மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று 02.10.2017 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:
திராவிட இயக்கத்தின் 101 ஆவது ஆண்டு துவக்க நாளான நவம்பர் 20, 2017 இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது என்றும், இம்மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் மாநில கட்சிகளின் தலைவர்களை அழைப்பது என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கு இம்மாநாட்டின் மூலம் செயல்திட்டங்களை வகுப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2:
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தலைமையகத்தில் 2017 செப்டம்பர் 11 முதல் 29 ஆம் தேதி வரை மனித உரிமைக் கவுன்சிலின் 36ஆவது அமர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, அபுதாபி வழியாக செப்டம்பர் 18 ஆம் தேதி ஜெனிவா சென்றடைந்தார். ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தலைமையகம் நோக்கி ஈழத்தமிழரகள் நடத்திய எழுச்சிப் பேரணியில் பங்கேற்று வைகோ அவர்கள் உரையாற்றினார்.
பின்னர் மனித உரிமைக் கவுன்சில் 36ஆவது அமர்வில் எட்டுமுறை ஈழத் தமிழர்கள் உரிமைக்காக முழங்கினார். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து ஈழத் தமிழர்கள்தான் இலங்கைத் தீவின் பூர்வக் குடிமக்கள் என்பதையும், சிங்கள இனவாத அரசு ஏவிவிட்ட அரச பயங்கரவாதத்தால் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானதையும் எடுத்துரைத்தார்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் 18 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதையும் ஐ.நா. மன்றம் 2010 இல் அமைத்த மார்சுகி தாருஸ்மென் தலைமையிலான மூவர் குழு, ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து ஆணித்தரமான ஆவணங்களுடன் கொடுத்த அறிக்கையை சுட்டிக்காட்டியும் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எடுத்தியம்பினார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் நிலைநாட்ட, தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு; அதற்காக ஐ.நா. மன்றம் பொதுவாக்கெடுப்பு ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று வைகோ அவர்கள் முழங்கினார். மேலும், ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட கொடூரத்திற்கு சுதந்திரமான அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரித்து சிங்கள கொடுங்கோல் அரசையும், முன்னாள் அதிபர் இராஜபக்சே மற்றும் இந்நாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோரை கூண்டில் ஏற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
2011 ஜூன் 1 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியக் கட்டடத்தில் நடந்த ஈழத் தமிழ் மாநாட்டில், தமிழ் ஈழம் அமைவதற்குப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஈழத்தமிழர் தாயகத்திலும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் ஐ.நா. மன்றம் பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்று முதன் முதலில் கருத்தை முன்மொழிந்தவர் கழகப் பொதுச்செயலாளர்வைகோ அவர்கள்தாம் என்பதை தமிழ்ச் சமூகம் மறந்துவிடவில்லை. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் 11 முறை உரையாற்றும்போதும், ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைப்பதற்கு பொதுவாக்கெடுப்பின் அவசியத்தை வைகோ அவர்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்.
மேலும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன் அவர்களும், ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அவர்களும் இலங்கைத் தீவுக்கு நேரடியாகச் சென்று ஈழத் தமிழ் இனப்படுகொலையை விசாரித்து, இன்றைய நிலைமையையும் கண்காணித்து அறிந்து சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில் தலைமையகத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசங்களான தமிழ் ஈழம், குர்தீஸ்தான், மேற்கு பாலஸ்தீனம், தெற்கு ஏமன் மற்றும் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்று வைகோ அவர்கள் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கோரினார். மேலும், சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் தேசிய இனங்கள்குறித்த கருத்தரங்க அமர்விலும், ஆசியாவில் மனித உரிமைகள், பற்றிய கருத்தரங்க அமர்விலும் சுயநிர்ணய உரிமை மற்றும் தன்னாட்சி குறித்து நடந்த கருத்தரங்க அமர்விலும் பன்னாட்டுப் பிரதிநிதிகளுடன் பங்கேற்ற வைகோ அவர்கள், ஈழ விடுதலைப் போராட்டங்கள் பற்றிய வரலாறுகளை பதிவு செய்தார். பொதுவாக்கெடுப்பின் தேவையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய வைகோ அவர்கள் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். குறிப்பாக மனித உரிமைகள் கவுன்சில் இயக்குநர் சூடான் நாட்டைச் சேர்ந்த ஆடம் அப்தெல் மௌலா மற்றும் குவைத் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைப் போராளியுமான அப்துல் ஹமீது தஸ்தி போன்றோருடன் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துரையாடி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஜெனிவா பயணத்தில் நிறைவாக மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் ஜோக்கின் அலெக்சாண்டர் மசா மார்டெல்லி மற்றும் துணைத் தலைவர்களான மொய்ட்சேலா, அமீர் ரமதான், சால்வா, திரிஸ்கரசிங்வி, வாலண்டின் ஜெல்வெகர் ஆகியோரை நேரில் சந்தித்து, ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டும், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் கோரிக்கை மனுக்களை அளித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அல்ராத் உசேன் அவர்கள் அலுவலகம் சென்று அவரது பார்வைக்கும் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டும், தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடூரமான சிங்கள இனவாத அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்க தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றி பெரும் வரலாற்றுக் கடமையை மேற்கொண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3:
இலங்கையிலிருந்து 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஈழத்தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்பட்டு, தங்கள் மொழி இனப் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டதையும், ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தந்தை செல்வா தலைமையில் நடத்திய அறவழிப் போராட்டங்களை சிங்கள அரசு மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கியதையும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகளை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குத் தள்ளப்பட்டு, மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியதையும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் ராஜபக்சே அரசு அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததையும் வைகோ அவர்கள் எடுத்துரைத்து ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட ஐ.நா. மன்றம் தமிழ் ஈழம் அமைவதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று வைகோ அவர்கள் முழங்கினார்கள். ஐ.நா.மன்றத்தில் ஈழத் தமிழர்களின் நியாயத்தை எடுத்துரைத்து பன்னாட்டுப் பிரதிநிதிகளின் ஆதரவை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திரட்டிய வைகோ அவர்கள் மீது சிங்கள அரசு வன்மம் கொண்டது. அதனால்தான் ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ உரையாற்றியதைப் பொறுக்க முடியாமல், கைக்கூலிகளை ஏவி தாக்க முயன்றனர்.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த சரத் வீரசேகரா உள்ளிட்ட சிங்களவர்கள் வைகோவைச் சூழ்ந்துகொண்டு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் பேசுவதை தடை செய்ய வேண்டும் என்று முயற்சித்தனர். ஐ.நா. மன்றத்திலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் வகையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை தாக்குவதற்கு கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
தீர்மானம் 4:
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது தாக்குதல் நடத்த தமிழ் இனப்படுகொலை நடத்திய முன்னாள் இராணுவத்தினர் சிலரை சிங்கள அரசு ஏவி விட்டது. இந்திய நாட்டின் குடிமகனும், 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவருமான தமிழ் தேசிய இனத்தின் தன்னேரில்லாத் தலைவர் வைகோ அவர்களை தாக்க முயன்ற சிங்கள அரசுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்காதது வருத்தத்திற்கு உரியது ஆகும்.
இனியாவது மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5:
ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கண்ணீரும், இரத்தமும் கலந்த ஈழத்தமிழர்களின் துயர வரலாற்றை எடுத்துக் கூறி நீதி கேட்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது தாக்குதல் நடத்த சிங்கள முன்னாள் இராணுவத்தினரை இலங்கை அரசு ஏவி விட்டது. சிங்கள அரசின் இச்சயலைக் கண்டித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
என மதிமுக தலைமை கழகம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 02-10-2017 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment