Wednesday, March 25, 2015

இந்தி இலவசம்; தமிழ் படிக்க கட்டணமா! வைகோ காட்டம்!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுள் 60 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து 150 ஆண்டுகளாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். வெள்ளையர்களின் நிறவெறிக் கொடுமையை எதிர்த்து அண்ணல் காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் சத்யாகிரகப் போராட்டங்களை நடத்தியபோது தமிழ் மக்கள்தான் காந்தி அடிகளுக்குப் பெரும் துணையாக இருந்தனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் காந்தியார் நடத்திய சத்யாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற நேரத்தில், தமிழர்களின் போராட்டம் இன்னமும் அங்கு தொடர்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தி மொழியை இலவசமாகக் கற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், 2008 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மொழி இலவசமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததை நிறுத்திவிட்டு, இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது.
இந்தியாவையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட தேசிய இனங்களின் தாய் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் இந்தித் திணிப்பு மூலம் அழிக்கும் முயற்சியில் மோடி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு தமிழுக்குச் செம்மொழி சிறப்பை அளித்துள்ள இந்திய அரசு, தமிழ் மொழியை வளர்க்கவோ, உலகப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்கி ஆராய்ச்சிப் பணிகள் பெருகிடவோ சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. இந்நிலையில், மோடி அரசின் அதிகார மமதையின் காரணமாக, இந்திய அரசின் செலவில் தூதரகங்கள் மூலம் வெளிநாடுகளில் இந்தி மொழியை மட்டும் கற்றுத்தரத் திட்டமிட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் பன்முகத் தன்மைகளுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதற்கு தென் ஆப்பிரிக்காவில் இந்தித் திணிப்பும் ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
உலகில் தொன்மைச் சிறப்பும், இலக்கிய இலக்கண வளமையும் நிரம்பிய தமிழ் மொழியை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் கற்றுத் தேர்ந்து தமிழ் மொழியின் சிறப்பைப் பேணிப் பாதுகாத்திட, தமிழ்நாட்டை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளுமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை தருகிறது.
தமிழக அரசின் அலட்சியத்தால், மத்திய அரசு தமிழ்மொழியின்பால் பாராமுகமாக இருப்பது மட்டும் அன்றி, தூதரகங்கள் மூலம் வலிந்து இந்தியைத் திணிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய மொழி கற்பித்தலில் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் தமிழ்மொழியைக் கற்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ 
சென்னை - 8 பொதுச்செயலாளர்,

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment