ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மருங்கே அமைந்துள்ள 11 ஆம் எண் அரங்கத்தில் 2017 செப்டெம்பர் 21 ஆம் நாள், நண்பகல் 1 மணி அளவில், ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசங்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
தமிழ் ஈழம், குர்திஸ்தான், மேற்கு சகாரா, பாலஸ்தீனம், தெற்கு ஏமன், பலுசிஸ்தான் ஆகிய நாடுகளின் சுதந்திரக் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றது.
இதற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லொரென்சோ பியாரிடோ என்பவர் விவாத ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
ஐந்து பேர் பங்கேற்ற இந்த விவாதத்தில் வைகோ ஆற்றிய உரை:
அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் தமிழ் ஈழ தேசத்தை முன்வைக்கின்றேன். 300 ஆண்டுகளாகவே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது தமிழ் ஈழ தேசம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத்தமிழ் தேசம் சுதந்திர நாடாகக் கொற்றம் அமைத்துக் கொடி உயர்த்தி, தமிழர் நாகரிகத்தைக் காத்து, அரசர்களின் ஆட்சியில் மேலோங்கி இருந்தது. ஆனால், 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் ஆக்கிரமிப்பு பின்னர் ஒல்லாந்தர் ஆக்கிரமிப்பு, அதன்பின்னர் பிரித்தானியப் பேரரசின் ஆக்கிரமிப்பு, இப்போது, இனவெறி பிடித்த சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு என்ற நிலைமை இன்றுவரை நீடிக்கின்றது.
1948 பிப்ரவரி ஆம் நாள், பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி அதிகாரம் சிங்களவர் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. கல்வித்துறையில் தரப்படுத்துதலால், தமிழ்க்குல மாணவர் சமுதாயம் உயர்கல்வி உரிமையை இழக்க நேரிட்டது. வேலைவாய்ப்புகளும் இல்லை. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி ஆனது; பௌத்தமே அரசு மதம் ஆனது.
தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் நாசமாக்கப்பட்டன. சிங்களவர்களுக்கு இணையான உரிமைகளைத் தமிழர்களும் பெற வேண்டும் என்று, தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட்ட அறப்போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கி முனையில் நசுக்கப்பட்டன. தமிழர்கள் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடுமைகளை சிங்கள அரசு ஏவியது.
1957, 65 ஒப்பந்தங்கள் குப்பைக் கூடைக்குப் போயின. மானத்தோடும், உரிமையோடும் வாழ்வதற்கு, சிங்களவர்களுடன் சக வாழ்வு சாத்தியம் இல்லை என்பதால், தந்தை செல்வா, அனைத்துத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றாகச் சேர்த்து, 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில், இறையாண்மை உள்ள சுதந்திர தமிழ் ஈழ தேசமே ஒரே தீர்வு என்று பிரகடனம் செய்து, இந்த இலட்சியத்தை இளைய தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று அறிவித்தார். மிருகத்தனமான இராணுவக் கொடுமைகளை எதிர்த்து, அறவழி பயன் அற்றது என்பதால், வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளுக்குப் பிறந்த பிள்ளை பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்ற உன்னதமான அமைப்பை, ஆயுதப் போராட்டத்திற்காக உருவாக்கினார்.
உலகத்தில் இதுவரை உருவான ஆயுதப் படை அமைப்புகளுள் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றிலும் வேறுபட்டதாகும். இந்தப் படை வீரர்கள், விடுதலைப்புலிகள், ஒழுக்கத்தைப் பிரதானமாகக் கடைப்பிடித்தனர். மது, புகை, எந்தப் பழக்கத்திற்கும் அனுமதி இல்லை. பெண்களை மதிக்கின்ற பண்பாடு, கட்டுப்பாடாக ஆக்கப்பட்டதால், எந்த ஒரு சிங்களப் பெண்ணிடமும், விடுதலைப்புலிகள் தவறாக நடக்க முயன்றது கிடையாது. கொலைகாரக் கொடியவன் இராஜபக்சே கூட, இதில் ஒரு குற்றச்சாட்டையும் கூறியது இல்லை.
விடுதலைப்புலிகள் சமர்க்களங்களில் சிங்களப் படைகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். அதிபர் ஜெயவர்த்தனா விரித்த நயவஞ்சக வலையில் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி சிக்கினார். போபர்ஸ் ஊழல் பிரச்சினையில் இருந்து இந்திய மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பொய்யான தகவல்களைக் கூறி நம்பிக்கை ஊட்டி, தில்லிக்கு அழைத்து வந்து, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்தார்.
ஏழரைக்கோடித் தமிழர்கள் குடிமக்களாக உள்ள இந்தியாவை எதிர்க்க விரும்பாததால், சுதுமலையில் பிரபாகரன், 1987 ஆகஸ்ட் 4 ஆம் தேதி, இந்திய வல்லரசு நம்மீது ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும்; எமது மக்களின் பாதுகாப்புக்கு இனி இந்தியாதான் பொறுப்பு என்றார்.
இந்திய அரசு துரோகம் செய்தது. இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர் பகுதிகளில் நாசம் விளைவித்தது.
பின்னர் வி.பி. சிங் பிரதமர் ஆனபோது இந்திய இராணுவம் வெளியேறியது.
விடுதலைப்புலிகள், உலகம் கண்டும், கேட்டும் இராத சமர்களைப் புரிந்து வெற்றிகளைக் குவித்தார்கள். தங்களை விடப் பன்மடங்கு எண்ணிக்கை பலமும், ஆயுதபலமும் கொண்ட சிங்களர் படைகளை ஆனை இறவில் தோற்கடித்துவிட்டுத்தான் போர் நிறுத்தம் என்று புலிகள் அறிவித்தார்கள். வேறு வழி இன்றி, இலங்கை அரசும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நோர்வே முயற்சியால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சந்திரிகா குமாரதுங்கவும், அதன்பின்னர் ராஜபக்சேயும் உலக வல்லரசுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து புலிகளை நசுக்க முனைந்தனர். இந்திய அரசும் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, ஆயுதங்களை வழங்கியது. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் கொலைகார ராஜபக்சே அரசுக்கு ஆயுதங்கள் வழங்கின.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே பின்னால் இருந்து இயக்கியது. புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். கோரமான தமிழ் இனப்படுகொலை நடந்தது.
இதே மனித உரிமைக் கவுன்சிலில் நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்றத்திற்கு எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞன், நீதி கேட்டுத் தீக்குளித்துச் சாம்பல் ஆனான். ஆனால், 2009 மே இறுதி வாரத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இனக்கொலை செய்த சிங்கள அரசை எதிர்த்துக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டிய கவுன்சில், அதற்கு நேர்மாறாக, கொலைகார இராஜபக்சே அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த அநீதி அதுவரை ஐ.நா. வரலாற்றில் நடந்தது இல்லை. பெரும்பாலான நாடுகளின் மனசாட்சி செத்துப் போனது. எனினும், நீதி ஒருநாள் வெல்லும்; ஈழத்தமிழர்களுக்கு சுதந்திர நாடு மலரும். பல நாடுகள் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, சுதந்திர தேசங்கள் ஆகி விட்டன. எனவே நாங்கள், குறிப்பாக, இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக்கோடித் தமிழர்களின் வளரும் இளம் தலைமுறை, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க உரத்த குரல் எழுப்பும்.
ஐ.நா. மன்றம், தமிழ் ஈழத்திற்குப் பொது வாக்கெடுப்பு நடத்துகின்ற நாளும் வரும். உலக வரைபடத்தில் தமிழ் ஈழம் தனி நாடு ஆகும்.
இந்த நேரத்தில் வரும் செப்டெம்பர் 25 ஆம் தேதி, ஈராக்கில் குர்து தேசிய இனம், குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக ஆவதற்கான பொது வாக்கெடுப்பு நடக்கப் போகின்றது. குர்திஷ் இனத்தின் பிரதிநிதிக்கு முன்கூட்டியே வாழ்த்துச் சொல்லுகிறேன். பொது வாக்கெடுப்பில் குர்து மக்களின் கோரிக்கை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
வைகோ உரை ஆற்றி முடிந்ததும், அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்தது. பலரும் பாராட்டினர்.
இவ்வாறு மதிமுக தலைமை நிலையம் 22-09-2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment