை ஆற்றிக் கொண்டு சாப்பிடுங்கஎன்றனர்.

உடனே நான் சொன்னேன்: “முட்கள் குத்திக் கிழிக்கும் இந்த வன்னிக் காட்டுக்குள் நடப்பதைப் பற்றியோ, இந்திய-இலங்கை இராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தாக்கக்கூடும் என்பது பற்றியோ நான் துளியும் கவலைப்படவில்லை. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் பெரும் ஆயுத பலத்துடன் வன்னியை முற்றுகையிட்டுள்ளனரே? 24 மணி நேரமும் இந்திய இராணுவத்தின் பீரங்கிகள் குண்டுகளை வீசிக்கொண்டு இருக்கின்றனவே? உங்களை என்று இனி நான் திரும்பக் காண்பேன்? உங்கள் உயிருக்கு ஊறு நேராமல் இருக்க வேண்டுமே?” என்ற கவலைதான் என் நெஞ்சை வாட்டி வதைக்கிறது என்று.

அப்படி ஒன்றும் நடக்காது அண்ணே. தைரியமாப் போங்கஎன்றனர். அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே காலைச் சிற்றுண்டியை முடித்தேன்.

பயணத்துக்கு ஆயத்தமானோம். என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் ஏழு பேரை வேறு இடங்களில் இருந்து வரவழைத்து இருந்தார் பிரபாகரன். அவர்கள் யார் தெரியுமா? யானையிறவுப் போர்க்களத்தில் தங்களைவிட இருபது மடங்கு எண்ணிக்கையிலும், ஆயுதங்களிலும் பலம் வாய்ந்த சிங்கள இராணுவத்தைத் தோற்கடித்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய விடுதலைப் புலிகள் படை அணியின் நிகரற்ற தளபதி பால்ராஜ். இவர் பெயரைக் கேட்டாலே சிங்கள இராணுவத்தினர் ஓட்டம் பிடிப்பர்.

அடுத்தது யானையிறவில் புலிக்கொடி ஏற்றிய தளபதி பானு.

இன்னொருவர் யார் தெரியுமா? 1987 அக்டோபர் 10, 11 தேதிகளில் யாழ் கோட்டையை நெருங்கிய இந்திய இராணுவத்தின் நவீன நான்கு டாங்குகளைத் தாக்கித் தகர்த்து அழித்த தளபதி ஜேம்ஸ். என் கையில் கட்டியிருந்த கைக் கடிகாரத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு, அவரது கடிகாரத்தை நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

இன்னொருவர் யார் தெரியுமா? கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகளைக் குறிபார்த்துச் சுட்டு வீழ்த்துவதில் வல்லவனும், தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவருமான கடாஃபி.

மற்றொருவர் யார் தெரியுமா? படமெடுத்து ஆடும் நல்ல பாம்பின் கழுத்தை மின்னல் வேகத்தில் பிடித்துத் தூக்கி வீசும் திறமையால், ‘பாம்பு அஜித்என்று அழைக்கப்பட்டவரும், பல போர்க்களங்களில் சாகசம் நிகழ்த்தித் தலைவர் பிரபகாரனின் பேரன்பைப் பெற்றவருமான அஜித் ஆவார்.

உணர்ச்சிமயமான இந்தச் சூழலில், புலிகளின் தலைமைப் பாசறையில் ஆயுதபாணிகளாக 58 விடுதலைப் புலிகள் அணிவகுத்து நின்றனர். என்னைப் பாதுகாத்து உடன் பயணிக்க இருந்த புலிகளுக்கு படைத் தலைவனுக்கே உரிய விதத்தில் கட்டளைகள் பிறப்பித்தார் தலைவர் பிரபாகரன்.

உங்களில் 25 பேர் முன் அணியாகச் செல்ல வேண்டும். ஒரு இருபது நிமிடம் கழித்து அண்ணன் வைகோவை அழைத்து வரும் அணி உங்களைப் பின்தொடர்ந்து வரும். இந்திய இராணுவத்துடன் மோத நேர்ந்தால், வாக்கியில் தகவல் சொல்லுங்கள். அண்ணனை அழைத்து வரும் படை அணி எச்சரிக்கையைப் புரிந்து செயல்படும்;

அண்ணன் வைகோவுக்கு வலது பக்கத்தில் நான்கு புலிகளும், இடது பக்கத்தில் நான்கு புலிகளும் நெருக்கமாக நடந்துசெல்ல வேண்டும். அவருக்கு முன்னும் பின்னுமாகச் செல்வோருக்கு மிக்க கவனம் தேவை.

பக்கவாட்டில் இருந்தும் குண்டுகள் பாயக்கூடும் என்பதால், அவருக்கு வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் நெருங்கிச் செல்வோர் நாலாபக்கத்திலும் பார்த்துக்கொண்டே போக வேண்டும் 
என்றார்.


நான் உடனே தலைவர் பிரபாகரன் அவர்களிடம் சொன்னேன்: 
தம்பி, இந்திய இராணுவமோ, இலங்கை இராணுவமோ பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துகொண்டு தாக்கினால், ஒருவேளை நம்மவர்களில் பலர் மடிய நேர்ந்தால், மீதம் இருப்போர் எதிரிகளிடம் பிடிபட்டுவிடக் கூடாது என்று சயனைடு கடித்து கணத்தில் உயிர் நீப்பர். இந்த நிலையில் நான் எதிரிகள் இராணுவத்தின் கையில் சிக்கினால் என்னைக் கைது செய்து, எந்த இடத்தில் பிரபாகரன் இருக்கின்றார்? எவ்வளவு தூரத்தில் இருக்கின்றார்? அவருடன் எத்தனை வீரர்கள் உள்ளனர்? என்று என்னைச் சித்ரவதை செய்து, என் விரல் நகக் கண்களில் ஊசி ஏற்றிக் கேட்டால் என் நிலைமை என்ன ஆகும்? எனக்கு ஏற்படும் ரண வேதனையை யோசியுங்கள். எனவே எனக்கும் ஒரு சயனைடு விஷக் குப்பியைத் தாருங்கள்என்றேன்.


திடுக்கிட்டுப் போன பிரபாகரன், “என்ன சொல்றிங்க அண்ணே? உங்களுக்கு சயனைடு குப்பியா? உங்கள் அருகில் பகைவர்கள் நெருங்க நாங்கள் விட்டுவிடுவோமா? அப்படி ஒரு நிலைமை ஏற்படவே செய்யாதுஎன்றார்.

அதற்கு நான், “போர்க்களத்தில் எதுவும் நடக்கலாம். எதிரிகள் கைகளில் சிக்க நேர்ந்தால் புலிகள் நொடிப் பொழுதில் தங்களை மாய்த்துக் கொள்வார்கள். அப்படி ஒரு நிலைமையில் நான் சிக்க நேர்ந்தால் என்னிடமும் சயனைடு குப்பி இருந்தால் எதிரிகளின் சித்ரவதைக்கு வாய்ப்பு இன்றி நான் மடிவேன் என்று அவர் கைகளைப் பற்றியவாறு, ‘அவசியம் எனக்கு நஞ்சுக் குப்பி தாருங்கள்என்றேன்.

ஒரு நிமிடம் யோசித்த பின், அருகில் நின்றுகொண்டு இருந்த தளபதி பொட்டம்மான், நான் ஈழத்து மண்ணில் கால் வைத்தபோது என்னைப் பாதுகாத்து காட்டுக்குள் அழைத்துச் சென்ற வீராதி வீரனான சொர்ணம் இருவரையும் நோக்கி, ‘சயனைடு குப்பி கட்டுவதற்கு ஒரு புதிய கயிறு கொண்டு வாருங்கள்என்றார். சில நிமிடங்களுக்கு உள்ளாகவே பிரபாகரன் அவர்களிடம் ஒரு சிறிய கயிறு கொடுக்கப்பட்டது. அடுத்து நடந்ததுதான் என்னைப் பொறுத்த மட்டில் அதிசயத்திலும் அதிசயம். எவருக்கும் கிடைக்காத பெரும் பேறு எனக்கு.

சுற்றி நின்றவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். ஆம்; தலைவர் பிரபாகரன் அவர்கள் தன்னுடைய கழுத்தில் சயனைடு நச்சுக் குப்பி அணிந்து இருப்பதை அனைவரும் அறிவார்கள். மிக நெருக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஒரு உண்மை தெரியும். புலிகள் ஒரு சயனைடு குப்பியைத்தான் கழுத்தில் அணிந்திருப்பார்கள். ஆனால் தலைவர் பிரபாகரன் இரண்டு சயனைடு நச்சுக் குப்பிகளை ஒன்றாக இணைத்துச் சேர்த்துக் கட்டி தான் அணிந்து இருக்கின்ற சீருடையின் சட்டையில் இடது பாக்கெட்டில் அந்தக் குப்பிகள் இருக்குமாறு கழுத்தில் கயிற்றைக் கட்டி இருப்பார்.

இப்போது என்ன செய்தார் தெரியுமா? தன் கழுத்தில் கயிற்றுடன் கட்டி இருந்த நச்சுக் குப்பிகளைக் கழற்றினார். அந்தக் கயிற்றில் இணைந்து இருந்த குப்பிகளில் ஒரு சையனைடு குப்பியை மட்டும் பிரித்து எடுத்தார். அதை பொட்டம்மான் கொடுத்த கயிற்றில் கட்டிவிட்டு, என்னை உற்று நோக்கியவாறு என் கழுத்தில் அதனை அணிவித்தார். உணர்ச்சிப் பிரவாகமாக இருந்த கிட்டு உள்ளிட்ட புலிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தலைவர் பிரபாகரனின் கண் அசைவில் களம் செல்லும் புலிகள் வீர மரணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, நஞ்சுக் குப்பிகளை கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். சாகசம் செய்வதில் நிச்சயமாக உயிர் இழப்பது என்று முடிவு எடுத்துக்கொண்டு இலக்குகளை நோக்கிப் பாயும் கரும்புலிகள் மற்றும் தனது பிரதான சேனாதிபதிகள் பலருக்கும் தலைவர் பிரபாகரன், அவர்களின் கழுத்தில் சையனைடு குப்பிகளை கட்டியது உண்டு. ஆனால், தலைவரின் கழுத்தில் இருக்கின்ற சயனைடுக் குப்பியை எடுத்து அவரே இன்னொருவர் கழுத்தில் கட்டிவிட்ட ஒரு சம்பவம் எங்களின் போராட்ட வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை. அந்த பாக்கியம் உலகத்தில் உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் கிடைத்து இருக்கின்றது என்று தளபதிகள் கிட்டுவும், பொட்டம்மானும் என்னைக் கட்டி அணைத்தவாறு வாழ்த்தினர். அதை நினைக்கும்போதே என் நெஞ்சில் ஆனந்த வெள்ளம் பாய்கிறதே!

இப்படி மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் ஈழத்து மரண பூமியில் நான் மேற்கொண்ட பயணத்தில் எத்தனை எத்தனையோ? அவற்றை எல்லாம் மேடைகளில் முழங்கி தம்பட்டம் அடித்துக்கொள்ள நான் முனைந்தது இல்லை. ஆனால், தலைவர் பிரபாகரன் அவர்களை ஒரே முறை சந்தித்து, 12 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு வந்த நபர் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு அனைத்தையும் விஞ்சிய பொய்களை அவிழ்த்துவிட்டு, உலகம் போற்றும் பிரபாகரன் தனக்குப் பயிற்சி கொடுத்தார், ஆலோசனை தந்தார் என்றெல்லாம் கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி காட்டுக் கூச்சல் போடுவதையும் நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

புலிகளின் இலச்சினையைக் கொடியில் பதிப்பித்து, பொய்யும் புளுகும் புரட்டும் மிக்க வார்த்தைகளை வாரி இறைத்து உலகில் வேதனை இருளில் வாடியவாறு விடியலுக்கு ஏங்கும் ஈழத் தமிழர்களிடமே கோடி கோடியாகப் பணத்தை வசூலிக்கும் மோசடியும் நடந்தவண்ணமே இருக்கின்றது. அனைத்தையும் நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் உன்னதத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்பையும், நம்பிக்கையையும், மதிப்பையும் பெற்ற அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களோ, சகோதரர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் அவர்களோ, உலக நாடுகளில் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடம் சல்லிக் காசு வசூலித்தது கிடையாது. ஈழத் தமிழர்களுக்காக நான் உலக நாடுகளுக்குச் சென்றபோது, தங்குமிடக் கட்டணத்தைக் கூட நானே செலுத்தி விடுவேன். என் போராட்ட அரசியலில் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நாங்கள் உதவி செய்கிறோமே என்று கூறியபோதெல்லாம், உங்களிடம் பணம் இருந்தால் இயக்கத்துக்கு அனுப்புங்கள்; உடைந்த உள்ளத்துடன் துன்பத்தில் வாழும் உங்களிடம் நான் கட்சிக்காகப் பணம் வாங்குவது என்னையே விற்றுக்கொள்கிற ஈனப் பிழைப்பு என்று கருதுபவன் நான்என்று பல வேளைகளில் நான் கூறியதை ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, கனடாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பலர் நன்றாக அறிவார்கள்.

கடிதம் திசை மாறுகிறது. எனது ஈழப் பயணத்தையும் அதற்குத் தொடர்புடைய பல்வேறு ரகசியங்களையும் ஓரிரு ஆண்டுகளுக்குள் அச்சில் பதிக்க வேண்டும் என்று எண்ணி இருக்கின்றேன். ஈழ பூமியில் எனக்கு சயனைடு என்ற சம்பவத்தை எழுதி வைக்கத் தூண்டிய தம்பி திருமாவேலனுக்கு மிக்க நன்றி.

நான் சுயபுராணம் பாடவில்லை. மேடை தோறும் இதனைச் சொல்லி எனக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொள்ள முனைந்ததே இல்லை. நான் சயனைடு சாப்பிட்டுவிட்டேன் என்று விகடனே எழுதிவிட்டதால், இதனைக் கூற நேர்ந்தது.

மக்களுக்குத் தெரியாதது ஒன்றுதான்.... உங்களை இயக்கும் கிருஷ்ணன் யார்?
இது திருமாவேலன் கட்டுரையின் கடைசி வரிகள்.
இந்தக் கேள்விக்கான பதிலை வாசிக்க ஒரு வாரம் பொறுத்திருங்கள்...
எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்.

பாசமுடன்,
வைகோ


ஓமன் மதிமுக இணையதள அணி 

No comments:

Post a Comment