இந்தியா முழுவதும் மத்திய அரசின் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து 5 அச்சகங்களாக குறைக்க செப்டம்பர் 21 ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அச்சகங்களை நிரந்தரமாக மூடிவிட்டு அவற்றை மராட்டியத்தில் உள்ள நாசிக் அச்சகத்துடன் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோவை, கேரளாவில் கொரட்டி மற்றும் மைசூரு ஆகிய இடங்களில் உள்ள மூன்று மத்திய அரசு அச்சகங்களை மூடிவிடுவதன் மூலம் தென் மாநிலங்களில் இனி ஒரு அச்சகம் கூட இயங்காத நிலைமையை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி உள்ளது.
கோவையில், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1960 இல் உருவாக்கப்பட்ட மத்திய அரசு அச்சகம் 132.7 ஏக்கர் பரப்பளவில், அச்சகம், அலுவலகங்கள், பணியாளர் குடியிருப்புகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு மிக சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த அச்சகம் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் லாபம் ஈட்டும் நிறுவனமாகவே இயங்கி வருகிறது. அஞ்சல்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களின் அச்சுத் தேவைகளை நிறைவேற்றி வரும் இந்த அச்சகம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான பணி ஆணைகளை (Job Order) பெற்றிருக்கிறது. நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் நூறு பேருக்கு மேல் இங்கு பணி புரிகின்றனர்.
இந்நிலையில் கோவை அச்சகத்தை திடீரென்று இழுத்து மூடுவோம் என்று நரேந்திர மோடி அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி தருகின்றது. இங்கு பணியாற்றும் பணியாளர்களின் எதிர்காலம் குறித்த கவலை மட்டுமின்றி, சொத்துக்களையும் விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதும் வேதனை அளிக்கிறது.
கோவை மத்திய அரசு அச்சகத்துக்குச் சொந்தமான 132.7 ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துக்களை விற்பனை செய்து, மராட்டிய மாநிலத்தில் நாசிக் அச்சகத்தை நவீனப்படுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகள் அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை அடியோடு ஒழித்துக்கட்டி அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் தீவிர முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்ற மோடி அரசின் வெற்று முழக்கம் எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி பாதையில் நாடு பயணிக்கத் தொடங்கி உள்ள ஆபத்தான நிலையில், லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் மத்திய அரசு முடிவு எடுக்கக் கூடாது. கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடும் திட்டத்தை உடனடியாக மோடி அரசு கைவிட வேண்டும், பணி ஆணைகள் பெற்று உற்பத்தித் திறனில் உயர்ந்து நிற்கும் மத்திய அரசு அச்சகத்தை கோவையிலிருந்து மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் அச்சகத்துடன் இணைக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 05-10-2017 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment