தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகள் எதிர்பாராத வறட்சி, இயற்கைப் பேரிடர் காரணமாக உரிய விளைச்சலைப் பெற முடியாத வேளைகளில் பெருநட்டங்களில் இருந்து அவர்களை ஓரளவு காப்பாற்ற பயிர்க்காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தத்தமது பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு காப்பீட்டுக் கட்டணம் (Insurance Premium) செலுத்திவிடுகின்றனர்.
அவ்வாறு பயிர்க்காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய விவசாயிகள், தங்கள் நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் வறட்சி, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் உரிய விளைச்சலைப் பெற முடியாத சூழலில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பயிர்க்காப்பீட்டு நிவாரணத் தொகையினை அரசு வழங்க வேண்டும்.
கடந்த 2015-16, 2016-17 இரண்டு ஆண்டுகள் தமிழகம் எங்கும் கடுமையான வறட்சி நிலவியது. சில இடங்களில் பருவம் தப்பிப் பெய்த மழையால் பயிர்கள் மூழ்கி வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம், பாசி உள்ளிட்ட பயிறு வகைப் பயிர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித பயிர்க்காப்பீட்டு நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
‘பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்’ என்பதற்கு ஏற்ப நடப்பு ஆண்டிலும் பருவ மழையை எதிர்பார்த்து மானாவாரியில் பயிரிட்ட விவசாயிகளுக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாததால் பேரிழப்பிற்கு ஆளாகித் தவிப்பதை கிராமப்புற விவசாயிகளைச் சந்திக்கும்போது அறிய முடிகிறது.
இதன் விளைவாக விவசாயப் பெருமக்கள் மேலும் மேலும் கடனில் மூழ்கித் தவிக்கும் பரிதாப நிலைதான் உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் மானாவாரி விவசாயிகள் எவ்வித பயிர்க்காப்பீடு உதவியும் கிடைக்கப் பெறாமல் பெரும் துன்பத்தில் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தை கொள்ளை நோயாகப் பரவியுள்ள டெங்கு ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பல லட்சக்கணக்கான மானாவாரி விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக தங்களின் பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு நிவாரணம் கிடைக்கப்பெறாமல் துன்பத்தில் உழன்று வருகின்றனர்.
தமிழக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மானாவாரி பயிர் செய்து, வருவாய் இழந்த விவசாயிகளின் வேதனையை உள்வாங்கி, அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்ற 2015-16, 2016-17 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குரிய பயிர்க்காப்பீட்டு நிவாரணத் தொகையினை உடனடியாக வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.
இக்கோரிக்கையினை வலியுறுத்தி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் கோவில்பட்டி நகரில் 31.10.2017 செவ்வாய்க்கிழமை கhலை 10 மணிக்கு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயிகளும், கழகத் தோழர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் இன்று 17-10-2017 தெரிவித்துள்ளார்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment