ஏப்ரல் 15.04.2016 முதல் மே 30 ஆம் தேதி வரையில் 45 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம். இக்காலகட்டத்தில் மீன்பிடித் தடைகாலம் துவங்குகிறது. தமிழ்நாட்டில் கடல் எல்லை என்பது 1070 கிலோ மீட்டர் பரந்துபட்ட கடல் எல்லையாகும். 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வாழும் நெய்தல் நில மக்களான மீனவப் பெருங்குடி மக்கள் இக்காலக் கட்டத்தில் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆட்படுவார்கள். காரணம் இந்த மீன்பிடித் தடைக் காலங்களில் சித்திரை திருநாள் தொடங்கி வைகாசி 15 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டு முழுவதும் மீன்பிடித் தொழிலில் பயன்பட்ட படகு வலைகளை பழுதுபார்த்து புதுப்பிப்பது, பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டணம் செலுத்துவது, கோடையின் உக்கிரத்தால் மூத்த குடி மக்களுக்கு ஏற்படுகின்ற நோய்க்கான மருந்து செலவுகள், ஊர் கோவில் திருவிழாக்கள் என்று வரிசையாக வரவுகள் இல்லாமல் செலவுகள் மட்டுமே மிஞ்சும்.
ஆண்டில் 365 நாட்களில் மீன்பிடி தடைக்காலம், பருவமழைக்காலம், இயற்கை பேரிடர் காலம் கடல் பஞ்சம் மற்றும் பண்டிகை திருவிழா காலங்கள் போக மீதமுள்ள 100 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க உகந்த காலமாக இருக்கிறது. கரையில் நிம்மதியை தொலைத்துவிட்டு கரையற்ற கடலில் சொந்தங்களை கரை சேர்க்க மீனவர்கள் படும்பாடு தாளம்படுமோ? தரிபடுமோ? என்கின்ற நிலை.
ஒரு நாள் போவார்; மறுநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்!
ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
என்கின்ற கவிஞர் வாலியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.
இன்றைய மீனவர்களின் நிலை யாதெனில் வடமாவட்ட மீன்பிடித் தொழில் செய்வோர் நிலை துன்பமானது. காரணம் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. தென்மாவட்டங்களில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் நிலை மிகப்பரிதாபத்துக்கு உரியது. காரணம் யாதெனில் கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. காரணம் சிங்கள இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.
மத்திய மாநில அரசுகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நிலவள வங்கி இருப்பது போன்று, மீனவர் நல வங்கி உருவாக்கி மீன்பிடி தடைக்காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குகின்ற விதத்தில் போதுமான வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும். நிதியுதவிகளை படகு உரிமையாளர்களுக்கும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மீனவ தொழிலாளர் களுக்கும், மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கும் வழங்கிட வேண்டும்.
அதே போன்று ஒவ்வொரு மீனவர் கிராமங்களிலும் மீன்கள் விற்பனை செய்ய சுகாதாரமான மீன் அங்காடிகள் கட்டித்தரப்பட வேண்டும். மீன்களை பாதுகாத்து வைத்திட குளிரூட்டப்பட்ட அறைகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். மீன்பிடி தடைகாலத்தில் பன்னாடு மீன்பிடி கப்பல்கள மீன்களைப் பிடிக்காமல் பாதுகாக்க கடலோர காவல் கண்காணிப்புகளை பலப்படுத்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்திட வேண்டும். ஊதியம் வாங்காமல் கடல் எல்லைகளை பாதுகாத்து வருகின்ற மீனவர்களை கடல் பழங்குடியினரின் பட்டியலில் சேர்த்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்கள் இனப்பெருக்கக் காலத்தில் ஆலைக்கழிவுகள் கலந்திடாமல் சுற்றுச் சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மத்திய ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்று சொன்னது கானல் நீராகவே இருக்கிறது. கடந்த காலத்தில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், திமுக கூட்டணி, மீனவர்கள் பேராசைக்காரர்கள், அவர்கள் எல்லைத் தாண்டிச் சென்று மீன்பிடிக்க செல்கிறார்கள் என்று சொன்ன கலைஞரின் ஆட்சிக்காலத்தில்தான் மீனவர்கள் வாழ்வை சூன்யமாக்குகின்ற 2009 ஆம் ஆண்டு கொடுஞ்சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதை துவக்க நிலையிலேயே எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டு அந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மீனவ மக்களோடு இணைந்து தங்கச்சி மடத்தில் மீனவர் வாழ்வுரிமை மாநாட்டிலும், 06.02.2011 நாகப்பட்டினத்தில் எனது தலைமையில் உண்ணாவிரதமும், மீனவ அமைப்புகள் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு கடமை ஆற்றி மறுமலர்ச்சி திமுக, மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர் நலன் காக்க, நிவாரண நிதி உதவிய தற்போது உள்ளதை இரண்டு மடங்காக்குவதோடு அவர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment