சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்சில் முன்பு, முருகதாசன் திடலில் நடைபெற்ற நீதி கேட்போம் என்ற பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் பங்கேற்ற பேரணியின் நிறைவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 18-09-2017 அன்று சிறப்புரை ஆற்றினார்கள்.
அவரது உரை பின்வருமாறு:-
நான் நெஞ்சால் பூசிக்கின்ற ஆருயிர்த் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் கட்டளையை ஏற்று, 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களும், நாடுகள் பலவற்றில் இயக்கத்தை நடத்திக்கொண்டு இருக்கின்ற பிரதிநிதிகளும், சர்வதேச மனித உரிமைப் போராளிகளும் கலந்து கொண்ட நிகழ்சசியல் இதே இடத்தில் நின்று நான் பேசினேன். ஆண்டுகள் பல கடந்துவிட்டன.
1998 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த பின்லாந்து பிரதமர் ஹோர்ஸ்ட் அவர்களிடம், எங்கள் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், நாசமாக்கப்படுகின்றார்கள், படுகொலை செய்யப்படுகின்றார்கள், செம்மணி என்கின்ற இடத்தில் 400 பேர் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் கைகளில் விலங்குகள் பிணைத்தவாறு கொடூரமாகச் சுட்டுக்கொன்று புதைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
நீங்கள் எந்த Physicians for human rights அமைப்பினரை கொசோவாவுக்கு அனுப்பி, அங்கே புதைக்கப்பட்டட 80 இஸ்லாமியர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டினீர்களோ, அதேபோன்ற குழுவை எங்களுடைய யாழ்ப்பாணத்தின் செம்மணிக்கும் அனுப்புங்கள்; எங்களுக்கு இதுதான் கோவில், இதுதான் எங்களின் தொழுகைப் பள்ளி, எங்களுக்கு இதுதான் தேவாலயம், This is our temple, This is our mosQue, this is our church Weh have come here to knock the doors of human rights என்று சொல்லிவிட்டு, நான் பகுத்தறிவாளனாக இருந்தாலும், தில்லை நடராசன் வெண்கலச் சிலையை இங்கே கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு, இதை எங்கள் மக்கள் கடவுளாக வணங்குகின்றார்கள்; எங்கள் கலையின் அடையாளமாக இதை உங்களுக்குத் தருகிறேன் என்று சொன்னபோது அவர் சொன்னார்: இந்த அற்புதமான சிலையை நான் என்றைக்கும் என் மேசையில் வைத்து இருப்பேன் என்று கூறிய பத்தாவது நாள் கட்டளை பிறப்பித்தார், கொசோவாவுக்கு அனுப்பிய அதே குழுவை செம்மணிக்கும் அனுப்பினார்.
அங்கே புதைகுழிகள் தோண்டப்பட்டன. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், 400 தமிழர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அதற்குக் காரணமானவன் இன்று இங்கே உங்கள் முன்னால் நிற்கிறான். அதன்பிறகு, சுவிட்சர்லாந்து நாட்டுக்கு நான் விசா கேட்டு ஏழு முறை விண்ணப்பித்தேன். எனக்கு விசா மறுக்கப்பட்டது. காரணம் என்ன? நான் வன்னிக்காட்டில் 1989 ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி தை அமாவாசை நாளில் ஒன்பது விடுதலைப்புலிகளோடு கடலில் படகில் பயணித்து, நாயாறு பகுதியில் சென்று இறங்கினேன். அடர்ந்த காடுகளுக்குள் குத்திக் கிழிக்கின்ற முட்களுக்கு இடையில் நடந்து சென்றேன். என் தலைவன் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன். அவருடன், அங்கேயே 23 நாட்கள் இருந்தேன்.அங்கே பூமிக்குள் நிலவறையில் அவர் ஆயுதப் பயிற்சிகள் மேற்கொண்டார். 200 மீட்டர் நீளம், பத்து மீட்டர் அகலம், பத்து மீட்டர் ஆழம். உள்ளே இருந்து புகை வெளியே வருவதற்கான குழாய்கள் இருந்தன. ஜெனரேட்டர்கள் இயங்கின. ஏ.கே. 47 முதல் எல்லாமே டார்கெட் பிராக்டிஸ் செய்தார். வெளியில் சத்தம் கேட்காது. நான் என்சிசியில் இருந்தவன். எனக்கும் துப்பாக்கி சுடத் தெரியும். ஏ.கே. 47 இல் எனக்குத் தலைவர் பயிற்சி கொடுத்தார்.
வெளியே வந்தபிறகு, நான் பிஸ்டலை வைத்துக்கொண்டு குறி பார்க்கும்போது, தலைவர் என் பக்கத்தில் நிற்பார். அருகில் யோகி இருந்தார். அண்ணே பார்த்துச் சுடுங்கள் என்று சொன்னார். அப்போது எடுத்த புகைப்படம், இந்திய அரசின் துரோகத்தால், ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் துணையோடு சிங்களப் படைகள், தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி, நம்முடைய படை அணிகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தியபோது, கிளிநொச்சி வீழ்ந்தபோது, இலங்கை இராணுவ வெப்சைட்டில் என் படத்தை வெளியிட்டான். நான் பிஸ்டலை வைத்துக்கொண்டு குறி பார்ப்பதும், பக்கத்தில் தலைவர் நின்று கட்டளை இடுவதுமான புகைப்படம் அது. அங்கே எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தையும் ஒரு கோப்பாக ஆக்கி, இப்போது லண்டனில் தூதராக உள்ள ஹம்சா, உலகின் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைத்து விட்டான்.
நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பாரக் ஒபாமா அவர்கள் முதன்முறை தேர்தலில் போட்டியிட்டபோது சந்தித்து விட்டு வந்தேன். சிகாகோவில் என் மகள் கண்ணகி இருக்கின்றார். இப்போது நான் அமெரிக்காவுக்கும் போக முடியாது. காரணம், அந்தக் கோப்புகளை வைத்துக்கொண்டு அமெரிக்கத் தூதரகத்தில் என்னை அழைத்து விசாரித்தார்கள். You are a part of Lttee. a banned organisation. vdnt, you are ineligible to get visa. எனவே, you are ineligible to get visa
நீங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர். எனவே, உங்களுக்கு அமெரிக்க விசா தர முடியாது என்று சொன்னார்கள். அதற்கு நான் விளக்கம்அளித்தேன். நான் புலிகளின் தீவிர ஆதரவாளன். ஆனால், அந்த இயக்கத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று சொன்னேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.இன்றுவரையிலும் விசா தரவில்லை. லண்டனுக்குச் செல்ல விசா கிடையாது, ஆஸ்திரேலியா செல்ல முடியாது, கனடாவுக்குள் நுழைய முடியாது. மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள்தான், ஒரு அதிகாரப் பொறுப்பில் இருந்துகொண்டு ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கின்ற கவசமாகத் திகழ்கின்றார். அவர் என்னை இரண்டு முறை அங்கே அழைத்துச் சென்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரது மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றபோது, கோலா லம்பூர் வானூர்தி நிலையத்தில் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். சென்னைத் தூதரகத்தில் விசா கொடுத்தவர்கள், கோலா லம்பூர் வானூர்தி நிலையத்திலேயே என்னைத் தடுத்துநிறுத்தி ஒருநாள் முழுவதும் சிறை வைத்து, என்னைச் சென்னைக்குத் திரும்ப அனுப்பி வைத்து விட்டார்கள். ஆகவே,எனக்கு விசா கிடையாது.
ஆனால், சகோதரர் போஸ்கோ, தமிழர் உலகம் அமைப்பு, இரண்டு மாத காலமாக சுவிஸ் அரசாங்கத்தோடு பேசினார்கள். வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் நான் இங்கே வருவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. எந்தத் தகவலும் இல்லை. எங்கள் இயக்கத்தின் மாநாடு தஞ்சையில் நடத்தி முடித்துவிட்டுச் சென்னைக்கு வந்தேன். சனிக்கிழமை நண்பகலில்தான் உனக்கு விசா கிடைத்துவிட்டது என்று சொன்னார்கள். அதுவும் விடுமுறை நாளில். உடனே அன்று இரவே புறப்பட்டு நான் இங்கே வந்து சேர்ந்தேன். ஜெனீவா வானூர்தி நிலையத்தில் ஈழத்தமிழ்ச் சகோதரர்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள்.
16 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இங்கே வந்து இருக்கின்றேன். அதுவும் இந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மட்டும்தான் விசா. நான் உலகத்தின் வேறு எந்த நாட்டுக்கும் போக முடியாது. காரணம், நான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லி இருக்கின்றார்கள். நள் 37 பேர்களை என் வீட்டில் வைத்துப் பாதுகாத்ததற்காக, என் உடன்பிறந்த தம்பி வை.ரவிச்சந்திரனைச் சிறையில் அடைத்து, நீதிமன்றத்திக்குக் கையில் விலங்கு பூட்டிக் கொண்டுபோனார்கள். தடா சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவாசம் இருந்தார்.
நான் என் வாழ்நாளில் ஐந்து ஆண்டுகள் சிறையிலேயே இருந்திருக்கின்றேன். விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக மட்டும் 19 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். நான் அதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் நினைக்கவில்லை.
இன்றைக்கு மனித உரிமைகள் கவுன்சிலில் நான் பேசினேன்.ஒன்றரை நிமிடம்தான். திட்டவட்டமாகச் சொன்னேன். ஈழத்தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள். (கைதட்டல்) அவர்கள்தான் அந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். சிங்களவர்கள் அங்கே வந்து குடியேறியவர்கள்தான். ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனக் கொற்றமும், கொடியும் அரசும் அமைத்து வாழ்ந்தார்கள். காலப்போக்கில் போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள் கடைசியாகப் பிரித்தானியர்கள் வந்து, சிங்களவர்களையும், தமிழர்களையும் ஒரே நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தார்கள். தமிழர்கள் விடுதலைக்காகப் போராடினார்கள். ஆனால், 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி, பிரித்தானியர்கள் தங்களின் யூனியன் ஜாக் கொடியைக் கீழே இறக்கிக் கொண்டு அந்தத் தீவை விட்டுவெளியேறுகின்றபோது, எங்கள் தமிழ் மக்களை, சிங்களவனின் அடிமை நுகத்தடியில் பூட்டி விட்டுப்போய்விட்டார்கள்.
அன்று தொடங்கியது அடக்குமுறை, ஓரவஞ்சகம், நயவஞ்சகம், தாக்குதல்கள். தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் நீதி கேட்டுப் போராடினார்கள். பரிசு துப்பாக்கிக் குண்டுகள்; பரிசு, பயனைட் கத்தியால் குத்திக் கிழிக்கப்பட்டனர்; பரிசு, எங்கள் தமிழ்ச் சகோதரிகள் மானபங்கம் செய்யப்பட்டனர்; பரிசு, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
1957 ஆம் ஆண்டு தந்தை செல்வாவோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டனர். 65 ஒப்பந்தத்தையும் கிழித்துப்போட்டார்கள். காங்கேசன்துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தந்தை செல்வா, நாடாளுமன்றத்திலேயே அதை முன்மொழிந்து விட்டு, தமிழ் எம்.பி.க்களோடு வெளியேறினார்.
1976 மே 16 ஆம் நாள் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் ஒரு மாநாட்டை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றினார். அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு அற்புதமான தீர்மானத்தை வடித்தார். அமெரிக்காக்காரனே அதைப்படித்துவியந்து போனான். அது மேக்னா கார்ட்டாவை விட உயர்ந்தது. ஒரே வரியில், எட்டுப் பக்கத்திற்கு எழுதப்பட்ட தீர்மானம். அப்படி ஒரு தீர்மானத்தை எழுத ஈழத்தமிழர்களை விட வேறு எவராலும் முடியாது.
அந்தத் தீர்மானத்தில்தான் சொன்னார்: இனி சிங்களவர்களோடு சேர்ந்து சகவாழ்வு என்பது சாத்தியம் இல்லை. தனி இறையாண்மை கொண்ட சுதந்திரத் தமிழ் ஈழ நாடு அமைய வேண்டும்; இதை இனி இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவித்தார்.
வல்வெட்டித்துறையில் வேலுப் பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் ஒரு பிள்ளை பிறந்தான். 15 வயதில், இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சிங்கள இராணுவத்தினர் கொதிக்கின்ற தாரில் போட்டுக் கொன்றதைப் பார்த்தான். இந்தக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்து வீட்டை விட்டு வெளியேறினான்.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஆயுதப் போராட்டம் நடத்தலாமா? தலைவர் பிரபாகரன் துப்பாக்கி எடுக்கலாமா? என்று கேட்கின்ற மேதாவிகளுக்குச் சொல்லுகிறேன்.
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பிரகடனம்: Universal Declaration of Human rights என்ன சொல்லுகின்றது தெரியுமா?
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள்அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரை என்ன சொல்லுகின்றது தெரியுமா?
Whereas It is essential, if man is not to be compelled to have recourse, as a last resort to rebellion against tyranny and oppressioon that human rights should be protected by the rule of law.
இது ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தின் முகப்புரை.
உரிமைகளும், சட்டங்களும் நசுக்கப்பட்டால், சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று சொல்லுகின்றது. அதைச் செய்தவன் என் தலைவன் பிரபாகரன். எனக்குத் தெரிய அவருக்கு நிகரான ஒரு தலைவன், உலக வரலாற்றில், போர்க்களங்களில் வேறு எவனும் கிடையாது. சே குவேராவை விட, ~பிடல் கேஸ்ட்ரோவை விட, ஹோ சி மின்னை விட, மாவோவை விட, வேறு எவரையும் விட என் தலைவன் பிரபாகரன் உயர்ந்தவன் என்று சொல்லுவதற்குக் காரணம், அவர் தமிழன் என்பதால் மட்டும்அல்ல; ஒழுக்கத்தில் சிறந்தவன்; தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவன். எந்தவிதமான பலவீனங்களும் இல்லாதவன். மற்ற போராளித் தலைவர்களுக்கெல்லாம் பிற நாட்டு ஆயுத உதவிகள் வந்தன. அப்படி எந்த நாட்டு ஆயுத உதவிகளும் கிடையாது. மாறாகப் பல நாடுகளின் தாக்குதல்கள்தான் இருந்தன.
வஞ்சகமாக அவரைத் தில்லிக்கு அழைத்து வந்தார்கள். அப்போது அவரைச் சந்திக்கப் போனேன். தடுத்தார்கள். திரும்பி வந்த தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய அரசு சிறை வைத்து இருக்கின்றது என்று நான்தான் உலகத்திற்குச் சொன்னேன். அன்றைக்கு அவரோடு தொலைபேசியில் 33 நிமிடங்கள் பேசினேன். அண்ணே, நான் உங்களைச் சந்தித்துவிட்டுத்தான் போவேன் என்றார்.
ஜெயவர்த்தனாவோடு ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட்டார். ஏன் தெரியுமா? நெல்லியடி சிங்கள இராணுவ முகாமை, மில்லர் தலைமையில் புலிகள் தகர்த்தபோது, சிங்கள இராணுவச் சிப்பாய்கள் 900 பேர் மடிந்தார்கள். தென் ஆப்பிரிக்காவில் அவர்கள் வாங்கிய ஆயுதங்கள் பயனற்றுப் போயின. அதனால் ஜெயவர்த்தனா நடுங்கினார். இனி கொழும்பு வரை வந்து அடிப்பார்கள் என்று அஞ்சினார்.
அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் சிக்கி இருந்த ராஜீவ் காந்திக்கு ஒரு வலை வீசினான். நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்றான். ஒரு விவரமும் தெரியாத ராஜீவ் காந்தி, ஒப்பந்தம் போடுவதற்காகத் தலைவர் பிரபாகரனை ஏமாற்றித் தில்லிக்கு அழைத்துக் கொண்டு வந்து அசோகா ஓட்டலில் அடைத்து வைத்தார்கள். உங்கiளைத்தான் சுதந்திரத் தமிழ்ஈழத்தின் பிரதிநிதியாக ஆக்கப்போகிறோம் என்று சொன்னார்கள்.
பாலசிங்கமும், யோகியும் தலைவருடன் இருக்கின்றார்கள். அப்போது அங்கே வருகிறான் தீட்சித். இந்த ஒப்பந்தத்தை வாசித்துப் பாருங்கள் என்று சொல்லிக் கையில் கொடுக்கின்றான் தீட்சித். இதில் நீங்கள் கையெழுத்து இட வேண்டும் என்கிறான்.
ஒப்பந்தமா? எங்களைச் சுதந்திரத் தமிழ் ஈழத்தின் பிரதிநிதியாக அறிவிப்பதாகச் சொல்லித்தானே உங்களது முதன்மைச் செயலர் பூரி சொல்லி அழைத்து வந்தார்கள். இப்போது ஒப்பந்தம் என்று சொல்லி ஏமாற்றுகின்றீர்களே? என்றார்.
என்ன ஒப்பந்தம்? விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிடவேண்டும். இலங்கை அரசோடு பேசி, இடைக்கால நிர்வாகம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்றது ஒப்பந்தம்.
அதைப் படித்துவிட்டுத் தலைவர் பிரபாகரனின் கண்கள் சிவந்தன. நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்றார்.
அப்போது தீட்சித் பிடித்துக்கொண்டு இருந்த ஹூக்காவைக் காட்டிச் சொன்னான்: இந்தப் புகை அணைவதற்குள் உங்களை அழித்து விடுவோம் என்றான். அவன் சொன்னதை அப்படியே என்னிடம் பாலசிங்கம் சொன்னார். அதைக்கேட்டுப் பிரபாகரனின் கண்கள் நெருப்புப் பழமாகின. அப்போது, பாலசிங்கம் அவரது கையை இறுகப்பிடித்துக் கொண்டு தடுத்தார்.
தொலைபேசியில் அவரோடு நான்பேசியபோது சொன்னார். நான் கழுத்தில் நச்சுக்குப்பி கட்டிக்கொண்டு இருக்கின்றேன். எங்கள் பிணங்களின் மீதுதான் இந்திய இராணுவம் தமிழ் ஈழத்திற்குள் நுழைய முடியும் என்றார்.
இந்த ஒப்பந்தம் குறித்து எம்.ஜி.ஆருக்கு எதுவும் தெரியாது. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதக் களம் அமைத்துக் கொடுத்தவர் புரட்சித்தiலைவர் எம்.ஜி.ஆர்தான். அதை நான் எங்கேயும் சொல்லுவேன்.
கடைசியாக ராஜீவ் காந்தி சொன்னார். பெயருக்குச் சில ஆயுதங்களை ஒப்படையுங்கள். உங்கள் தாயகத்தின் மறு கட்டமைப்புக்கு மாதம் 50 இலட்சம் ரூபாய் தருகிறோம் என்று.
அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தை எதிர்ப்பது விவேகம் அல்ல என்று கருதி, வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டார். இலங்கைக்குச் சென்றார் ராஜீவ்காந்தி. அணிவகுப்பைப் பார்வையிட்டபோது, சிங்கள வீரன் ஒருவன் துப்பாக்கியால் அவரது பிடரியில் அடித்துக்கொல்ல முயன்றான். தப்பித்துக் கொண்டார் ராஜீவ் காந்தி.
பிரபாகரன் நாடு திரும்புவதற்கு முன்பு எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதார். இந்த ஒப்பந்தத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்னார்.
சுதுமலையில் தலைவர் பிரபாகரன் பேசினார். நாம் மகத்தான தியாகங்களால் கட்டி எழுப்பியதை அழிப்பதற்கு, ஒரு வல்லாண்மை இந்திய அரசு நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கின்றது. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்; இந்திய மக்களை நேசிக்கின்றோம்; அவர்களை எதிர்த்துத் துப்பாக்கி ஏந்த நாம் தயாராக இல்லை. ஆனால் ஒன்றைச் சொல்லுகிறேன். சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விரைவில் விழுங்கி விடும். எங்கள் பாதுகாப்பை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம் என்று சொன்னார்.
இடைக்கால நிர்வாகத்தில் கிழக்கு மாகாணத்தைத் தனியாகப் பிரித்துவிடத் திட்டம் தீட்டினார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்மநாதன் என்பவரைத்தான் தலைவர் பிரபாகரன் நிர்வாக சபைத்தலைவராக்கும்படி அறிவித்தார். ஜெயவர்த்தனா என்ன செய்தான் தெரியுமா? கிழக்கில் இருந்து எந்தப் பிரதிநிதியும் இல்லாமல், ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூடஇல்லாமல் ஒரு திட்டத்தைக் கொடுத்தான். கிழக்கு மாகாணத்தை ஒதுக்கப் பார்த்தான். தலைவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. இதுதான் பிரச்சினை.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துத் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். துளி நீரும் பருகவில்லை. செப்டெம்பர் 15. அண்ணா பிறந்த நாள்.
கணைக்கால் இரும்பொறை, நான் கேட்ட உடனேயே எனக்குத் தண்ணீர் தரவில்லை என்பதற்காக, வடக்கிருந்து உயிர் துறந்தான். அதேபோலத் தண்ணீர் அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது தலைவர் போய்ப்பார்த்தார்.
திலீபன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா? என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சொல்ல, நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரே மாரடித்துக் கொண்டு தமிழர்கள் அழுதார்கள். திலீபன் என்ற தியாக தீபம் கொஞ்சம்கொஞ்சமாக அணைந்துகொண்டே வந்தது. அப்போது பலாலிக்கு வந்த படுபாவி தீட்சித், திலீபனைப் போய்ப் பார்க்கக்கூட இல்லை. இந்தக் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று ஒரு வாக்குறுதி கொடுத்து இருந்தால் திலீபன் உயிர் துறந்து இருக்க மாட்டான்.
அதற்கு அடுத்த கொடுமையும் நடந்தது. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேர் இந்திய அரசு கொடுத்த உறுதிமொழியின்பேரில் எல்டிடிஈ அலுவலகத்தில் இருந்த பொருட்களை எடுக்கக் கடற்புறா என்ற படகில் வருகின்றார்கள். அப்போது சிங்களக் கடற்படை அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அவர்கள் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. 17 பேரையும் கைது செய்தார்கள். அவர்கள் தலைவர் பிரபாகரனுக்குத் தகவல் கொடுத்தார்கள். அவர் இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்கைத் தொடர்பு கொண்டு சொன்னார். அவர் சிங்கள இராணுவத்தை எச்சரித்தார். அந்தப் 17 பேர் மீது துரும்பு பட்டாலும் உங்களைச் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்றார். பலாலி விமான நிலையத்தில் இந்திய இராணுவம் ஒரு வளையம் போட்டது.
அப்போது தீட்சித், ராஜிவ் காந்திக்கு ஒரு யோசனை சொன்னான். இந்தப் 17 தளபதிகளையும் ஜெயவர்த்தனேவிடம் ஒப்படைத்துவிட்டால், அதன்பிறகு, பிரபாகரன் நம் வழிக்கு வந்து விடுவார். நிர்வாக சபைக்குக் கையெழுத்துப் போடுவார் என்று சொன்னார். அதன்படி, இந்திய இராணுவத்தின் பாதுகாப்பை விலக்கிக்கொண்டார்கள். அந்தத் தளபதிகளைக் கொழும்புக்குக் கொண்டு போக முயற்சித்தார்கள். அவர்கள் விசக்குப்பிகளைக் கடித்தார்கள். 17 பேர்களுக்கும் குப்பிஇல்லை. 15 குப்பிகள்தான் இருந்தன. மூன்று குப்பிகளை ஐந்து பேர் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு நிமிடங்களில் 12 பேர் துடிதுடித்து மாண்டார்கள். உயிர் தப்பிய ஐவருள் மூன்று பேரைப் பின்னர் நான் சந்தித்து இருக்கின்றேன்.
மடிந்த மாவீரர்களின் உடல்கள் தீர்வில் திடலில் வைக்கப்பட்டு இருந்தது.
ஓ மரணித்த வீரனே
உன் சீருடைகளை எனக்குத் தா
உன் காலணிகளை எனக்குத் தா
உன் ஆயுதங்களை எனக்குத் தா
என்ற பாடல் ஒலித்தது.
தலைவர் பிரபாகரன் அங்கே வந்தார். புலிகள் கண்ணீர் விடுவது இல்லை. பிரபாகரன் கண்ணீர் வடிக்கவில்லை. அவர்கள் உடலுக்கு மாலை வைத்தார். பிஸ்டலை எடுத்து மீண்டும் இடுப்பில் சொருகிக் கொண்டார். இனி போரிட்டு மடிவது என்று முடிவு எடுத்தார்.
ஈழமுரசு, முரசொலி அலுவலகங்களைக் குண்டு வைத்துத் தகர்த்தது ஐபிகேஎப். நிதர்சனம் தொலைக்காட்சி அலுவலகத்தையும் அழித்தார்கள். தலைவர் பிரபாகரனை எப்படியாவது கொன்று விடவேண்டும் என்று 28 கமாண்டோக்களை அவர் இருக்கும்இடத்திற்கு அருகில் கொண்டுபோய் இறக்கினார்கள். அவர்களுள் ஒருவன்கூட உயிரோடு திரும்பவில்லை. அதில் காயப்பட்டவர்தான் பொட்டுஅம்மான். காயப்பட்டவன்தான் சந்தோஷ்.
அதன்பிறகு இந்திய இராணுவத்தின் 14 டாங்குகளைப் புலிகள் தகர்த்தார்கள். பாகிஸ்தானிடம் பறிகொடுக்காத டாங்குகளை இந்திய அரசு புலிகளிடம் பறிகொடுத்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
வெறும் 28 பேர்களோடுதான் வன்னிக்காட்டுக்குள் போனார். இந்திய இராணுவத்தின் ஒன்றரை இலட்சம் படைகளை எதிர்த்து நின்றார்.
வல்வெட்டித்துறை இன்னொரு மைலாய் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு புத்தகம் போட்டார்.அது பிரபாகரன் பிறந்த ஊர் என்பதால், அங்கே ஒவ்வொரு வீட்டுக்கு உள்ளேயும் நுழைந்து சுட்டுக்கொன்றார்கள். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் சிவன் படம் இருக்கும், முருகன் படம் இருக்கும். அங்கே வீடுகளில் பிணங்கள், வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடந்தன என்று லண்டன் கார்டியன் பத்திரிகை எழுதியது. அப்போது 55 நிமிடங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் நான் நெருப்பைக் கொட்டி இருக்கின்றேன்.
இந்திய இராணுவத்தை விமர்சிக்கின்றாயா? விபரீதம் ஏற்படும் என்றார் ராஜிவ் காந்தி. You have to face the conseQuences என்று எச்சரித்தார்.
அதற்கு நான் சொன்னேன்: what are the conseQuences? the utmost conseQuence will be gallows. I am prepared to face it என்ன விளைவுகள் ஏற்படும்? கடைசித் தண்டனை தூக்குக்கயிறுதான் என்றால், அதற்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்திய இராணுவம் எங்கள் குழந்தைகளை, பெண்களைக் கொன்று குவிக்கிறது அதை நான் இங்கே விமர்சிப்பேன் என்று சொன்னேன். லண்டனில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் கூட்டத்திலும் இதை நான் பேசி இருக்கின்றேன்.
புலிகள் வலுப்பெற்றார்கள். வெற்றிகளைக் குவித்தார்கள். யாழ் கோட்டையில் புலிக்கொடி பறந்தது. ஓயாத அலைகள் தாக்குதலில் சிங்களவன் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினான். அக்கினி அலைகளில் புறமுதுகிட்டு ஓடினான். ஆனைஇறவுப் போரில், 20 மடங்கு ஆயுத பலம் கொண்ட சிங்களப் படைகளைப் புலிகள் தோற்கடித்தது போன்ற சரித்திரம் உலகில் வேறு எங்கும் இதுவரை நடைபெற்றது இல்லை. அதை நடத்தியவர் பிரிகேடியர் பால்ராஜ். என்னைத் தலைவர் திருப்பு அனுப்பும்போது, எனக்குப் பாதுகாப்பாக ஏழு தளபதிகளையும் 57 புலிகளையும் உடன் அனுப்பினார். நான் போக மாட்டேன். என் கட்சி எனக்குத் துரோகம் செய்து விட்டது. நான் இங்கேயே உங்களோடுதான் இருப்பேன் என்று சொன்னேன். அண்ணே நீங்கள் போகணும். அக்காவுக்கு நான் பதில் சொல்லனும் என்றார். என் வீட்டுக்கு எத்தனையோ முறை வந்து என் துணைவியார் கையால் சாப்பிட்டு இருக்கின்றார்.
ஒன்றரை லட்சம் இந்தியத் துருப்புகள் வளைத்து நிற்கின்றன. சண்டை பலமாக மூளப்போகின்றது. நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போயாக வேண்டும் என்றார். காட்டு வழியாகத்தான் போயாக வேண்டும். முட்கள் குத்திக் கிழிக்கும் என்றார். நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதிகாலை ஐந்து மணிக்குத் தலைவருடன் இருக்கின்றேன். கிட்டுவும் இருக்கின்றார். புலிகள் கஷ்டப்படுகின்றார்களே என்று இரண்டு ஆண்டுகள் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். தலைவரைப் பிரிந்து செல்ல வேண்டிய வேதனையில் சாப்பிடாமல் கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தேன்.
ஏண்ணா அழுகின்றீர்கள்? என்று கேட்டார். ஒன்றும் இல்லை தம்பி. திரும்ப நான் உங்களை எப்போது பார்க்கப் போகின்றேனோ? என் உயிரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஒன்றரை இலட்சம் படைகள் சுற்றி நிற்கின்றனவே, உங்கள் உயிரைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன் என்றேன். இல்லண்ணா. எங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் சந்தோசமாகப் போய் வாருங்கள் என்றார். 57 புலிகளையும் வரிசையில் நிறுத்தினார். முன்னால் ஒரு அணி செல்லுங்கள். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு, அண்ணன் அணி வரட்டும். அண்ணனுக்கு வலதுபுறம் இரண்டு பேர், இடது புறம் இரண்டு பேர் எப்போதும் உடன் செல்லுங்கள். அன்றைக்கு அந்தக் களத்தில் இருந்தவர்கள் நான்கைந்து பேர் இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் பெயரை நான் சொல்லப் போவது இல்லை.
அப்போது நான் தலைவரிடம் கேட்டேன். போகின்ற வழியில் நாங்கள் இந்திய இராணுவத்திடம் சிக்கிக் கொண்டால், புலிகள் விசக்குப்பிகளைக் கடித்து மடிந்து போவார்கள். என்னுடைய நிலைமை என்ன? என்னைக் கைது செய்து, சித்திரவதை செய்வார்கள். என் விரல் நகங்களில் ஊசி ஏற்றுவார்கள். எவ்வளவு தொலைவு நடந்து வந்தாய்? பிரபாகரன் எங்கே இருக்கின்றான்? என்று கேட்பார்கள். நான் அந்தச் சித்திரவதைகளைத் தாங்க முடியுமா? எனக்கும் ஒரு விஷக்குப்பி கொடுங்கள் என்று கேட்டேன்.
அண்ணா உங்களுக்கு அப்படி ஒரு நிலைமை வராது அண்ணா என்றார். இல்லை. யுத்தத்தில் எதுவும் நடக்கலாம். அப்படி நடந்துவிட்டால் என்ன ஆகும்? என்றேன்.
தோழர்களே, என்ன நடந்தது தெரியுமா? வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தலைவர் இரண்டு சயனைடுக் குப்பிகளைச் சேர்த்து கட்டிக் கழுத்தில் அணிந்து இருப்பார். பொட்டு அம்மானை அழைத்து ஒரு கயிறு கொண்டு வரச் சொன்னார். தன் கழுத்தில் இருந்த இரண்டு குப்பிகளை எடுத்தார். அதில் ஒரு குப்பியைக் கயிற்றில் பிரித்துக் கட்டி அதை என் கழுத்தில் அணிவித்தார்.
அப்போது கிட்டுவும்,சொர்ணமும் சொன்னார்கள். புலிகளுக்குத் தலைவர் குப்பிகளைக் கட்டி இருக்கின்றார். ஆனால், தன் கழுத்தில் கிடந்த குப்பியைக் கழற்றி வேறு யாருக்கும் அணிவித்தது இல்லை. அந்த பாக்கியம் உங்களுக்குத்தான் கிடைத்து இருக்கின்றது அண்ணா என்று சொன்னார்கள். உலகத்தில் இதைவிடப் பெரிய பட்டயம் ஒன்றும் எனக்குத் தேவை இல்லை. நான் இன்னமும் அந்த சயனைடுக் குப்பியை என் வீட்டில் வைத்து இருக்கின்றேன்.
இதோ தலைவர் எனக்கு அளித்த சான்றிதழ். புறப்படுவதற்கு முதல் நாள் இரவு அவரிடம், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டேன். என்ன எழுதுவது? என்று கேட்டார். நீங்களே யோசித்து எழுதுங்கள் என்று சொன்னேன். அப்போதெல்லாம் ஒரு மர பெஞ்சில்தான் படுத்து இருப்பார். பங்கரில் இருந்தபோது, அவரது சுயசரிதையை எழுதும்படிக் கேட்டுக் கொண்டேன். வேண்டாம் என்றார்.அப்போது கிட்டு அண்ணா நீங்கள் கேட்டுப் பாருங்கள்.உங்களிடம் சொல்லுவார் என்றார். நான் கேட்டேன். இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி இருக்கத் தீர்மானித்து இருந்தேன். ஐந்து நாள்கள் அவர் என்னிடம் தன் சுயசரிதையைச் சொன்னார். அதை ஒலிநாடாவில் பதிவு செய்தேன். இப்போதும் வைத்து இருக்கின்றேன். அன்று இரவு அவர் கடிதம் எழுதினார். பிறகு அதை ஒரு நோட்டில் அவரே எழுதிப் பிரதி எடுத்தார்.
அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே வாசிக்கின்றேன். 22 பிப்ரவரி 1989 தமிழ் ஈழம். இது விடுதலைப்புலிகளின் லெட்டர் பேடு. அதில் அவர் தன் கைப்பட இந்தக்கடிதத்தை எழுதி இருக்கின்றார்.
பெருமதிப்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு (கலைஞருக்கு எழுதுகின்றார்).திரு கோபாலசாமி அண்ணா இங்கு வந்து என்னைச் சந்தித்துவிட்டு வருவதால் அவரிடம் இந்தக் கடிதத்தைக்கொடுத்து அனுப்புகிறேன். அவர் இங்கே வரும்போது உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் வந்திருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் இங்கே வந்தபிறகுதான், உங்களிடம் சொல்லிவிட்டு வரவில்லை என்பதை அறிந்தேன். தமிழ் இனத்தின் மீது அவர் கொண்டுள்ள பற்றும், பாசமும்தான் அவரை இவ்வாறு செய்யத் தூண்டி உள்ளது.
அதேநேரம் அண்ணா, எமது மக்கள் இதுவரை நம்பி இருந்த பாராளுமன்றத் தலைமை, அற்பப் பதவிகளுக்காக அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்க முனைந்துள்ள வேளையில், தமிழகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட எம்.பி. திரு வைகோபாலசாமி அண்ணா அவர்கள் தனது உயிரையும் பொருட்படுத்தாது, எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில், அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும் என் தோழர்களையும் சந்தித்துப் பேச வந்துள்ள துணிச்சலையும், அவரது தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது, நான் எனது மொழிக்காகவும், தமிழ் ஈழ நாட்டுக்காகவும், இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகின்றது.
என் வாழ்க்கையில் இதைவிட வேறு பட்டயம் வேண்டுமா? பிரபாகரனைப் போன்ற உயர்ந்த தலைவர் இருபதாம் நூற்றாண்டில் உண்டா? இந்த வைகோ என்ற அற்ப மனிதனின் துணிச்சலை நினைத்து ஆயிரம் முறை இறக்கலாம் என்று எழுதி இருக்கின்றார்.
ராஜபக்சே பிரதமராக இருந்தபொழுது, நாங்கள் இந்தியாவோடு ஒப்பந்தம் போடப்போகிறோம் என்று சொன்னான். நான் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் சென்றேன். இப்படிச்சொல்லுகிறானே என்று கேட்டேன். அதை நம்பாதீர்கள் என்றார். அடுத்து இரண்டு மாதங்கள் கழித்துப் பார்க்கின்றேன். ஒப்பந்தம் கையெழுத்து ஆகப்போகிறது என்று இந்து ஆங்கில ஏட்டில் செய்தி வந்திருக்கின்றது.
உடனே தில்லிக்கு ஓடினேன். பிரதமரைப் பார்த்தேன்.இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்? இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் போடப்போகின்றீர்களா? என்று கேட்டேன்.
உடனே வெளியுறவுத்துறைஅமைச்சர் நட்வர்சிங்கைத் தொலைபேசியில் அழைத்து, வைகோ வந்திருக்கின்றார். உங்களிடம் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன். இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் போடப் போகின்றீர்களா? எங்களை அழிக்கப் போகின்றீர்களா? என்று கேட்டேன்.
இல்லையே என்றவர், தன்னுடைய செயலாளரை அழைத்து, நாம் ஒன்றும் ஒப்பந்தம்போடப் போவது இல்லையே? என்றார். அந்த அம்மா துணிச்சல்காரர். மிஸ்டர் வைகோ சொல்வது சரிதான். நாம் ஒப்பந்தம் போடப்போகிறோம். அதற்காகக் கூட்டுஅறிக்கை வெளியிட்டு இருக்கின்றோம் என்றார்.
இந்தத்துரோகத்திற்கு ஒருக்காலும் மன்னிப்புக் கிடையாது என்றேன். இல்லையில்லை. நான் போக மாட்டேன் என்றார் நட்வர்சிங்.
அடுத்து ரடார்கள் கொடுத்தார்கள். போய்ச் சொன்னேன். பாகிஸ்தான் கொடுக்கப் போகிறது, சீனா கொடுக்கும் என்று சொன்னார்கள். அவர்கள் கொடுப்பார்கள். அவர்களது உறவுகள் யாரும் அங்கே இல்லை. ஆனால், நாங்கள் தொப்புள் கொடிஉறவுள்ள தமிழர்கள் ஏழுகோடிப் பேர் இங்கே இருக்கின்றோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தபோது, புலிகளுக்கு வந்த ஒரு கப்பலைக்கூட இந்திய இராணுவம் மறிக்கவில்லை. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசுக்கு ரேடார்களை வழங்கியது. ஆயுத உதவிகள் செய்தது. முப்படைத் தளபதிகளை அனுப்பி ஆலோசனைகள் கூறியது. அத்துடன், ஏழு வல்லரசுகளின் ஆயுத உதவிகளும் அவர்களுக்குக் கிடைத்தன. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் சண்டை. ஆனால், இஸ்ரேலின் ஹைபர் ஜெட் விமானங்கள், ஈரானின் குண்டுகள் இலங்கைக்குக் கிடைத்தன. பாகிஸ்தானுக்கும்,இந்தியாவுக்கும் பகை. ஆனால் இரண்டு நாடுகளும் இலங்கைக்குக் ஆயுதங்கள் கொடுத்தன. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் கெடுபிடிப் போர் இருக்கின்றது. இருவரும் இலங்கைக்கு உதவினார்கள். அமெரிக்க ஆயுதங்கள், பிரிட்டன் ஆயுத உதவிகள் கிடைத்தன. இத்தனையும் எதிர்த்து ஒருவன் நின்றான் என்றால், அது என் தலைவன் பிரபாகரனைத் தவிர வேறு எவரும் கிடையாது. காட்டுக்குள் விமானங்களைத் தயாரித்து, ஓடுபாதை அமைத்து, கொழும்பு வரை பறந்து குண்டுகளைப்போட்டுவிட்டு வந்தது. மக்களுக்கு எந்த உயிர் ஆபத்துகளும் இல்லாமல் கட்டடங்களைத் தாக்கி விட்டுத் திரும்பி வந்தன. விமானத்தைக் கண்டுபிடித்த ரைட்சகோதரர்கள் மண்ணுக்குள் இருந்து புலிகளுக்கு சல்யூட் அடித்து இருப்பார்கள்.
2011 ஆம் ஆண்டு,பெல்ஜியம் நாடு மட்டும் எனக்கு விசா கொடுத்தது. பிரஸ்ஸல்ஸ் சென்றேன். ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் ஒரு அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் எல்லோருக்கும் பத்துநிமிடங்கள் பேச அனுமதிகொடுத்தார்கள். எனக்கு மட்டும் 15 நிமிடங்கள். ஆனால், நான் பதினேழரை நிமிடங்கள் பேசினேன். அப்போது சொன்னேன். சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பெண்கள் கர்ப்பிணிகளின் வயிறை பயனைட்கத்தியால் குத்தி, உள்ளே இருந்த கருவை எடுத்து மண்ணில் வீசினார்கள். ஆனால், என் தலைவன் பிரபாகரன் ஒரு சிங்களப் பெண்ணுக்குக் கூடக் கொடுமை இழைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். யாரேனும் ஒரு சிங்களப் பெண்ணுக்கு விடுதலைப் புலிகள் பாலியல்கொடுமை செய்தார் என்று சொல்லுங்கள், என் வாழ்க்கையில் இனி தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசுவதை விட்டு விடுகிறேன். இதை ஒரு சவாலாகச் சொல்லுகிறேன் என்று சொன்னேன்.
ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று உறுப்பினர்கள் குழு தந்த அறிக்கையில், மருத்துவமனைகளில் குண்டுகள் வீசியதைக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். புது மத்தளான் மருத்துவமனையில் குண்டு வீச்சு. எந்த வசதிகளும் கிடையாது. மரங்களுக்குக் கீழே, கசாப்புக் கத்திகளை வைத்து அறுத்து ஆபரேசன் செய்தார்கள். கடைசிக்கட்டப் போரில் மட்டும், 1,37,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். எங்கள் இசைப்பிரியாவை அவர்கள் எப்படிக் கற்பழித்துக் கொன்றார்கள் என்பதை எங்களால் வருணிக்க முடியாது என்று சேனல் 4 தொலைக்காட்சி சொன்னது. எட்டுத்தமிழ் வீர வாலிபர்களை அம்மணமாகக் கட்டி இழுத்துக்கொண்டு வந்து, காலால் மிதித்து மண்டியிடச் செய்து, பிடரியில் சுட்டுக் கொன்றார்கள். கபாலங்கள் பிளந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். சேனல் 4 காட்டியது. அதைப் பார்த்துவிட்டுஅமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே கண்ணீர் வடித்தார்கள். லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுதார்கள். இது போர்க்குற்றம் அல்ல. இதுதான் இனப்படுகொலை.
இதை இன்று இந்த மனித உரிமைகள் கவுன்சிலில் சொன்னேன். இங்கே நீதி உண்டா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலட்சம் பேரைக்கொன்ற இலங்கை அரசைக் கண்டிப்பதற்காக, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தன. சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக, இந்தியா, கியூபா, பொலிவியா ஆகிய நாடுகள் முழு வீச்சில் வேலை செய்தன. அங்கே இலங்கை உறுப்பினர் கிடையாது. ஆனால், அவன் எழுதிக்கொடுத்ததையே பாராட்டுத்தீர்மானமாக, இந்த ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றியது. கொலைகாரனுக்குப் பாராட்டுத் தீர்மானம் போட்டது, இதோ எதிரே இருக்கின்ற மனித உரிமைகள் கவுன்சில். எங்கே இருக்கின்றது நீதி?
தமிழகத்தில் மாணவர்கள் கொந்தளித்தார்கள். இதோ ஜெனீவாவில் முருகதாசன் திடலில் நின்று பேசுகிறேன். தன் மேனியைச் சாம்பலாக்கிய தியாகி முருகதாசன் திடலில் நின்று பேசுகிறேன். செந்தில்குமாரன் திடலில் நின்று பேசுகிறேன்.
இங்கே ஈருருளைப் பயணமாகத் தோழர்கள் வந்திருக்கின்றார்கள். இவர்கள் பிரஸ்ஸல்சில் தங்கள் பயணத்தைத் தொடங்கியபோது நான் வாழ்த்து அறிக்கை கொடுத்தேன். அப்போது நான் நினைக்கவில்லை, எனக்கு விசா கிடைத்து இன்றைக்கு இங்கே வருவேன் என்று. ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற தமிழ் ஈழ உறவுகளே, 18 ஆம் தேதி ஜெனீவாவுக்கு வாருங்கள். பல்லாயிரக்கணக்கில் வாருங்கள். ஒன்று திரளுவோம். நீதி கேட்போம். நீதி கிடைக்கும். நம் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று அறிக்கை கொடுத்தேன்.
ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமிழன் என்றைக்கும் ஒற்றுமையாக இருந்தது கிடையாது. சங்க காலத்திலும் அப்படித்தான். அது ரத்தத்தோடு கலந்தது. மானம், வீரம், தன்முனைப்பு, ஈகோ. எனக்குத் தன்முனைப்பு கிடையாது.
நான் சுதந்திரத் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற்காக வாழ்கிறேன். 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றேன். புலிகளின் தாகத்தை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றேன். நம் பக்கம் நியாயம் இருக்கின்றது.
வட்டுக்கோட்டைப் பிரகடனத்திற்குப் பிறகு, தமிழ் ஈழ வரலாற்றில் இடம் பெறுவது பிரஸ்ஸல்ஸ் பிரகடனம்தான். 2011 ஜூன் மாதம் முதல் நாள் அங்கே பேசும்போதுதான் நான் முதன்முறையாக, தமிழ் ஈழம் அமையப் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு முன்பு தமிழ் ஈழத் தலைவர்கள் எவரும் பொது வாக்கெடுப்பு கேட்டது இல்லை. எந்தத் தமிழ்நாட்டுத் தலைவரு கேட்டது கிடையாது. எனக்கு மட்டும் அப்படித்தோன்றியதற்கு என்ன காரணம்? நான் என்ன மேதாவியா? இல்லை. மடிந்து போன மாவீரர்கள் சிந்திய செங்குருதியை நினைத்தேன். தன் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு, கடலில் நீந்தி, 6000 டன் எடையுள்ள சிங்களப் போர்க்கப்பல் மீது மோதித் தகர்த்தாளே அந்த அங்கயற்கண்ணியை நினைத்தேன்.
அவள் தான் சாவதற்கு எந்த நாளைத் தேர்ந்து எடுத்தாள் தெரியுமா? நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா நடைபெறுகின்ற நாளைத் தேர்ந்து எடுத்தாள். காரணம் என்ன தெரியுமா? அப்போதுதான் என் அம்மா கச்சான் விற்ற காசு கொஞ்சம் கையில் வைத்து இருப்பாள். நான் இறந்தால், நான்கு பேருக்குச் சாப்பாடு போடுவதற்கு அந்தப் பணம் அவளுக்கு உதவியாக இருக்கும் என்று தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு உயிர்த் தியாகம் செய்தாள். அந்த அங்கயற்கண்ணியை நினைத்தேன். பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் தீர்வு என்றுசொன்னேன். அதற்கு முன்பு தமிழ் ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சிங்கள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும்.சிறைகளில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்ற தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
அது மட்டும் அல்ல. இன்றைக்கு உங்களைப் போல உலகில் பல்வேறு நாடுகளில் பரவிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள் அனைவரும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கு வாக்குப்பதிவு நடக்க வேண்டும். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. அது புதிய வடிவம் எடுக்கும். அதற்குப் பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்றேன். இங்கே இந்த மேடையில் அதை நீங்கள் எழுதி வைத்து இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரணமானவன். ஆனால், பொது வாக்கெடுப்பை முதன்முதலாகச் சொன்னேன். இன்றைக்கு அதை நோக்கிப் பயணிக்கின்றோம்.
ஏன் முடியாது? நோர்வே பொது வாக்கெடுப்பில் தனிநாடு. ஸ்வீடன் தனிநாடு. ஐஸ்லாந்து பொது வாக்கெடுப்பில் தனிநாடு. 11,500 பேர்களே கொண்டு பரா தீவு, பொது வாக்கெடுப்பில் தனி நாடாக ஆனது. ரஷ்யா 15 நாடுகளாகப் பிரிந்து போனது. ஜார்ஜியா பொது வாக்கெடுப்பில் தனி நாடு. மால்டோவா தனி நாடு. குரேசியா, ஸ்லோவேனியா, மாசிடோனியா எல்லாமே பொது வாக்கெடுப்பில் மலர்ந்த நாடுகள்தான். எரித்ரியா, தெற்கு சூடான், கிழக்குத் தைமூரும் பொது வாக்கெடுப்பில் உருவான நாடுகள்தான். ஸ்காட்லாந்தில் இரண்டாவது முறையாகப்பொது வாக்கெடுப்பு நடத்தப் போகின்றார்கள். அங்கே பெண்களை இங்கிலாந்து இராணுவம் கற்பழிக்கின்றதா? பிள்ளைகளைக் கொல்கின்றார்களா? சர்ச்சுகள் மீது குண்டுகளை வீசுகின்றார்களா? ஒன்றும் கிடையாது. ஆனால் நான் ஸ்காட் தனி இனம் என்கிறான். வில்லியம் வாலேஸ் வாள் ஏந்திய இனம், இராபர்ட் புரூஸ் படை நடத்திய இனம். நாங்கள் உன்னோடு இருக்க மாட்டோம் என்கிறான். கடந்த முறை இரண்டு விழுக்காடுதான் ஆதரவு குறைவு. எனவே, அடுத்த பொது வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து தனிநாடு ஆகப் போகின்றது.
இவர்களை விட ஆயிரம் மடங்கு நியாயமான காரணங்கள் நமக்கு உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் தனி இனம், தனி நாடு அமைத்து வாழ்ந்தவர்கள்.
இவ்வளவு தமிழர்கள் உயிர் நீத்தார்களே, அவர்களது தியாகம் பேசும். எங்கள் மாவீரர்களின் துயிலகங்களை உடைத்து நொறுக்கினீர்களே, அதற்குள்தான் அவர்களது எலும்புகள் இருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று அங்கேதான் உலவிக்கொண்டு இருக்கின்றது.
மைத்ரிபால சிறிசேனா ஒரு அயோக்கியன். ரனில் ஒரு ஏமாற்றுக்காரன். ராஜபக்சே தூக்கில் இடப்படவேண்டியவன்.
நான் மோடியை ஆதரித்தேன். அவர் வெற்றி பெற்றால், ஈழப்பிரச்சினையில் வாஜ்பாய் அணுகுமுறையைப் பின்பற்றுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரது பதவி ஏற்பு விழாவுக்குக் கொலைகாரன் ராஜபக்சேவுக்கு அழைப்பு என்றபோது, உடனே நரேந்திர மோடியைச் சந்தித்தேன். எங்கள்இருதயத்தில் ஈட்டியைக் குத்திவிட்டீர்கள். எங்கள் மக்களைக் கொன்ற கொலைகாரன் சாஞ்சிக்கு வருகிறான் என்றபோது, என் தோழர்களோடு நான்கு மாநிலங்களைக் கடந்துசென்று மத்தியப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தினேன். இந்தியாவில் நான்கு மாநிலங்களைக் கடந்துசென்று போராட்டம் நடத்திய வரலாறு யாருக்காவது உண்டா? எங்களுக்கு உண்டு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. நரேந்திர மோடியிடம் சொன்னேன். நாளை மாலைக்குள் சூரியன் மறைவதற்குள் ராஜபக்சேவுக்குக் கொடுத்த அழைப்பைத் திரும்பப் பெறாவிட்டால் நீங்கள் பதவி ஏற்கும்போது நான் கருப்புக்கொடி காட்டுவேன் என்று சொன்னேன்.
உங்களுக்கு எம்.பி. பதவி தரப் போகின்றார்கள், அமைச்சர் ஆக்கப் போகின்றார்கள் என்று செய்திகள் வருகின்றன, இந்த நேரத்தில் கருப்புக்கொடி காட்ட வேண்டுமா? ஒரு அறிக்கையோடு நிறுத்திக்கொண்டால் என்ன? என்று சிலர் சொன்னார்கள்.
நான் இலட்சியங்களுக்காக வாழ்பவன். கருப்புக் கொடி காட்டுவேன் என்று சொன்னேன். அதேபோல மோடி பதவி ஏற்றபோது நாங்கள் கருப்புக்கொடி காண்பித்துச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தோம். ஒரே நொடியில் மோடியைத் தூக்கி எறிந்து விட்டு வந்தேன்.
நாங்கள் எங்கள் வாழ்க்கையையே தத்தம் செய்து இருக்கின்றோம். பத்துக் காசு வெளிநாட்டில் நாங்கள் வாங்கியது இல்லை. சல்லிக்காசு வாங்கியது இல்லை. அது பாவச் செயல். ஈனச்செயல். வெளிநாட்டுத் தமிழர்களிடம் பத்துக் காசு வாங்குவது ஈனச்செயல். இயக்கத்திற்குக் கொடுங்கள். புலிகளுக்குக் கொடுங்கள். எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளுக்குப் பத்துச் சல்லிக்காசு கொடுக்காதீர்கள். அப்படித்தான் இன்று வரை வாழ்கிறேன். என்னுடைய செலவில்தான் விமானப் பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன். என்னுடைய செலவில் தங்கிவிட்டுப்போகிறேன்.
இன்றைக்கு மனித உரிமைகள் கவுன்சிலில் நரேந்திர மோடி அரசும் துரோகம் செய்கிறது. இங்கே வந்து பல ஆண்டுகள் உரை ஆற்றிய என் தம்பி திருமுருகன் காந்தி நேர்மையானவன், உண்மையானவன். அவனைத் தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தில் அடைத்து வைத்து இருப்பது அயோக்கியத்தனம். நான் எச்சரித்து விட்டு வந்தேன். அவன் கட்சிகளைச் சாராதவன், ஓட்டுக் கேட்காதவன், மதியூகி. ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மெரினா கடற்கரையில் அவனோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவோம்.இந்த ஆண்டு நான் சிறையில் இருந்ததால் போக முடியவில்லை. இங்கே நான் இந்திய அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால், ஈழப்பிரச்சினையில் முந்தைய அரசுகளுக்கு வேறுபட்டதல்ல நரேந்திர மோடி அரசு.
அப்படியானால் வழி என்ன? என்னிடம் எரிக் சோல்கைம் சொன்னார், இந்தியா தமிழ் ஈழ மக்களை ஆதரிக்காவிட்டால், உலகத்தில் வேறு எந்த நாடும் ஆதரிக்காது என்று. காரணம், ஏழரைக்கோடித் தமிழர்கள் இருக்கின்ற இந்தியாவே ஆதரிக்கவில்லையே? நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அப்படியானால் இதற்கு என்ன வழி? கட்சி எல்லைகளைக் கடந்து போராடுவதற்கு இளைஞர்களை உருவாக்குவோம். அந்த உணர்வோடுதான் முத்துக்குமார் தீக்குளித்து மடிந்தான். 18 பேர் தீக்குளித்து மடிந்தார்கள்.
விதியே விதியே என் செய நினைத்தாய் என் தமிழச் சாதியை? என்று எழுதி வைத்து விட்டுத் தன்மேனியில் தீவைத்துக்கொண்டு மடிந்தான் முத்துக்குமார். அந்தத் தியாகம் வீண்போகாது. அப்படித்தான் இங்கே முருகதாசன் மடிந்தான். அங்கே அரண்யத்தில் எத்தனையோ இளம்பெண்கள், வீரப்பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த சுகத்தையும் பார்க்காமல் மடிந்து போனார்களே? ஐரோப்பாவில் வாழ்கின்ற இளந்தமிழ்ப் பிள்ளைகளே, எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது. 2001 ஆம் ஆண்டு நான் இங்கே உரையாற்றும்போது, பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தார்கள். இளம்பிள்ளைகளே சுகமான வாழ்க்கை போதும் என்று நினைக்கின்றீர்களா? நமக்கென்று ஒரு தேசம். தமிழ் ஈழம் உங்கள் தாயகம். அங்கே வேப்பமர நிழலிலே, பனைமரத்து அடியிலே கிடைக்கின்ற சுகம் இங்கே கிடைக்குமா? நீங்கள் கோடீஸ்வரர்களாகக்கூட இருக்கலாம் ஜெனீவாவிலே, பிரான்சிலே, லண்டனிலே, அமெரிக்காவிலே.
உன் மண், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உன் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன் வாழ்ந்த மண். அது நம் உயிர் அல்லவா? அதை மீட்பதற்கு உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் நாம் ஒன்றாக இணைவோம். 65 நாடுகளில் வாழ்கின்றோம். ஏழு கோடித்தமிழர்கள் வாழ்கின்ற தமிழகத்தில்தான் முத்துக்குமார் தீக்குளித்தான். அங்கே போராட்ட உணர்வு இல்லை என்று கொச்சைப்படுத்தக் கூடாது. அங்கேதான் அண்ணன் நெடுமாறன், முள்ளிவாய்க்கால் முற்றத்தை அமைத்து இருக்கின்றார். நாங்கள் அங்கே ஆயத்தப்படுத்துவோம்.
இங்கே ஈருருளைகளில் பல நாடுகளைக் கடந்து வந்தார்களே, அதைப்போலப் புலம்பெயர் வாழ் தமிழர்களே, உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் உணர்வை ஊட்டுங்கள். தமிழ்க் கல்வியைத் தாருங்கள். நான் கவலையோடு இருக்கின்றேன். வளரும் பிள்ளைகளிடம் உணர்வு இருந்தால்தான், அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குள் நாம் தமிழ் ஈழத்தை அடைய முடியும்.
நான் இலங்கை அரசியலை விமர்சிக்க விரும்பவில்லை. விக்னேஸ்வரன் நியாயமாகத்தான் நடந்துகொண்டு வந்தார். அங்கே பல நெருக்கடிகள் இருக்கின்றன. அங்கே உள்ள அரசியல்வாதிகளைக் குறை சொல்ல விரும்பவில்லை. அது தியாகத்தால் சிவந்த மண். தலைவர் பிரபாகரனின் மண். அவர் வாழ்கிறார், நம்மை இயக்குகிறார். என்றைக்கும் நம்மை இயக்குவார்.அவருக்கு நிகரான தலைவன் உலகத்தில் வேறு எவரும் இல்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை.
ஆகவே, புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களே, உங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்.ஆனால் இந்த ஒரு பிரச்சினையில் அனைவரும் ஒன்றாகச் சேருங்கள். இதைச் சொல்லும் தகுதி எனக்கு உண்டு. மூவர் தூக்கு தொடர்பான நிகழ்வுகளில் எல்லோரையும் அழைத்து மேடையில் அமர வைத்தேன். நான்ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டேன். எந்தப் பதவிக்காகவும் நான் வாழவில்லை.
தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய வேண்டும்.ஐ.நா. மன்றத்தில் தமிழனின்கொடி பறக்க வேண்டும். அது தமிழ் ஈழத்தின் கொடியாகப் பறக்க வேண்டும். இதோ ஜெனீவா முற்றத்தில் கொடிகள் பறந்துகொண்டு இருக்கின்றனவே, அவற்றோடு சேர்ந்து பறக்கவேண்டும். பறக்கின்ற நாள் வரும். நமது இலட்சியங்களில் நியாயம் இருக்கின்றபோது, அதை யாராலும் தடுக்க முடியாது.
மனிதஉரிமைகள் கவுன்சில் தலைவர் ஜெய்ட் ராட் அல் ஹூசைன் சொல்லி இருக்கின்றார். உலகத்தின் எந்த நாட்டிலும் சிங்களவனின் போர்க்குற்றங்களை விசாரிக்கலாம் என்று. மற்ற நாடுகளின் ஆதரவைப் பெற முயல வேண்டும். அந்தப் பணியை நீங்கள்தான் செய்ய வேண்டும். அதற்கான பரப்புரைப் பணிகளில் ஈடுபடுங்கள். அங்கங்கே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தியுங்கள். எடுத்துச் சொல்லுங்கள். புத்தகங்களைக் கொடுத்து விளக்குங்கள்.அப்படித்தான் புலிகள் செய்தார்கள். ஆதாரங்களைக் காட்டுங்கள். நமது கண்ணீரும்,வேதனையும், உலகதின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை,
நான் பதினாறு ஆண்டுகளுக்குப்பிறகு இங்கே வந்து இருக்கின்றேன். இன்றைக்கு உங்கள் முன்னால் பேசுவேன் என்று நினைக்கவில்லை. மீண்டும் வருவேன். இனி எனக்குத் தடை இருக்காது என்று கருதுகிறேன். அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. நான் இங்கே வந்து பேசுவதற்கு முன்பு மடிந்த மாவீரர்களை நினைத்துக் கொண்டேன். அவர்களோடு காட்டுக்குள் கரம் கோர்த்து இருந்த நாள்களை எண்ணிக்கொண்டேன். எனக்குப் பேசும் சக்தியைக் கொடுங்கள் என்றுகேட்டுக் கொண்டேன்.
மழை பெய்யுமோ? கருமேகங்கள் திரண்டு இருக்கின்றதே என்று நினைத்தேன். மழை பெய்தால்தான் என்ன? கொட்டுகின்ற மழையிலும், தகுந்த உடைகள் இன்றி, ஒருவேளை உணவும் இன்றி, எத்தனை நாள்கள், வாரங்கள், மாதங்கள் புலிகள் வாடினார்கள், புலிப்பெண்கள் வாடினார்கள். இங்கே ஒருபொழுதுமழை பெய்து நாம் நனைந்தால் என்ன ஆகி விடும்?
பச்சிளம்பிள்ளை பாலச்சந்திரன் மார்பில் ஐந்து குண்டுகள் பாய்ந்தனவே? அவன் கண் முன்னாலேயே அவனது ஐந்து மெய்க்காப்பாளர்களையும் சுட்டுக்கொன்றார்களே? அந்தக் கண்களில் பயம் தெரிகின்றதா? அவன் கண்களில் அச்சம் தெரிகின்றதா? அந்த விழிகளில் பீதி தெரிகின்றதா? இல்லை. என் தலைவனின் வீரப்பிள்ளை அல்லவா?
தலைவர் பிரபாகரன் நம் நெஞ்சுக்குள் இருக்கின்றார், நம்மை இயக்குகிறார், இயக்கிக்கொண்டே இருப்பார்.
ஒன்றை இங்கே நினைவூட்டுகிறேன். காட்டுக்குள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். தம்பி, சுதந்திரத் தமிழ் ஈழம் மலரப் போகின்றது. எனக்கு ஒரு ஆசை இருக்கின்றது செய்வீர்களா?
என்ன அண்ணா, சொல்லுங்கள் என்றார்.
தமிழ் ஈழ தேசத்தின் சிறப்புக் குடிமகனாக, ஸ்பெசல் சிட்டிசனாக என்னை அங்கீகரித்து, ஐ.நா. பொதுச்சபையில், சுதந்திரத் தமிழ் ஈழத்தின் முதல் பிரதிநிதியாக என்னைப் பங்கேற்கச் செய்வீர்களா?பேச வாய்ப்புத் தருவீர்களா? என்று கேட்டேன்.
என்னண்ணா, நீங்கள் வேறு ஏதோ பெரிதாகக் கேட்கப் போகின்றீர்களே என்று நினைத்தேன். இதைக்கூட நாங்கள் செய்ய மாட்டோமா? என்று சொன்னார். அவ்வளவு ஆசைக்கனவுகளை என் மனதிற்குள் வளர்த்துக் கொண்டு இருப்பவன் நான். தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தமிழ் ஈழம் மலரும். உலகத்தில் நமக்கு நிகரான இனம் வேறு எதுவும்இல்லை. உலகத்தின் பூர்வ குடிகளே நாம்தான். அத்தனை இனங்களுக்கும் பூர்வ இனமே தமிழ்தான். எத்தனையோ ஆதாரங்களை எடுத்துக்காட்டி என்னால் அதை நிறுவ முடியும்.
உங்களைப் பார்க்கப் பிரபாகரன் வருகிறாரா? அப்பொழுது அவரைச் சுட்டுக்கொன்று விடு என்று தீட்சித் சொன்னார். இது என் ஆணை அல்ல. மேலிடத்து உத்தரவு என்றும் சொன்னார்.
அப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று சொன்னதாக, இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத்சிங் எழுதிய புத்தகத்தில் இதை எழுதி இருக்கின்றார். அந்தப் புத்தகம் இன்னமும் தடை செய்யப்படவில்லை. இதைத் தளபதி தீபேந்தர் சிங்கிடம் சொன்னபோது, அவரும் சபாஷ் நீ சரியாகத்தான் சொல்லி இருக்கின்றாய் என்று பாராட்டினாராம்.
ஆகவே, விடுதலைப்புலிகள் மீது எந்தத் தவறும் இல்லை. அவர்கள் ஒழுக்கசீலர்கள். மது கிடையாது, விபச்சாரம் கிடையாது. திருடு கிடையாது, களவு கிடையாது, ஒரு தப்பும் கிடையாது.இன்றைக்குத் தமிழ் ஈழத்தில் மது, விபச்சாரம் எல்லாம் நடந்துகொண்டு இருக்கின்றது. நம் இனத்தின் கலாச்சாரத்தை அழித்துவிடத் திட்டமிடுகிறான். ஊரடவரசயட பநnடிஉனைந, ளவசரஉவரசயட பநnடிஉனைந எல்லாம் திட்டமிட்டுச் செய்து வருகிறான். சிங்கள இராணுவத்தினரை நமது குடும்பங்களுக்கு நடுவே கொண்டு வந்து குடி அமர்த்தி விட்டான்.
நமது மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகின்றது. நேற்று பிரபாகரன் என்ற தம்பி எனக்குக் கார் ஓட்டிக்கொண்டு வந்தார். திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டேன். இல்லண்ணா என்றார். பின்னால் இருந்த தம்பியிடம் கேட்டேன்.அவரும் திருமணம் ஆகவில்லை என்று சொன்னார். இப்படி எத்தனையோ இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருக்கின்றார்கள். நம் இனத்தின் ஜனத்தொகை குறைந்துகொண்டே போகின்றது. அவன் பெருகிக் கொண்டே போகிறான். ஆனால், சத்தியமும், அறமும் நம் பக்கம்இருப்பதால் உலகத்தின் கவனத்தை நம் பக்கம் திருப்ப முடியும். தமிழகத்தில் செத்துப்போன உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்ற பணியை என்னைப் போன்றவர்கள் செய்வோம்.
அன்பிற்கு உரியவர்களே, இவ்வளவு நேரம் என் உரையைச் செவிமடுத்ததற்கு நன்றி.
விரைவில் சுதந்திரத் தமிழ் ஈழத்தின் கொடி ஐ.நா. மன்றத்தில் பறக்கும். இதோ இந்த மனித உரிமைகள் கவுன்சில் முன்பும் பறக்கும்.
வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment