Friday, October 13, 2017

சீமைக்கருவேல மரங்கள் அகற்றல் வழக்கில், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் வைகோ வாதம்!

தமிழ்நாட்டில் வேலிக்காத்தான் எனப்படும சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், 2015 ஆம் ஆண்டு, வைகோ பொதுநல வழக்குத் தொடுத்து வாதாடினார்.

நீதியரசர் செல்வம், நீதியரசர் பொன்.கலையரசன் அமர்வு வழக்கை விசாரித்து, ‘சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசுத்துறையினர் அனைவரும், பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வேகமாகச் செயல்பட வேண்டும்’ என்று ஆணை பிறப்பித்தனர். மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள் சீமைக்கருவே மரங்களை அகற்றுவதை மேற்பார்வை இட்டுக் கண்காணிக்குமாறு வேண்டிக் கொண்டதோடு, 135  வழக்கறிஞர்களை கண்காணிப்புப் பார்வையாளர்களாக நியமித்தார்கள். பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்றன. ஆனால், தேசத்துரோகக் குற்றச்சாட்டு வழக்கில் வைகோ புழல் சிறையில் இருந்த காலத்தில், சென்னை ஐஐடி நிறுவனம், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தடை கேட்டு, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் தொடுத்த வழக்கில், இடைக்காலத் தடை விதித்ததோடு, எட்டுப் பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட்டது.

ஜூலை 28 ஆம் தேதியன்று வைகோ தலைமை நீதிபதி அமர்வில் ஆஜர் ஆனார். நிபுணர் குழு இடைக்கால அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதியரசர் சுந்தேரசன், நீதியரசர் சுந்தர் ஆகிய மூவர் அமர்வு, முன்னர் விதித்திருந்த தடையை நீக்கியதோடு, நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை  அகற்றுவதற்கு, அரசுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

இன்று (13.10.2017) அதே அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிபுணர் குழுவுக்குத் தலைவரான வனத்துறை தலைமைப் பாதுகாப்பாளர் (Chief Consevator of forest) நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வைகோ நீதிமன்றத்தில் கூறியதாவது:

இந்த நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையின் நகல் இதுவரை எனக்குத் தரப்படவில்லை. மாட்சிமைக்குரிய இந்த நீதிமன்றம், ஜூலை 28 ஆம் தேதியன்று பிறப்பித்த ஆணையிலேயே நிபுணர் குழுவின் முதல் அறிக்கை சொல்லப்பட்டு இருக்கின்றது. நான் வருத்தத்தோடு சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், எட்டுப் பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் வனத்துறையைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு, வனத்துறை அதிகாரிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். அவர்கள் ஜூலை 28 ஆம் தேதி தாக்கல் செய்த முதல் அறிக்கையிலேயே சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டதில் இருந்து, அவர்களுடைய அணுகுமுறை தெளிவாகத் தெரிகின்றது.

நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வனத்துறை தலைமை அதிகாரி:

சீமைக்கருவேல மரங்களை, எரிபொருளாகவும், கரியாகவும் மக்கள் பயன்படுத்துகின்றார்கள். விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இதனால் ஆபத்து இல்லை.  நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்புகின்றபோது சீமைக்கருவேல மரங்கள் அழுகி இல்லாமல் போய்விடுகின்றன.

தலைமை நீதிபதி: நிபுணர்கள் சொல்லுகின்ற கருத்துகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஆனால், நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியாக வேண்டும்.

இதற்குப் பின்னர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வைகோ கூறியதாவது:

வனத்துறை அதிகாரிகள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தருகின்றார்கள். தொடக்க காலத்தில் சீமைக் கருவேல மரங்களைப் பயன்படுத்திய மக்கள் இப்பொழுது விறகுக்கரியாகப்  பயன்படுத்துவது இல்லை. நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சி சுற்றுச்சூழலை நாசப்படுத்துகின்றது. ஆடு, மாடுகள், பறவைகள் அங்கே இருக்க முடியாது. இதுகுறித்து உலகெங்கும் நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்ற ஆய்வு முடிவுகளை நான் சேகரித்து வைத்துள்ளேன்.

நீதியரசர் சுந்தரேசன்: இந்த வழக்கு முழு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றபோது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்று கூறினார்.

வழக்கு நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் தேவதாஸ், சுப்புராஜ், நன்மாறன், பிரியகுமார், அருணன், செந்தில்செல்வன், வினோத்குமார், சங்கரன், இளங்கோவன், அரசு. கணேசன் ஆகியோர் உடன் ஆஜரானார்கள். 


என மதிமுக தலைமை நிலையம் தாயகம் செய்தி இன்று 13-10-2017 வெளியிட்டுள்ளது.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

No comments:

Post a Comment