தமிழர் தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்கள், தினத்தந்தி நாளிதழைத் தொடங்கி, படிக்காத பாமரரும் புரியும்வண்ணம் எளிய தமிழில் எழுதி, நாளிதழில் புரட்சியை ஏற்படுத்தி, நாள்தோறும் படிக்கச் செய்தார். தமிழை வாசிக்கச் செய்தார். நாடு முழுமையும் தமிழ் முழக்கம் ஒலிக்கச் செய்தார். தமிழர்களின் பழமையான கலைகள், நாகரிகம், விளையாட்டு அனைத்தையும் தமிழகத்தில் மீண்டும் தழைக்கச் செய்ய அரும்பாடுபட்டார். தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக ஐம்பதுகளிலேயே குரல் எழுப்பினார்.
அன்னாருக்கு நன்றிகூறும் விதமாக, தமிழக அரசு அவரது திருவுருவச் சிலையை, எழும்பூரில் நிறுவியதுடன், ‘ஆதித்தனார் சாலை’ எனப் பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது.
ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தச் சிலை அமைந்து இருந்த ரவுண்டானாவை முழுமையாக இடித்துவிட்டுப் புதிதாக அமைக்க இருப்பதாகவும், அதனால் சில நாள்கள் அகற்ற வேண்டி இருப்பதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் மீண்டும் அதே இடத்தில் புதுப்பொலிவுடன் விரைவில் சிலை நிறுவப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து சிலையை அகற்றினர்.
சிலை, தற்போது, தினத்தந்தி நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளது.
ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் அந்த இடத்தில் பணிகள் எதுவும் தொடங்கப்படவே இல்லை.
வருகின்ற செப்டெம்பர் 27 ஆம் நாள் ஐயாவின் பிறந்தநாள் வருகின்றது.
எனவே, இன்னும் ஒரு வார காலத்திற்குள் பணிகளை முடித்து, மீண்டும் ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் நிறுவிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 09-09-2017 தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment