மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தி இருக்கிறது. மாணவர்கள் விரும்பினால் அந்நிய மொழிகளை நான்காவது, ஐந்தாவது மொழியாகக் கற்றுக்கொள்ளட்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்போது, இந்தி, ஆங்கிலம் மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள இன்னொரு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும். அந்நிய மொழிகளுக்கு இடம் இல்லை என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கையில் அறிவுறுத்தி இருக்கிறது.
அந்நிய மொழிக்கு இடம் அளிக்கக்கூடாது என்ற பெயரால் சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பதற்கான நடவடிக்கை இது என்பது அப்பட்டமாகத் தெளிவாகிறது.
சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 18 ஆயிரம் பள்ளிகளில் தற்போது இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் எட்டாம் வகுப்புவரை ஜெர்மன் மொழி கற்றுத் தரப்படுகிறது.
பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், 2014 அக்டோபரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு, சமஸ்கிருதத்தைக் கற்றுத்தர வேண்டும் என்று உத்தரவிட்டார். கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும், இந்தியும் பயிற்று மொழிகளாக உள்ளன. முதல் ஐந்து வகுப்புகளுக்கு பாட மொழிகளாக ஆங்கிலமும், இந்தியும் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் அல்லது ஜெர்மன் என்று மூன்று மொழிகளும் பாட மொழிகளாக உள்ளன. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் ஆங்கிலம், இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று இரண்டு மொழிகள் பாட மொழிகளாக உள்ளன. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணிதப்பிரிவு எடுப்போருக்கு ஆங்கிலம் மட்டுமே பாடமொழி. பிற பிரிவுகளில் படிப்போருக்கு ஆங்கிலமும், இந்தியும் பாட மொழி.
இந்நிலையில்தான் மத்திய அரசு ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு, சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்த எண்ணியது. சமஸ்கிருத மொழியில் ஆர்வம் இல்லாமல், வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஜெர்மன் மொழியைப் பயில மாணவர்கள் விரும்பியதால், கேந்திர வித்யாலயாப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படாது என்று பா.ஜ.க. அரசு உத்தரவு போட்டது. நாடு முழுவதும் இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன் பிரஞ்சு மொழியை அகற்றுவதின் மூலம் சமஸ்கிருத மொழியை நேரடையாகவே திணிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே நாடு என்று இந்துத்துவாக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளிலும் பா.ஜ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில், சமஸ்கிருதத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் போக்கை பா.ஜ.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை நீக்கிவிட்டு, சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 09-10-2017 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment