Friday, September 29, 2017

நெல்லை பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலுக்கு வைகோ கண்டனம்!

நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், பணகுடி அருகே இஸ்ரோ மையம் (ISRO CENTRE) அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது குறித்த தகவலின் அடிப்படையில், புதிய தலைமுறை ஊடகவியலாளர்கள் வள்ளியூர் ராஜாகிருஷ்ணன், நெல்லை மாவட்டப் பொறுப்புச் செய்தியாளர் நாகராஜன் கந்தன் மற்றும் தினகரன் செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப ஊடகங்களிலும், நாளேடுகளிலும் அச்செய்தி வெளிவந்துள்ளது.

இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய பணகுடி காவல்துறை ஆய்வாளர் அதில் கவனம் செலுத்தாமல், செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் (இ பி கோ 469, 505, 507, ஐடிபிசி 67) வழக்குப் பதிவு செய்துள்ளார். மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் பாறையில் வெடிச்சத்தம் கேட்டதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஊடக, பத்திரிகையாளர்கள் செய்தி தந்துள்ளனர்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனுக்களைப் பெற்று, அதன் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் பணகுடி காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்கண்ட 3 செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பத்திரிகைகள், ஊடகங்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை பெற்றிருக்கின்றன. அவர்கள் தெரிவிக்கின்ற செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்கின்ற முயற்சியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, செய்தி அனுப்பிய பத்திரிக்கை, ஊடகப் பணியாளர்களை குறி வைத்து வழக்குப்பதிவு செய்வது பத்திரிக்கை, ஊடகத்துறையின் குரல் வளையை நெறிக்கும் செயலாகும்.

தென் மாவட்டங்களில் செய்தியாளர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று காலை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலத்திற்கு அறவழியில் முற்றுகையிடச் சென்ற பத்திகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வலுக்கட்டாயகமாக வாகனத்தில் திணித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நெல்லை மாவட்டத்தில் நேர்மையான காவல்பணி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் நெல்லைச் சரக காவல் ஆணையர் ஆகியோர் இப்பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு பத்திரிகையாளர்கள் மீது பணகுடி காவல்நிலையத்தில் போடப்பட்டுள்ள வழக்குகளை இரத்து செய்திடுமாறும்; நெல்லைப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறைச் செய்தியாளர்கள் அமைப்புகளின் நிர்வாகிகளை நேரடியாக அழைத்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், தாக்குதல் நடத்த காரணமான காவலர்கள் மற்றும் பொய் வழக்குப் புனைந்த பணகுடி காவல் ஆய்வாளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 29-09-2017 தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

ஐநா மன்றத்தில் தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு பேசி திரும்பும் வைகோவுக்கு அபுதாபியில் அமோக வரவேற்பு!

ஐநா மன்றத்தில் ஈழத்தமிழருக்கு உரிமை குரல் எழுப்பிவிட்டு தாயகம் திரும்பும் தலைவர் வைகோ அவர்களுக்கு அபுதாபியில் அமீரக மறுமலர்ச்சிப் பேரவை சார்பிலும் தமிழ் உணர்வாளர்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்கள் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அமீரக மதிமுக தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்:- Mazayed Mall, Musaffah, Abudhabi.

நேரம்:- காலை 8.30 முதல் 9.30வரை.

தொடர்புக்கு:- ஸ்டாலின் பீட்டர் +971509424324 / +971507371729

ஓமன் இணையதள அணி

ஒன்றரை நிமிடத்தில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளின் வேதனை குறித்து ஐநாவில் வைகோ உரை!

ஐநா மனித உரிமை ஆணையத்தில் 36 ஆம் அமர்வில், 28-09-2017 அன்று பேசிய வைகோ அவர்கள், 2011 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியா இலங்கையைத் தோற்கடித்ததால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படை, தங்கச்சி மடம் மீனவர்கள் விக்டஸ், அந்தோணிராஜ், மேலும் இருவரை பற்களை உடைத்து, காலை வெட்டி, ஒருவரது தலையையும் துண்டாக்கி நான்கு பேரையும் கொன்று கடலில் வீசிய கொடுமை செய்ததை விவரித்தார்.

மகிந்த ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேனா இருவரையும் உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை ஒரு உலக மன்றத்தில் முதன்முதலாகத்தலைவர் வைகோ அவர்கள்தான் வைத்துள்ளார். இதற்கு முன்பு யாரும் இந்தக் கோரிக்கையை இங்கே முன்வைக்கவில்லை.

ஈழத்தமிழர் இனப்படுகொலை என்று சொல்வதற்கே அஞ்சி போர்க்குற்றம் என்றே பேசி வந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக போர்க்குற்றம் என்று சொல்வதையும் நிறுத்திக்கொண்டார்கள்.

அதேபோல, ஐ-நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் ஈழத்தமிழர் தாயகத்திற்கு நேரில் வந்து பார்க்க வேண்டும். பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துத் தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.

குவைத் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அந்நாட்டின் சிறந்த சொற்பொழிவாளர், முன்னணித் தலைவர்களுள் ஒருவருமான அப்துல் ஹமீது தஸ்தி
சிரிய அரசை ஆதரிப்பதால், நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார். இவர் மனித உரிமைப் போராளி.


ஐநா கவுன்சிலில் தலைவர் வைகோ அவர்களை தேடி வந்து சந்தித்தார். ஈழப்பிரச்சினை குறித்து நீண்ட நேரம் பேசினார். தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தகவல்: அருணகிரி

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, September 27, 2017

ஐநாவில் வைகோ மீது நடந்த தாக்குதல் முயற்ச்சிக்கு, சிங்களத்தை எதிர்த்து மதுரையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ஐநாவில் வைகோ மீது நடந்த தாக்குதல் முயற்ச்சிக்கு, சிங்களத்தை எதிர்த்து மதுரையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!  

மதுரை மாநகரில் மதிமுக மாவட்டசெயலாளர் புதூர் பூமிநாதன் தலைமையில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தில் இலங்கை சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரைஇலட்சம் தமிழர்களுக்கு நீதி வேண்டும் சதந்திரதமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசி முடித்த வேளையில் தாக்குதல் நடத்த முற்ப்பட்ட சிங்கள வெறியர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 27-09-2017 மதுரை புதூரில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனித உரிமை ஆணைய தலைவர் உயர்திரு வழக்கறிஞர் ஹென்றிதிபென் கலந்து கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டகழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் என் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

வைகோ மீது தாக்குதல் முயற்ச்சிக்கு, மதிமுகவினர் இலங்கை தூதரகம் முற்றுகை!

செப்டம்பர் 27 நண்பகல் 11 மணிக்கு 27-09-2017 சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஐநா சபையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மீது தாக்குதல் முயற்ச்சியை மேற்க்கொண்டதையடுத்து, சிங்கள இலங்கையை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை கொடியை எரித்தும், கிழித்தும், மைதிரி பால சிரிசேனா படத்தை செருப்பால் உதைத்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதில் மதிமுக மகளிரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மதிமுகவினர் எப்போதெல்லாம் போராட்டத்தில் கைது செய்யப்படுகிறார்களோ, அப்போதெல்லாம், அது பயிற்ச்சி பாசறையாக உருப்பெறும். அந்த வகையில் இன்றும் மல்லை சத்யா, டி ஆர் ஆர் செங்குட்டுவன், வந்தயதேவன், மணி வேந்தன் ஆகியோரும், ஏராளமான மதிமுகவினரும் கைது செய்யப்பட்டதால் பாசறை வலுபெற்று காணப்பட்டது.

மாலையில் அனைவரும் வருகையை பதிவு செய்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, September 26, 2017

ஐநா முற்றத்தில் திலீபன் படத்திற்கு வைகோ உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மலரஞ்சலி!

இந்த நாள்,செப்டெம்பர் 26 ஆம் தேதி தமிழர்களுக்குத் துக்க நாள் ஆகும் என்றும், பொதுவாக்கெடுப்பின் மூலம் மலர்ந்த நாடுகளின் பெயர்களையும், எந்த வருடம் மலர்ந்தது என்பதையும் பட்டியலிட்டு இரண்டு முறை ஐநா மனித உரிமை ஆணையத்தில் பேசிவிட்டு, பின்னர் நடந்த கலந்துரையாடலிலும் விளக்கம் தந்து பொதுவாக்கெடுப்புதான் ஒரே வழி என எடுத்துரைத்துவிட்டு, ஐநா முற்றத்தில் ஈழபடுகொலையை சுட்டிகாட்டும் படங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

உடன் தமிழீழ தமிழர்களும் மலரஞ்சலி செலுத்தினார்கள். வைகோ வீர முழக்கம் எழுப்ப அதை ஆக்ரோசமாக முழங்கினார்கள் தமிழீழ தமிழர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

திலீபனுக்கு வீரவணக்கம் சொல்லி மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ உரை!

ஜெனீவாவில் உள்ள ஐ,நா, மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் 2017 செப்டெம்பர் 26 ஆம்நாள், வைகோ அவர்கள் இரண்டு முறை உரை ஆற்றினார்.

முதல் உரை:-
இந்த நாள்,செப்டெம்பர் 26 ஆம் தேதி தமிழர்களுக்குத் துக்க நாள் ஆகும். 1987 செப்டெம்பர் 26 ஆம் தேதியன்றுதான். தமிழ் ஈழத்தின் மாவீரனும் தியாகியுமான திலீபனின் உயிர்ச்சுடர் அணைந்தது. இலங்கையின் தமிழர் தாயகத்தில், வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளுக்காக, செப்டெம்பர் 15 இல் உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 12 ஆம் நாள் தியாகதீபம் திலீபன் உயிர் நீத்தார்.

1987 ஜூலை 29 ஆம் தேதி. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நயவஞ்சகமமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். வெகுபுகழ் குவித்த பிரபாகரன் அவர்கள் சுதுமலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றும்போது, எங்கள் மீது இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை எங்கள் விருப்பத்திற்கு எதிராகத் திணித்து இருக்கின்றது. சிங்கள இனவாத பூதம், இந்த ஒப்பந்தத்தை விரைவில் விழுங்கி விடும். ஈழத்தமிழர்களை அடிமைகள் ஆக்க முயலும் என்று குறிப்பிட்டார்.

அயர்லாந்து மக்களின் விடுதலைக்காக மகத்தான உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தியாகி பாபி சாண்ட்ஸ், 1981 மே 5 ஆம் தேதியன்று உயிர் நீத்தார். உலகெங்கிலும் உள்ள மனித உரிமைக் காவலர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். எங்கள் மாவீரன் திலீபன், ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் கணைக்கால் இரும்பொறை, சிறைச்சாலையில் அவமதிக்கப்பட்டதற்காக தண்ணீர் பருகாமலேயே உயிர் நீத்ததைப் போல, திலீபனும் தன் ஆவியைத் தந்தார்.

மனித உரிமைகள் மீறலின் விளைவுதான் திலீபனின் சோக மரணம் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தாத அறப்போராட்டத்தை நடத்தியதற்கு சிங்கள அரசின் குண்டுவீச்சும், துப்பாக்கி வேட்டும்தான் எதிர்வினை ஆனதால், விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்த நேர்ந்தது என்பதை, இந்த மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாவீரன் திலீபனுக்குத் தமிழர்கள் ஆகிய நாங்கள் வீர வணக்கம் செலுத்துகிறோம். சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசத்தை அமைக்கச் சபதம் ஏற்கிறோம்.

வைகோ ஆற்றிய இரண்டாவது உரை பின்வருமாறு...

மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் அவர்களே,

அனைத்துலக நாடுகளின் சட்டத்தின்படியும், கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளின்படியும், இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள், சுய நிர்ணய உரிமைக்கு உரியவர்கள் ஆவர். அனைத்துலக நாடுகளின் குடிமை அரசியல் ஒப்பந்தத்தில், இலங்கை அரசும் கையெழுத்து இட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 1, எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறுகிறது. இலங்கைத் தீவில் சிங்கள அரசின் இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மிகக்கோரமான இனப்படுகொலை, தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை நியாயப்படுத்துகிறது.

உலகெங்கிலும் பல தேசிய இனங்கள், ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவோ அல்லது ஐ.நா.மன்றத்தின் ஏற்பாட்டின் மூலமாகவோ பொது வாக்கெடுப்பு நடத்தி, சுய நிர்ணய உரிமையின் மூலம் சுதந்திர நாடுகள் ஆகி விட்டன.

இதோ பட்டியல் இடுகிறேன்;

1905 நோர்வே, 1944 ஐஸ்லாந்து, 1958 கினியா, 1990 ஸ்லோவேனியா, 1991 ஜார்ஜியா, குரேசியா, மாசிடோனியா மற்றும் உக்ரேன், 1992 போஸ்னியா ஹெர்சகோவினா, 1993 எரித்ரியா, 1994 மால்டோவா, 1999 கிழக்குத் தைமூர், 2006 மாண்டிநீரோ, 2011 தெற்கு சூடான் ஆகிய இத்தனை நாடுகளும் பொது வாக்கெடுப்பில் சுதந்திர நாடுகள் ஆகின.

1914 இல் மாமேதை லெனின், எல்லா தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று முழக்கம் இட்டார். 1941 இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பிராங்ளின் டி ரூஸ்வெல்டும், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு, அட்லாண்டிக் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு ஆளானதால், 1976 இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமும் அதன்பின்னர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும், இறையாண்மை உள்ள சுதந்திர ஈழத்தமிழ் தேசத்தை அமைக்கப் போராடினர்.

மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு நான் வேண்டுகோள் விடுப்பதெல்லாம், தமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள இராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு, ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், உலகெங்கிலும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்பதுதான்

இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சி! இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்-மதிமுக அவை தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அறிவிப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் பங்கேற்று ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை ஒலிப்பதற்காக மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி ஜெனிவா சென்றடைந்தார். செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று, ஈழத்தமிழர்கள் ஜெனிவாவில் நடத்திய பிரம்மாண்டமான பேரணியில் வைகோ உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 36 ஆவது அமர்வில் செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றிய வைகோ, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சோக வரலாற்றை எடுத்துரைத்தார்.

ஈழத்தமிழர்கள்தான் அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் என்பதையும், வரலாற்றின் வைகறை பொழுதிலிருந்து தனி அரசு நடத்திய வீர வரலாறு தமிழர்களுக்கு உண்டு என்பதையும் சான்றுகளுடன் சுட்டிக்காட்டினார். இலங்கையிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய 1948 இல் சிங்களவர் கையில் ஆட்சி அதிகாரம் வந்த பிறகு கடந்த 60 ஆண்டு காலமாக ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளானதையும், கல்வி, வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டு, மொழி, இன, பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டதையும், ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தந்தை செல்வா தலைமையில் நடத்திய அறவழிப் போராட்டங்களை சிங்கள அரசு மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கியதையும் வைகோ அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தள்ளப்பட்டு, மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியதையும், ஈழத்தமிழர்களை பூண்டோடு கருவறுக்க 2009 இல் ஜனவரி முதல் மே மாதம் வரையில் இராஜபக்சே அரசு அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததையும் வைகோ எடுத்துரைத்து, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், தமிழர்கள் இறையாண்மை உள்ள அரசை அமைப்பதற்கு ஐ.நா.மன்றம் உலகின் பல நாடுகளில் நடத்தியது போன்று தமிழ் ஈழம் அமைவதற்கும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் வைகோ அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் முழங்கினார்.

இக்கூட்டத்தில் மூன்று முறை உரையாற்றிய வைகோ அவர்கள், ஐ.நா . மனித உரிமைகள் ஆணையம் அரங்கில் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாடுகளான தமிழ் ஈழம், குர்தீஸ்தான், மேற்கு சகாரா, பாலஸ்தீனம், தெற்கு ஏமன், பலுசிஸ்தான் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்து வைத்து ஐ.நா. மன்றம் தமிழ் ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்துகின்ற நாள் வந்தே தீரும், உலக வரைபடததில் தமிழ் ஈழ நாடு இடம் பிடிக்கும் என்று முழக்கமிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளுடன் தனியாக உரையாடிய வைகோ, ஈழத்தமிழர்களின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில்தான் செப்டம்பர் 25 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முதன்மை அரங்கில் நடந்த கூட்டத்தில் வைகோ அவர்கள் இருமுறை உரையாற்றிவிட்டு வந்த நேரத்தில் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோ அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒரு சிங்களப் பெண்மணி இலங்கைப் பிரஜை அல்லாத நீ எப்படி இலங்கையைப் பற்றிப் பேசலாம்? என்று கேட்டார். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கிறது. எனக்கு பேச உரிமை இருக்கிறது என்று பதிலடி கொடுத்த வைகோவை சிங்களர்கள் பலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயற்சித்து உள்ளனர்.

பன்னாட்டு அரங்குகளில் ஈழத்தமிழர்களின் குரலை எழுப்ப முடியாமல் ஒடுக்கி விடலாம் என்று எக்காளமிட்ட சிங்கள அரசு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஐ.நா.வில் ஈழத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதை தாங்க முடியாமல் ஆத்திரப்பட்டு, வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவி விட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஐ.நா. மன்றத்துக்கு விடுக்கப்பட்ட அறைகூவல் ஆகும். இலங்கை இனவெறி அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களின் நீதிக்காக அரசியல் சுயநிர்ணய உரிமைக்காக ஐ.நா. மன்றத்தில் உரிமை முழக்கமிடும் வைகோ அவர்களின் முழு பாதுகாப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவின் குடிமகன், நாடாளுமன்றத்தில் 24 ஆண்டு காலம் உறுப்பினராக பணியாற்றிய வைகோ அவர்கள் மீது நடந்த தாக்குதல் முயற்சியை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் வைகோ அவர்கள் மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசைக் கண்டித்து செப்டம்பர் 27 நண்பகல் 11 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் இன்று 26-06-2017 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

திலீபன் 31 ஆம் நினைவு நாளில் தாயகத்தில் மல்லை சத்யா தலைமையில் மரியாதை!

வீரத் தியாகி திலீபன் அவர்களின் 31 ஆவது நினைவுநாளையொட்டி மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில், இன்று 26.09.2017 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மதிமுக தலைமை நிலையம் தாயகத்ததில் தியாக தீபம் திலிபன் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செய்யப்பட்டது.

இதில் கழக நிர்வாகிகள், கண்மணிகள் கலந்துகொண்டு மலர் மரியாதை செய்தார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி