Wednesday, March 25, 2015

2015-16 தமிழக நிதிநிலை அறிக்கையால் பயன் இல்லை-வைகோ!

தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களோ, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற அறிவிப்புகளோ எதுவும் இடம் பெறவில்லை. இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும், கடந்த நான்கு ஆண்டு காலமாக அறிவிக்கப்பட்டவைதான்.
தமிழகத்தில் வேளாண் மற்றும் தொழில்துறைகளின் உற்பத்தி வளர்சசி இலக்குகளை எட்டாமல், மாநிலத்தின் மொத்த வளர்ச்சி 9 விழுக்காடு அளவைத் தாண்டிவிடும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் நடப்பு ஆணடில் 2140 கோடி ரூபாய் குறையும் என்றும், மத்திய அரசின் நிதிப் பகிர்வின் மூலம் தமிழகத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அப்படியானால், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை.
காவல் துறைக்கு 5568.8 கோடி ரூபாய்; வேளாண்மைத் துறைக்கு ரூபாய் 6613 கோடி;
அதிமுக அரசு விவசாயத் துறைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் எத்தகையது என்பதைக் காட்டுகிறது.
கடந்த காலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற ஆரவார அறிவிப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை?
வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க வேளாண் இயதிரமயமாக்கும் திட்டம், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் போன்றவை வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 3500, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000 வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையிலும் எந்த அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
தஞ்சையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி முதல்வர் அறிவிக்காதது ஏன்?
மின்சாரத் தேவையை நிறைவு செய்து இருப்பதாக முதல்வர் பாராட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. மின் உற்பத்தித் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அதிக விலை கொடுத்து மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்தது சாதனையா?
செய்யாறு, உடன்குடி மின்சாரத் திட்டங்கள் நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன் என்று முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை.
பல்வேறு இலவசத் திட்டங்களுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, மின்சாரத்துறைக்கு 13,586 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்து இருப்பதன்மூலம், மின்சாரத்துறையில் தமிழகம் தன்னிறைவு அடைய வழி இல்லை.
மக்கள் நலவாழ்வுக்கு 8248 கோடி ரூபாய் ஒதுக்கீடு மிகவும் குறைவு. மொத்த ஒதுக்கீட்டில் சுகாதாரத் துறைக்கு 10 விழுக்காடு அளவு அளித்ததால்தான் பெருகி வரும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். ஆனால், வெறும் 4.52 விழுக்காடு மட்டுமே ஒதுக்கீடு செய்து உள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 31,206 கோடி ரூபாய்க்குத் தொழில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதனால் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பதையும் அரசு விளக்க வேண்டும்.
அந்நிய நிறுவனங்களான நோக்கியா, பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள தமிழ்நாட்டில் ஒற்றைச்சாளர அனுமதி மூலம் இனி தொழில்துறை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லப்படும் எனறு முதல்வர் கூறுவது எப்டி சாத்தியமாகும் என்று தெரிவிக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அதிமுக அரசு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது, மாநிலத்தின் கடன் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நான்கு ஆண்டுகளில் அரசின் கடன் 2 இலட்சத்து 11 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
இதுதான் நான்கு ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை ஆகும்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை அதிமுக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. வருமானத்திற்காக டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து வைத்துள்ள அரசு, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் தமிழக அரசின் கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு ஊழல்களும், அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளும்தான் காரணம் என்பதை உணரவில்லை.
அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment