மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் அவர்களே, அன்பிற்குரிய சகோதரிகளே, சகோதரர்களே,
ஐம்பதுகளில் இருந்து இன்று வரை தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள், மனித உரிமைகள் இனவாத சிங்கள அரசால் நசுக்கப்பட்டு விட்டன. ஐ.நா. வின் அன்றைய பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்த மார்சுகி தாருஸ்மன் ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அறிக்கையைப் படிக்கின்ற எவரும் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணிக் கண்ணீர் சிந்துதுவார்கள். அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.
2009 மார்ச் மாதம், காயப்பட்ட தமிழர்கள் இருந்த மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டது. அங்கிருந்த தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
2009 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி லண்டன் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ காணொளி வெளிப்படுத்திய காட்சி, இரத்தத்தை உறையச் செய்யும்.
தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேர்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி, கண்களைக் கட்டி, இழுத்துச் சென்று, பூமியில் மண்டியிட வைத்து, உச்சந்தலையில் சுட்டார்கள். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அவர்களது தலைகள் சிதறி, இரத்தம் பூமியில் கொட்டியது.
2010 டிசம்பர் 2 ஆம் தேதி, அதே சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சம்பவம் மிகவும் கொடூரமானது. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் நிர்வாண உடல்கள் சிதறிக் கிடந்தன. விடுதலைப் புலிகள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இளநங்கை இசைப்பிரியா, 15 சிங்களச் சிப்பாய்களால் குரூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆடைகள் எதுவும் இல்லாத அந்த அபலைப் பெண்ணின் உடல் சேற்றில் வீசப்பட்டது.
பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுள் 1,46,000 பெண்கள், குழந்தைகள், ஆண்கள், குண்டுவீச்சால் கொன்று குவிக்கப்பட்டனர். கர்ப்பிணித் தமிழ்ப் பெண்களின் வயிறுகளைப் பயனைட் கத்தியால் குத்திக் கிழித்து, ஐந்த மாத, ஆறு மாதக் கருக்களை மண்ணில் தூக்கி எறிந்தனர். இந்த மிருகத்தனமான படுகொலைகள் சுட்டிக்காட்டும் உண்மை யாதெனில், தமிழர்களின் மனித உரிமைகளை, 1000 அடிக்குக் கீழே சிங்கள அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்பு நாடுகளை இரு கரங்களைக் கூப்பி வேண்டுகிறேன். இலங்கை அரசு, மனித உரிமைகளை அளித்த கொடுமையை சுதந்திரமான அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.
வாய்ப்புக்கு நன்றி.
இதன்பின், மனித உரிமை கவுன்சில் கட்டடத்தில் உள்ள 22 ஆம் எண் அரங்கத்தில், இலங்கையின் இனப்படுகொலை என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்திற்கு, இலங்கையைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஜெயபாலன் குரூஸ் தலைமை தாங்கினார்.
அந்த விவாதத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு:
அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அவர்களே, சகோதர, சகோதரிகளே,
ஈழத்தமிழர்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை மகத்தான சேவை செய்துள்ளது. நவோலியில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தின் மீது சிங்கள விமானம் குண்டுகள் வீசியதில், 168 தமிழர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட கொல்லப்பட்டு தேவாலயம் இரத்தக் களம் ஆனது.
மன்னார் மறை மாவட்டப் பாதிரியார் ஜோசப் இராயப்பா, ஈழத்தமிழர் இனப்படுகொலையை அனைத்துலகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். தலைசிறந்த பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம், கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிரவில், தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டு இருந்தபோது, அவர் துணைவியார் அருகில் இருக்க, துடிதுடிக்கச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மிக முக்கியமான ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன்.
போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும், பிரித்தானியர்களும் வருவதற்கு முன்பு, தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனித் தேசிய இனமாக, அரசு அமைத்து ஆண்டு வந்தனர். வரலாற்றைச் சரியாக ஆராய்ந்தால், இலங்கைத் தீவு முழுக்க, தமிழர்கள்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கான சான்றுகளை நான் பட்டியல் இட முடியும். பின்னர்தான் சிங்களர்கள் அங்கு வந்து குடியேறினார்கள்.
1833 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு தெரிவித்த புள்ளி விவரப்படி, 26,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு தமிழர் தாயகமாக இருந்தது.
1901 இல், ஆட்சி செய்த பிரித்தானியர்கள் மாநிலங்கள் பிரிவினை செய்தபோது, தமிழர்களின் நிலம் 7500 சதுர கிலோ மீட்டர் பரப்பு, சிங்களர்களிடம் பறிகொடுக்க நேர்ந்தது.
1948 பிப்ரவரி 4 ஆம் தேதி பிரித்தானியப் பேரரசு, சிங்களர்களின் ஆதிக்கத்தில் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கிவிட்டுச் சென்றது.
தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்பட்டன. சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. பௌத்த மதமே அரசு மதம் ஆக்கப்பட்டது. உரிமைகளுக்காக நீதிக்காக, தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் அறவழியில் காந்திய வழியில் போராடினார்கள்.
அதற்குக் கிடைத்த விடை, துப்பாக்கிச் சூடு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு.
1948 இல் இருந்து 1976 க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழர்களின் நிலங்களில் 7500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்பட்டு, இவ்வளவு நிலத்தையும் தமிழர்கள் சிங்களர்களிடம் இழந்தார்கள்.
தற்போது, 11500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்தான் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அதிலும் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. இராணுவமே குடியேற்றப்பட்டு விட்டது. 1948 இல், தமிழர்களின் மக்கள் தொகை 32 இலட்சமாக இருந்தது. சிங்களர்களின் மக்கள் தொகை 66 இலட்சமாக இருந்தது.
ஆனால், இன்று நிலைமை என்ன?
இலட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதால், இளம் வயதிலேயே தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டதால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலருக்குக் குடும்ப வாழ்க்கை அமையாததால், மொத்தத்தில் மக்கள் தொகை 35 இலட்சத்தைத் தாண்டவில்லை.
ஆனால், சிங்கள மக்கள் தொகை 1 கோடியே 50 இலட்சமாக உயர்ந்து விட்டது.
இனி சகவாழ்வு சாத்தியம் இல்லை என்றுதான், தந்தை செல்வா அவர்கள், அனைத்துத் தமிழர் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில், இறையாண்மை உள்ள சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்போம் என்று பிரகடனம் செய்தார்.
இனி இளைய தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று அறிவித்தார். அதன் உள் அர்த்தம் என்ன?
அறவழியில் இனி சாத்தியம் இல்லை; ஆயுதப் புரட்சியே சாத்தியம் என்பதை மனதில் கொண்டுதான் தந்தை செல்வா இப்படிக் கூறினார்.
கொதிக்கும் தாரில் இரண்டு தமிழ்க் குழந்தைகளைத் தூக்கிப் போட்டுச் சிங்கள போலீஸ்காரன் கொன்றான் என்ற செய்தியால்தான், 15 வயதில் நெஞ்சம் எரிமலையாக, ஆயுதப் புரட்சியைத் தொடங்கினார் நான் பூஜிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
போர்க்களங்களில் வாகை சூடினார். ஆனால், இந்திய அரசு பன்னாட்டு இராணுவ உதவியும் பெற்றுக்கொடுத்து, சிங்களவர்களின் யுத்தத்தைப் பின்னால் இருந்து இயக்கி, புலிகளைக் களத்தில் தோற்கடித்தது.
சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கப் பொது வாக்கெடுப்புதான் ஒரே மார்க்கம் என்று, ஈழத்தமிழ் உணர்வாளர்கள் உலகெங்கும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
என் வாழ்க்கையில் நான் எதையாவது சாதித்தேன் என்றால், அது இதுதான்.
2011 ஜூன் 1 ஆம் தேதி, பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியக் கட்டடத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில், தமிழ் ஈழம் அமைவதற்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; ஈழத்தமிழர் தாயகத்திலும், அகிலம் முழுவதிலும் வாழும் ஈழத்தமிழர்களிடமும், ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றேன்.
இந்தக் கருத்தை, அதுவரை தமிழ் ஈழத்தில் இருந்து எவரும் கூறியது இல்லை; தமிழ்நாட்டில் இருந்தும் எவரும் கூறியது இல்லை. இது என் ஞானமோ, மேதைத்தனமோ அல்ல. மடிந்த மாவீரர்களை மனதில் நினைத்துப் பேசினேன்.
பொது வாக்கெடுப்பின் மூலம் சுதந்திரம் பெற்ற நாடுகளின் பட்டியலைத் தருகிறேன். ஸ்காட்லாந்தில் கூடப் பொது வாக்கெடுப்பு நடக்கப் போகிறது; தனிநாடு ஆகப் போகிறது.
தமிழ் ஈழத்திற்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஆகவே, பொது வாக்கெடுப்பு நடக்கும். தமிழீழம் அமையும் என்று பேசினார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் இன்று 21-09-2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment