Saturday, March 7, 2015

வக்கரித்த கருத்துப்படம்! வாழ்க தினமலர்! வைகோ கடிதம்!

 

இமைப்பொழுதும் நீங்காது, என் இதயத் துடிப்போடும், இரத்தச் சுழற்சியோடும், கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!

நான் எழுதும் இந்தக் கடிதம், வழக்கத்தில் இருந்து மாறுபட்ட ஒரு மடல் ஆகும்.

அவதூறுகள், இழிமொழிகள், இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட பழிச்சொற்கள், எள்ளி நகையாடும் ஏளனங்கள், இவற்றை எல்லாம் கடந்த பல ஆண்டுகளாக என் இருதயத்தில் தாங்கித் தாங்கி, சில வேளைகளில் அதற்காக வேதனைப்படுவதும், மன உளைச்சலுக்கு ஆளாவதும் பழகிப் போய் விட்டது. ஒருவகையில் அது என் உள்ளத்திற்கு உரமாகி விட்டது. ஏன், என்னைப் பக்குவப்படுத்தி வருகின்றது என்றுகூடச் சொல்லுவேன். அவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு என் பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடர்கின்றேன்.
உலகத்துக்கே பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

என்று கருத்தைப் பொதுவாகச் சொன்னார்.
வெட்டிக் குடைந்து தன்னைத் துகள் துகளாகச் சிதைக்கவும் முற்பட்டுவிட்ட மனிதனையும் அந்த நிலம் தாங்கி நிற்பதைப் போல, தம்மை இகழ்வோரையும் பொறுத்துக் கொள்வதே தலையாய பண்பு என்ற செந்நாப்போதாரின் மறைமொழி, காயப்படுகின்ற மனதுக்கு மருந்தாக அமைகின்றது.
1962 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தி, அந்த சகாப்த நாயகனின் தாயாரை மிகவும் கேவலமாகச் சித்தரித்து இழி மொழிகள் எழுதி ஒரு விளம்பரத் தட்டி வைத்தனர். கழகத் தோழர் கள் எரிமலையாய்க் கொதித்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களை எல்லாம் கட்டுப்படுத்தி விட்டு, அந்த விளம்பரத் தட்டியை இரவிலும் அனைவரும் படிக்கும் வண்ணம் பக்கத்தில் ஒரு பெட்ரோமாக்Þ விளக்கை வைத்து, அதற்குக் கீழே உபயம்- திராவிட முன்னேற்றக் கழகம் என்று எழுதி வைக்கச் சொன்னார். அந்தக் காஞ்சித் தலைவனின் பட்டறை வார்ப்பு நான். அதனால் என்னை இகழ்வதை நான் பொறுத்துக் கொள்வேன்.
ஆனால், என்னை முன்னிறுத்தி, பிறரையும், தகுதி மிக்கோரையும், கள்ளம் கபடம் அற்ற பொதுமக்களையும் இழிவு படுத்துவதைத் தாங்கிக் கொள்ள இயலாது. அதனால்தான் எந்நாளும் இல்லாத வகையில் இந்தக் கடிதத்தைத் தருகிறேன்.
என்ன புதிர் போடுகிறாய்? எதற்கு இந்தப் பீடிகை? என்ற எண்ணம், இந்த வரிகளை வாசிக்கும்போது உங்கள் மனதில் துள்ளி எழும்.
காரணத்தோடுதான் சொல்லப் போகிறேன்.
மார்ச் ஒன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணி விமானத்தில் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணியின் அமைப்பாளர் மேதா பட்கர் அம்மையார் அவர்களுடன் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மதுரைக்குச் சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் சென்னைப் பதிப்பு தினமலர் நாளேட்டின் இரண்டாவது பக்கத்தில், என்னைப் பற்றி வண்ணத்தில் பிரசுரமாகி இருந்த நான்கு கருத்துப் படங்களைக் கண்டேன். அதன் ஒவ்வொரு சொல்லையும் ஆழமாக யோசித்தேன். ஓரிரு நிமிடங்கள் வருத்தமாக இருந்தது.
ஆனால், இதுபோன்ற நச்சுக் கணைகள் ஏற்கனவே என் இதயத்தில் ஏராளமாகத் தைத்து இருப்பதால் மரத்துப் போய்விட்ட மனம், ‘இதுதான் நீ தேர்ந்து எடுத்துக் கொண்ட பொது வாழ்க்கை; ஏன் அலட்டிக் கொள்கிறாய்? அலட்சியப்படுத்து; ஆக வேண்டிய வேலைகளைப் பார்’ என்று உத்தரவிட்டது.
மதுரையில் அம்மையாருடன் செய்தி யாளர்களைச் சந்தித்து விட்டு, நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரத்தை செக்கானூரணியில் தொடங்கினோம். காலையில் இருந்து மாலை வரையிலும், போடி பொட்டிப்புரம் தேவாரம் வரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகத் தாய்மார்கள், விவசாயிகளைச் சந்தித்து, நியூட்ரினோ எதிர்ப்புக் கருத்துப் பரப்புரை செய்துவிட்டு, மேதா பட்கர் அம்மையார் அவர்களை இரவு பத்து மணி விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டுக் கலிங்கப்பட்டிக்குச் சென்றேன்.
பொழுது புலர்ந்தது முதல், ஆத்திரமும் வேதனையும் கொப்பளிக்கத் தோழர்கள் பலரும், என் மீது நல்லெண்ணம் கொண்டோ ரும் தொலைபேசியிலும் அலை பேசியிலும் தொடர்பு கொண்டு, தினமலர் கருத்துப்படம் குறித்து ஆவேசத்தைக் கொட்டினர்.
அவர்களை அமைதிப் படுத்தினேன்.
‘21 ஆண்டுகளாக இப்படித்தான் எங்களைக் கட்டிப் போடுகின்றீர்கள் என்று குமுறினார்கள்.
‘தமிழக அரசியலில் இதுவரையிலும் நாம் கட்டிக் காப்பாற்றி வந்து இருக்கின்ற கண்ணியம், எள் அளவும் வன்முறைக்கு இடம் தராத அணுகுமுறைகள், கடைப் பிடித்து வந்த பொறுமை, இவை எல்லாம் மக்கள் மத்தியில் நம் இயக்கத்திற்கு நன் மதிப்பையே ஈட்டித் தந்து இருக்கின்றது’ என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர் களைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
ஆனால் இன்றும் கழகத் தோழர்கள் பெரும்பாலோருக்கு இந்தச் செய்தி இதுவரை தெரியாது. எப்படியும் சில நாள்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தோழர் களுக்கும் தெரியத்தான் போகிறது.
‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்தேன்.
என்னைப் பற்றி அற்புதமான படப் பிடிப்பாக வெளியான தினமலர் கார்ட்டூன்களை, நமது சங்கொலியின் முதல் பக்கத்திலேயே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இதைச் சொன்னபோது தம்பி ருத்திரன் வெலவெலத்துப் போனார். ‘நமது ஏட்டில் இதை எப்படிப் போடுவது?’ என்றார். ‘இல்லை ருத்ரன். இதுபற்றி ஆழமாக யோசித்துத்தான் இந்த முடிவு’ என்றேன்.
தம்பி அருணகிரிநாதன் ஒரு வேளை மறுக்கக் கூடும் என்று எண்ணினேன். நான் சொல்லச் சொல்லக் கணினியில் தட்டச்சு செய்யும் எனது செயலாளர், இதற்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. ‘இதுதான் சரியான அணுகுமுறை’ என்றார்.
இப்பொழுது கருத்துப்படங்களை உற்றுக் கவனியுங்கள்.
தேள் கடி 4
காசேதான் கடவுளடா என்ற சித்தம் படைத்த வரின் கரம்தான் இந்தக் கருத்துப்படத்தை வரைந்து இருக்கின்றது. அதனால்தான் ‘ரயில் டிக்கட் எடுத்தால் போதும்’ என்று தலைப்புக் கொடுத்து இருக்கின்றார்.
நான்காவது கார்ட்டூனில், அவர் என்னைப் பற்றி வருணிக்கும் வார்த்தைகள் இதோ:
ஐயா, உங்களுக்குப் புசாரேகிட்ட இருந்து போன்.. ஏதோ போராட்டமாம்.. உங்களைக் கூப்பிடுறாரு’
குளியல் அறையில் நான் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, குவளையில் தண்ணீரை மொண்டு மேனியில் ஊற்றும் நேரத்தில், நம் தோழர்கள் அவசரமாக இப்படிச் சொல்லுவது போல ஒரு படம். அதற்கு நான் ‘ரயிலுக்கு டிக்கட்டு எடுத்துக் கொடுப்பீங்களான்னு கேட்டுச் சொல்லு. ஓ.கே.ன்னா போயிடலாம்’ என்கிறேனாம்.
என் 50 ஆண்டுக்காலப் பொது வாழ்வில், எவராலும், எந்தச் சக்தியாலும் ஊடுருவ முடியாத, அணு அளவும் சிதைக்க முடியாத வாறு என்னைப் பாதுகாக்கும் கவசம் என்பதே எனது நேர்மை ஒன்றுதான். மாற்றாரும் மறுக்க முடியாத நாணயம் ஒன்று தான். அதன்மீதுதான் இந்தக் கார்ட்டூன் கொடுக்கால் கொட்டுகிறது.
வழிச்செலவை அனுப்பி வைத்து நிகழ்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் என்பதுதான் பெரும்பாலும் நடைமுறை வழக்கமாக இருந்த காலம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் 30 ஆண்டுகள் நான் இயங்கிய போதும், வழிச்செலவு அனுப்புங்கள் என்று நான் எவரிடமும் கேட்டதும் இல்லை, சொன்னதும் இல்லை, கடிதம் எழுதியதும் இல்லை.
சில இடங்களில் அவர்கள் அன்பாகக் கொடுக்கின்ற வழிச் செலவுத்தொகை எவ்வளவு என்று நான் எண்ணிப் பார்த்ததே கிடையாது என்பது கழகத்தினர் அனைவரும் அறிந்ததாகும். பல நேரங்களில் எனக்கு வழிச்செலவு கொடுத்தது கிடையாது. அதற்காக நான் முகம் சுழித்ததும் இல்லை. அன்பாகப் பேசிச் சிரித்துக் கொண்டே அடுத்த ஊருக்கு என் பயணத்தைத் தொடர்ந்து செல்வேன்.
ஈழத்தமிழர்களின் துன்ப துயரங்களில் இருந்து அவர்களுக்கு ஒரு விடியலைக் காண வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்ற என்னை, வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோதும், என் சொந்தப் பணத்தில் விமான டிக்கட் வாங்கித்தான் போய் வருகின்றேன். அவர்களிடம் வழிச்செலவு வாங்குவது இல்லை. ஏன், 2011 மே 30,31, ஜூன் 1 ஆம் நாள், பெல்ஜியம் நாட்டின் தலை நகர் பிரஸல் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டுக்காகத் தங்கி இருந்த விடுதிக் கட்டணத்தைக் கூட நான்தான் செலுத்தினேன் என்பதை, புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவருமே அறிவார்கள்.
ஏதோ ஒரு போராட்டத்துக்கு அன்னா ஹசாரே உங்களை அழைக்கிறார் என்ற வாசகங்களில் தான் தேள் கொடுக்கின் விஷம் பரவி உள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே எந்த அரசும் செய்யத் துணியாத அக்கிரமத்தை இன்றைய நரேந்திர மோடி அரசு செய்ய முனைந்து, விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களின் நிலங்களை, அக்கிரமமாகப் பறித்து கார்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கும் திட்டத்தோடு கொண்டு வந்துள்ள, நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை எதிர்த்து, மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கர் அவர்கள், நாடு தழுவிய மாபெரும் அறப்போரை, பிப்ரவரி 24 ஆம் நாளன்று, புது தில்லியில், நாடாளுமன்ற வீதியில் நடத்து வதாக அறிவித்து இருந்தார்.
பிப்ரவரி 8 ஆம் தேதி நடுநிசி கடந்து அதிகாலை இரண்டரை மணி அளவில், மேதா பட்கர் அம்மையார் அவர்களை சென்னை விமான நிலையத்தில் நான் வரவேற்ற போது, ‘பிப்ரவரி 24 ஆம் தேதி டெல்லி போராட்டத்திற்கு நான் அவசியம் வர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்டு, மறு நாள் நான் அறிக்கை விடுத்தேன். கழகத் தோழர்கள், விவசாயிகள் என ஏறத்தாழ 1000 பேர் டெல்லிப் போராட்டத்திற்குத் தங்கள் கைக்காசைச் செலவழித்து வந்தனர்.
பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், பிற்பகல் இரண்டு மணி தொடங்கி, நான்கரை மணி வரை நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக எனது ரிட் மனு மீது வாதங்களை எடுத்து வைத்து விட்டு, மாலை விமானத்தைப் பிடித்துச் சென்னைக்கு வந்து நள்ளிரவு கடந்த பின் புது தில்லி போய்ச் சேர்ந்தேன்.
ஜந்தர் மந்தரில் தனி மேடை அமைத்துப் போராடிக் கொண்டு இருந்த அன்னா ஹசாரே, மேதா பட்கர் அவர்கள் அமைத்து இருந்த போராட்ட மேடைக்கு வந்தார். ஏற்கனவே அந்த மேடையில் அமர்ந்து இருந்த எனக்கு அருகில் அவரை அழைத்துக் கொண்டு வந்து அமரச் செய்தனர்.
கோடானுகோடி மக்களின் குறிப்பாக விவசாயிகளின் உரிமையைக் காக்க நடைபெற்ற போராட்டத்தில் பங்கு ஏற்றதை, இவ்வளவு கீழ்த்தரமாக கார்ட்டூனிÞட் கொச்சைப்படுத்தியதில் இருந்து, இந்தக் கார்ட்டூன்காரர் என் மீது எவ்வளவு துவேசமும், வெறுப்பும் கொண்டு இருக்கிறார் என்பதை உணரலாம்.
நாட்டுக்காக, விவசாயிகளுக்காக நடத்தப் பட்ட போராட்டத்தில் இந்த எளியவனும், தோழர்களும் டெல்லிக்குப் பயணித்து அறப் போரில் கலந்து கொண்டதை செய்தியாக வெளியிட தினமலருக்கு மனம் இல்லை. அதற்காக அவர்களை நான் குறை சொல்ல வில்லை. அது அவர்கள் பத்திரிகை; அவர்கள் விருப்பம்.
ஆனால் இவன் போராடுகிறானே, கைக் காசைச் செலவழித்து ஆயிரம் பேர் இவனோடு செல்லுகின்றார்களே என்ற பொச்சரிப்பில், தன் கைவிரல்களைத் தேளின் கொடுக்காக்கி விட்டார்.
வாழ்க அந்த கார்ட்டூனிÞட்!
ரயில் டிக்கெட் எடுத்தா போதும் என்று தலைப்புத் தருகின்ற எண்ணம் எதனால் ஏற்பட்டு இருக்கின்றது தெரியுமா?
எச்சில் காசைக் கைநீட்டி வாங்கு கின்ற பழக்கம் இருந்தால்தான் இப்படி ஒரு தலைப்பை யோசித்து இருக்க முடியும்.
தேள்கடி 1
‘எப்பா ஜோசியக்காரரே... நல்லா பாத்து சொல்லுப்பா.. இன்னிக்கு நான் பின்லேடன், ஹிட்லர், சதாம் உசேன், முசோலினியைப் பார்க்கணும்... அரசியல் ரீதியா நல்லா இருக்குமான்னு பாத்து சொல்லு...
சிறந்த முறையில் கைரேகை பார்க்கும் இடத்தில் அடியேன் இப்படிக் கேட்கிறேனாம். அதற்கு அந்தக் கைரேகைக்காரர் என்ன சொல்லுகிறார் தெரியுமா?
‘ஐயா நான் சொல்றேன்னு தப்பா நினைக்கா தீங்க..
நீங்க ஜோசியம் பார்க்கிறதைவிட நல்ல டாக்டரா பார்க்கிறதுதான் இப்போதைக்கு நல்லது.’
என் இனிய சகாக்களே,
பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று, புது தில்லி அறப்போரில் கலந்து கொண்டபின், மாலை ஐந்து மணிக்கு, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நான் சந்திப்பதற்கு ஐந்து மணிக்கு நேரம் ஒதுக்கி இருந்தார். நான் 4.50 க்கே சென்று விட்டேன்.
என்ன இன்ப அதிர்ச்சி தெரியுமா?
பத்து ஆண்டுகள் நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த அந்தத் தலைவர், போர்ட்டி கோவில் நான் காரை விட்டு இறங்கியவுடன் என் கைகளைப் பற்றிக் கொண்டு, வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் அவருடன் உரையாடினேன்.
அவரது ஆட்சிக் காலத்தில் மிகக் கடுமையாக அவரது அரசை நான் சாடிய போதிலும், மக்கள் பிரச்சினைகளுக்காக அவருடன் நான் பேச முனைந்தபோதெல்லாம் தொலை பேசியில் அவர் பேசிய பண்பாட்டையும், ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கும் போதும் அவர் என்னிடம் காட்டுகின்ற எல்லை கடந்த பரிவையும், அன்பையும், மதிப்பையும் நான் நினைவுகூர்ந்து சொன்னேன்.
2005 செப்டம்பர் 3 ஆம் நாள் சென்னையில், எனது சிறையில் விரிந்த மடல்கள், From the portals of a prison என்ற ஆங்கில நூலை அவர் வெளியிட்டு ஆற்றிய உரையில், என் தகுதிக்கு மீறி என்னை அவர் புகழ்ந்ததை நான் சொல்லத் தொடங்கியபோது இடை மறித்து, வழக்கமாக அதிகம் பேசுகின்ற இயல்பு இல்லாத டாக்டர் மன்மோகன்சிங், அந்த நாளில் அவர் பேசிய வார்த்தைகளை அப்படியே திருப்பிச் சொன்னபோது நான் திடுக்கிட்டுப் போனேன். அதன் பின்னர் அவர் பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கின்றார்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத ஒரு சாமானியன். அன்றைக்குச் சொன்னதை இப்போது திருப்பிச் சொல்லுகிறார்:
‘இந்த மேடையில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்; அவர்களுள் ஜொலிக்கும் நட்சத்திரமாக வைகோ திகழ்கிறார்; என்னை அவர் சந்திக்கும் போதெல்லாம், பொதுப் பிரச்சினைகளை தமிழகப் பிரச்சினைகளை, தமிழர் பிரச்சினைகளைத்தான் எடுத்துக் கூறுவார். தனக்காகவோ, அல்லது தனிப்பட்ட வேறு யாருக்காகவோ ஒருக்காலும் என்னிடம் பேசியது இல்லை. I salute Vaiko; வைகோவுக்கு நான் சல்யூட் வைக்கிறேன்’
என்று அன்றைக்குச் சொன்னதை, அப்படியே அவர் திருப்பிச் சொன்ன போது, அன்று அவர் பேசியது அவரது இருதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தது என்பதை நன்றாக உணர்ந்தேன்.
அவருடன் பல செய்திகளை, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டேன். ஒருவேளை இந்த எளியவன் எனது சாமானியப் பொது வாழ்வைப் பற்றி சுயசரிதையாக எழுத நேர்ந்தால், தவறாமல் அவற்றைக் குறிப்பிடுவேன்.
அங்கிருந்து ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் வீட்டுக்குச் சென்றேன். பல ஆண்டுகளாக மிகுந்த நேசத்தோடு பழகி வருகின்ற நல்ல நண்பர். சமூக நீதிக்காக அவரும் நானும் பலமுறை நாடாளு மன்றத்தில் சேர்ந்து முழங்கியதை அவரே நினைவு கூர்ந்தார். தந்தை பெரியார் அவர்கள் மீது, திராவிட இயக்கத்தின் மீது அளவற்ற மதிப்புக் கொண்டுள்ள அவர், அண்மைக் காலங்களில் திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து மிகுந்த கவலையோடு பேசினார்.
வரலாற்றில் அழியாத் தடம் பதித்த, பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு, தூக்கில் இடப்பட்ட தியாகத் திருநாளான மார்ச் 23 ஆம் நாளன்று, பகத்சிங், சுகதேவ், ராஜகுருவுக்காக, காங்கிரÞ மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து விண்முட்டும் புகழ் படைத்த மாபெரும் தலைவர் நேதாஜி அவர்களைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, நேதாஜியின் புகழ் ஒளி என்ற தலைப்பில் டெல்லி ராமகிருஷ்ண புரத்தில் உள்ள தமிழ்ச்சங்கக் கட்டட அரங்கில், நேதாஜி இயக்கத்தின் சார்பில் எனது தலைமையில் நடைபெற இருக்கும் கருத்து அரங்கத்தில் பங்கேற்க அழைத்ததை சரத் யாதவ் அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். கலந்து கொள்வதாக ஒப்புதல் தந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு, மூன்று தமிழர்கள் மென்னியை முறிக்கக் காத்திருந்த தூக்குக் கயிறை அறுத்து எறிய சென்னை உயர்நீதி மன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும் உன்னதமான வாதங்களை முன்வைத்து, அம்மூவர் உயிர்களைக் காப்பாற்றிக் கொடுத் தாரே, தமிழர்களின் நன்றிக்குரிய தலைசிறந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். மார்ச் 23 ஆம் தேதி நிகழ்ச்சிக்குத் தவறாமல் வருவதாக அவரும் இசைவு அளித்தார்.
பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு, புதுதில்லி குர்காவ்ன் சாலை அருகே அமைந்துள்ள சகுந்தலா பண்ணை வீட்டில், ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அவர்களைச் சந்தித்தேன். மறுநாள் அவரது அருமை மகள் லட்சுமிக்குத் திருமணம். ஏராளமானோர் காத்து இருந்தனர். ஆனால், இந்த எளியவனைக் கட்டித் தழுவி வரவேற்ற லல்லு பிரசாத் யாதவ் அவர்கள், அனை வரும் பார்வையாளர்கள் அரங்கில் காத்திருக்க, என்னை மட்டும் தோளில் கை போட்டவாறு, அங்கிருந்து 300 அடி தூரத்தில் உள்ள தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
கிருஷ்ணனின் சிலையை வைத்துப் பூசைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. தன் துணைவியார் ராப்ரிதேவி அம்மையாரை அழைத்தார். ‘யார் தெரியுமா? தமிழ்நாட்டில் உள்ள போராளியான ஒரு தலைவர். ஆண்டுதோறும் தீபாவளி பட்டாசுகளை (17 ஆண்டுகளாக) நமக்கு ஒருவர் அனுப்பு கின்றாரே, அவர்தான் இவர்; வைகோ’ என்று அறிமுகம் செய்தார்.
அந்த அம்மையார் மிகுந்த மரியாதையோடு எனக்கு வணக்கம் தெரிவித்தார். அதன் பின்னர், மணப்பெண்ணான தன் மகளை உரத்த குரலில் அழைத்தார். அருகில் வந்ததும் என்னைத் தாள் பணிந்து வணங்கச் சொல்லி ஆசி பெறக் கூறினார். மனம் நெகிந்த வனாக நான் வாழ்த்தினேன். குடும்பத்தினர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவ ரோடும் சேர்ந்து என்னுடன் படம் எடுத்துக் கொண்டனர். நேதாஜி புகழ் விழா நிகழ்ச்சியில் தானும் பங்கேற்பதாக ஒப்புதல் கொடுத்தார்.
பிப்ரவரி 25 ஆம் தேதி பிற்பகல் நான்கு மணிக்கு டெல்லி மாநில முதல் அமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களை, அவரது அலுவலக அறையில் சந்தித்தேன். 40 நிமிடங்கள் மனம் விட்டுப் பேசிக்கொண்டு இருந்தோம்.
‘என் மேடைக்கு கெஜ்ரிவால் வரக்கூடாது; தரையில் வேண்டுமானால் தொண்டர்களோடு உட்கார்ந்து கொள்ளலாம்’ என்று அன்னா ஹசாரே அறிவித்த பின்னர், வேறு யாராக இருந்தாலும் அந்தக் கூட்டத்திற்கு வர முனைந்து இருக்க மாட்டார்கள். உங்களுக்குத் தன் முனைப்பு (ஈகோ) இல்லாததால் அங்கே வந்து தரையில் அமர்ந்தீர்கள். அதனால் உங்கள் மதிப்பு மேலும் உயர்ந்தது. தேர்தல்களில் நீங்கள் வெல்லலாம்; அல்லது தோற்கலாம். ஆனால், உங்கள் எளிமையும் நேர்மையும் பொது வாழ்வில் உங்களுக்குத் தோல்வியைத் தராது. உங்கள் அரசியல் வெற்றிக்குக் காரணம் நீங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட உங்கள் மனைவிதான் என்று கூறியது, மக்கள் மத்தியில் உங்களுக்குப் பெரும் மதிப்பைத் தந்து இருக்கின்றது. ஒரு நல்ல குடும்ப வாழ்வை நடத்து கின்றவர் என்பது அரசியல்வாதிக்கு மதிப்பைத் தருகின்ற செய்தி ஆகும்.
இதோ ஈழத்தமிழர் இனக்கொலை; இதயத்தில் இரத்தம் என்ற இந்தக் குறுந்தட்டை, நீங்களும் உங்கள் துணைவியாரும், உங்கள் குடும்பத் தினரும் அவசியம் பார்க்க வேண்டும். இதைப் பார்த்தால் நீங்கள் நிச்சயம் கண்ணீர் சிந்தி அழ நேரிடும். இந்தியில் வெளியிட்ட குறுந்ததட்டு களை உங்கள் நண்பர்களிடமும், ஆம் ஆத்மி கட்சிக்காரர்களிடமும் தாருங்கள். ஈழத்தமிழர் களின் மரண வேதனை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று கூறியபோது, அவசியம் பார்க்கிறேன்’ என்றார்.
நேதாஜி விழாவுக்கு அழைத்த போது, முதலில் ஒப்புதல் தந்த அவர், மார்ச் 23 இல், பஞ்சாப் மாநிலத்தில் பகத்சிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்வதால் தான் வர இயலாததைக் கூறினார். யாரெல்லாம் கலந்து கொள் கிறார்கள் என்று நான் கூறியவுடன், ‘இதில் ஆம் ஆத்மி பங்கேற்றால் கூட்டணி குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு அது வழி வகுக்குமே?’ என்று தயங்கினார்.
‘உங்களுக்கு சிறு சங்கடத்தைக் கூட நான் ஏற்படுத்த மாட்டேன்’ என்றேன். ‘டெல்லிக்கு வரும் போதெல்லாம் நீங்கள் என்னைச் சந்திக்க வேண்டும்’ என்றார். ‘அவசியம் சந்திக்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது. நீங்கள் ஒரு நல்ல மனிதர். உங்களை ஊக்கப்படுத்த வருகிறேன்’ என்றேன்.
அவரது கூடுதல் செயலாளராக இருக்கின்ற வசந்தகுமார் ஐ.ஏ.எÞ. என்னைச் சந்தித்து, ‘முதல் அமைச்சர் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டதால் இப்பணியில் சேர்ந்தேன்’ என்றார்.
நான் வெளியே வந்தபோது செய்தியாளர்கள் என்னிடம், ‘ஆம் ஆத்மியுடன் கூட்டணியா?’ என்றனர். அதுபற்றி நான் சிந்திக்கவே இல்லை. ‘தேர்தல் வெற்றிக்காக நான் தொலைபேசியில் வாழ்த்துக் கூறியபோது, அவர் என்னைச் சந்திக்க விரும்பினார். அதனால் சந்தித்தேன்’ என்றேன்.
26 ஆம் தேதி காலை 8.30 மணிக் கெல்லாம் பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் தேவவிரத பிÞவாÞ அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். நேதாஜி குறித்து ஒன்றரை மணி நேரம் விரிவாக உரையாடினோம். ஈழத்தமிழர் களுக்காக 2009 பிப்ரவரியில் தில்லியில் எனது தலைமையில் நடைபெற்ற உண்ணா விரத அறப்போரில், பிÞவாÞ அவர்கள் ஆற்றிய உணர்ச்சிகரமான உரையை நான் நினைவுகூர்ந்தேன். மார்ச் 23 ஆம் தேதி நேதாஜி புகழ் விழா கருத்து அரங்கில் தான் கலந்து கொள்வதாகவும், தொடக்கத் திலேயே உரையாற்றி விட்டு, அன்று இரவு விமானத்தில் அடுத்த நாள் நிகழ்ச்சிக்காக விமான நிலையம் செல்வதாகவும் கூறினார்.
சமூக நீதிக்காகவும், விவசாயிகளுக்காகவும் வாழ்நாள் எல்லாம் போராடி வந்த இந்திய தேசிய லோக்தளத் தலைவர் ஓம்பிரகாஷ் சௌடாலா அடைக்கப்பட்டுள்ள திகார் சிறைக்குச் சென்று நேர்காணலில் சந்திக்க அவரது பேரப்பிள்ளைகள் என்னை அழைத்துச் சென்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே அவரைத் திகார் சிறையில் சந்திக்க அன்றைய உள்துறை அமைச் சரிடமும், தில்லி துணை நிலை ஆளுநரிடமும் நான் விண்ணப்பித்தும் எனக்கு அனுமதி தரப்படவில்லை.
நான் நடத்திய பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் அவர். 3000 ஆசிரியர்கள் நியமனத்தில், தனக்கும் கட்சிக்கும் வேண்டியவர்களை நியமித்தார் என்ற குற்றச் சாட்டில் பத்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் வாடுகிறார். அவர் சரியாக நடக்க முடியாதவர். உதவியாளர் துணை இன்றி இயங்க முடியாது. தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோது, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வருகையை முன்னிட்டு, மருத்துவமனை தனி வார்டில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, மருத்துவமனை ஒபாமாவுக்காகத் தயாராக வைக்கப்பட்டது. அதனால் சௌடாலா அவர்களும் மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அவரைச் சந்திக்க நான் திகார் சிறைக்கு முதல்முதலாகச் செல்லுகிறேன். கைதியாக அல்ல; பார்வையாளனாக!
அங்கே ஒரு ஆச்சரியம் இருந்தது. திகாரின் எட்டுச் சிறைகளையும் பாதுகாக்கின்றவர்கள் யார் தெரியுமா?
தமிழ்நாடு சிறப்புக் காவல் பிரிவின் 1500 காவலர்கள். அனைவருமே நமது தமிழர்கள் தான். என்னைப் பார்த்த மாத்திரத்தில், ஓடோடி வந்து என்னைச் சூழ்ந்து கொண் டார்கள். என் தலைமையில் திருமணம் ஆன எங்கள் ஊராட்சியைச் சேர்ந்த குருநாதனுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. சிறை அதிகாரிகள் என்னை மிக மரியாதையாக நடத்தினார்கள்.
ஓம் பிரகாஷ் சௌடாலா இந்தத் துன்பத் திலும் மனம் கலங்காத திட சித்தத்தோடு என் கைகளைப் பற்றிக் கொண்டார். நெஞ்சம் தழுதழுக்க நன்றி சொன்னார். நெருக்கடி நிலை காலத்தில் அவரது தந்தையார் தேவிலால் அவர்களும், அவரும் அவரது சகோதரரும் 18 மாதங்கள் மிசா கைதிகளாக இருந்ததைக் குறிப்பிட்டார். தற்போதும் சௌடாலா அவர்களும், அவரது மகனும் சிறையில் இருக்கின்றார்கள். ஈழத்தமிழர் படுகொலை குறித்து இந்தியில் வெளியிட்ட புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். அவசியம் அதைப் படிப்பேன் என்றார். ‘மேல் முறையீட்டில் நீதி கிடைக்கும்; நீங்கள் விடுதலையாவீர்கள். அதன்பிறகு நீங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு ஹரியாணாவுக்கு வருகிறேன்’ என்றேன்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் பேரனுக்கும், லல்லு பிரசாத் யாதவ் அவர்களின் மகளுக்கும் அன்று இரவு நடைபெற இருக்கும் திருமணத்தில், தனது பிரதிநிதியாக மண மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு என்னிடம் கூறினார். ‘அவ்விதமே செய்வேன்’ என்றேன். திருமணம் ஆகப் போகின்ற மணமக்களுக்காக மல்லிகைப் பூ மாலைகள் சென்னையில் தயாரிக்கப்பட்டு, அன்று காலையில்தான் தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கொண்டு வந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அசோகா ஓட்டலில் திருமணம். அங்கு சென்றேன். மணமக்களிடம் மலர்மாலை களைத் தந்து வாழ்த்தினேன். மறுநாள் காலை விமானத்தில் சென்னைக்குப் பயணமானேன்.
இப்படித் தில்லியில் நான் சந்தித்த தலைவர் களைத்தான் ஒசாமா பின்லேடன், அடால்ப் ஹிட்லர், சதாம் உசேன், பெனிட்டோ முசோலினி என்று வருணிக்கின்றார் தினமலரின் கார்ட்டூனிÞட். புத்தி வக்கரித்துப் போன இந்த மனிதர்தான் ‘ஜோசியம் பார்ப்பதைவிட நல்ல டாக்டரைப் போய்ப் பார்ப்பது நல்லது’ என்று சொல்லுகிறார். கருத்துக் குருடனாக இருந்து கொண்டு இந்தக் கருத்துப்படத்துக்கு யோசனை தந்த ஆசாமிதான் மனநல மருத்துவ மனைக்கு அனுப்பப்பட வேண்டிய நபர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?
தேள்கடி 2
‘என்ன தலைவரு வரவர ரொம்ப மோசமாயிட்டாரே.. ஆடு மாடுகளை எல்லாம் கூட்டி வச்சுப் பேசிகிட்டு இருக்காரு? என்று கட்சித் தோழர்களே வருத்தப்பட்டுப் பேசிக் கொள்கிறார்களாம். உடனே, அவர் என்ன பண்ணுவாரு பாவம்.. அவர் பேச்சைக் கேட் பதற்கு யாருமே வர மாட்டேங்கிறாங்களாம். அதான் இப்படிக் கிளம்பிட்டாராம்’ என்று சொல்வது போல எழுதி இருக்கின்றார்.
சூறைக் காற்றுடன் சுழன்றடித்த கொட்டும் மழையில் கலைந்து செல்லாமல் வெட்ட வெளியில் நின்று கொண்டே 2014 செப்டெம்பர் 15 இல் பூவிருந்தவல்லி அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் என் உரையைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் கேட்டார்கள். 1 மணி நேரம் 42 நிமிடம் நான் பேசினேன்.
அதன் பின்னர் நான் கலந்து கொண்ட கூட்டங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம். தஞ்சைத் தரணியில் காவிரி தீரத்தில் தஞ்சை-நாகை-திருவாரூர் மாவட்டங்களில் 11 நாள்கள் காலை ஒன்பது மணி முதல் நள்ளிரவு வரை ஊர்களில், நகரங்களில், திறந்த வேனில் நின்றவாறு நான் உரை ஆற்றியபோது, கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் நாச்சியார் கோவிலில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்று கேட்டார்கள்.
மன்னார்குடியில் என் வாழ்நாளில் பார்த் திராத மக்கள் வெள்ளம். கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆயிரக் கணக்கான மக்கள் என் உரை கேட்கத் திரண்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்களும், பெண்களும் வயோதிகர்களும் வாலிபர்களும் மாணவச் செல்வங்களும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
இதில் விந்தை என்ன தெரியுமா?
எந்த இடத்திலும் மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் கொடிகளைக் கட்டவில்லை. எனது பிரச்சார வாகனத்திலும் கட்சிக் கொடி கிடையாது. அநேகமாக அனைத்து ஊர் களிலும், அண்ணா தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் அருகருகே நின்று எனக்குக் கைத்தறி ஆடைகள் வழங்கினர்.
தமிழக அரசியல் அரங்கம் இதுவரை காணாத அரிய காட்சி அது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை வாழ வைக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் காக்கவும், சட்டத்திற்கும் நீதிக்கும் புறம் பாகக் கர்நாடகம் மேகதாதுவில் கட்ட முனைந்துள்ள அணைகளைத் தடுக்கவும், கர்நாடக அரசுக்கு முழுமையாகத் துணை நின்று தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் நரேந்திர மோடி அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தவும், நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை விரட்டியடிக்கவும், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நான் மேற்கொண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் மாபெரும் வெற்றியாக அமைந்தது.
கட்சிக்கொடி கட்டாமல், கட்சிக்கு ஆதரவு கேட்காமல் நாட்டுக்காகவும் எதிர்காலத் தலைமுறையினருக்காகவும் தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களைப் பாதுகாக்கவும், ஐந்து கோடி மக்களுக்குக் குடி தண்ணீர் இல்லாமல் போகுமே? மூன்று கோடி விவசாயிகளுக்கு விவசாயம் அடியோடு பாழாகுமே? என்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்தவும், என்னை வருத்திக் கொண்டு இரவு பகலாக நான் மேற்கொண்ட பயணம் குறித்து சென்னை தினமலர் பதிப்பு செய்தி எதுவும் வெளியிடவில்லை. அது அவர்கள் விருப்பம்.
ஆனால் இந்த 11 நாள்களில் என் உரை கேட்ட இலட்சக்கணக்கான மக்களை ஆடு மாடுகள் என்று வருணித்து இருப்பவர் மக்களைக் கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.
மதுரை வழக்கறிஞர் சங்கத்தினர் ஜனவரி 6 ஆம் தேதி நடத்திய பொங்கல் விழாவில், 12.00 மணிக்குத் தொடங்கி 1.45 மணி வரை நான் பேசியபோது, அந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களுள் ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை என்பதை மதுரைச் செய்தி யாளர்கள் அனைவரும் அறிவார்கள்.
பழந்தமிழர் நாகரிகத்தைக் குறிப்பிடும்போது உலகின் மிகப் பழமையான நகரம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாபிலோன் அல்ல; 11,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காவிரிப்பூம்பட்டினம் ஆகும் என்ற உண்மையை சேனல் 4 தொலைக்காட்சி ஆவண சாட்சியத்தோடு தமிழ் உலகத்திற்குத் தெரிவித்தவர் தினமலர் ஏட்டின் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் என்று கூறினேன்.
வேலூர் மத்தியச் சிறையில் பொடா சிறை வாசியாக 19 மாத காலம் நான் அடைபட்டுக் கிடந்தபோது, என்னை நேர்காணலில் வந்து சந்தித்த பெருமகனார்தான் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்பதையும், அன்றைக்கு அவருடன் வந்தவர் 1976 இல் நான் மிசா கைதியாக பாளைச் சிறையில் அடைபட்டுக் கிடந்த போது என்னுடன் இருந்த அந்நாள் நெல்லை மாவட்ட மார்க்சிÞட் கட்சிச் செயலாளர் தோழர் பாலவிநாயகம் அவர்களின் மகனும் தினமலர் ஆசிரியர் குழுவில் பணி ஆற்று பவருமான லெனின் என்பதையும் நன்றி மறவாமல் குறிப்பிட்டேன்.
நான் பிறந்த கலிங்கப்பட்டி கிராமத்தின் வட்டத் தலைநகராகிய சங்கரன்கோவிலில் புதிய பார்வை அமைப்பின் சார்பில் நடத்தப் பட்ட நிகழ்விலும் (18.10.2014), 2015 பிப்ரவரி 22 ஆம் தேதி இராசபாளையம் திருவள்ளுவர் மன்றத்தின் பொன்விழா நிகழ்விலும், இந்த இரண்டு இடங்களிலும் இரண்டு மணி நேரம் இலக்கிய உரை ஆற்றி இருக்கின்றேன்.
இவ்வளவு பெரும் கூட்டம் இதுவரை வந்தது இல்லை என்று விழாக் குழுவினர் சிலாகித்தனர். துளியும் கட்சி அரசியல் நான் பேச வில்லை. நாள்தோறும் நிகழ்ச்சி களுக்குப் பல்வேறு அமைப்புகளும், அரிமா சங்கம் போன்ற பொது அமைப்புகளும் அழைத்த வண்ணம் உள்ளனர். மதுரை சுழற் கழகத்தினர் ஜனவரி 3 ஆம் தேதி நடத்திய விழாவில் நான் ஆற்றிய உரை வெகுவாகக் கவர்ந்தது என்று அனைவரும் ஒருமித்துப் பாராட்டினர்.
இதோ வருகின்ற மார்ச் 8 ஆம் நாள், உலக மகளிர் நாளில் தாராபுரம் அரிமா சங்கத்தில் உரை ஆற்ற இருக்கின்றேன். புகழ் வரலாறு படைத்த வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் மார்ச் 7 ஆம் தேதியன்று இராமநாதபுரத்திலும், 8 ஆம் தேதியன்று திண்டுக்கல்லிலும், 9 ஆம் தேதியன்று திருச்சிராப்பள்ளியிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்திட ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றோம். மார்ச் 6 ஆம் தேதியன்று திருச்சி புனித வளனார் கல்லூரியிலும், மார்ச் 9 ஆம் தேதியன்று திருச்சி கலைக்காவிரி கல்லூரியிலும் இலக்கிய உரை ஆற்றுகிறேன்.
என் பேச்சைக் கேட்க யாரும் வராததால், ஆடு மாடுகளிடம் பேசுகிறேன் என்று அரைவேக் காட்டுத் தனத்தை கார்ட்டூனில் அள்ளிக் கொட்டிய அந்த அதிமேதாவிக்கு இதெல்லாம் உரைக்கவா போகிறது?
தமிழகத்தையே நாசமாக்கி வருகின்ற, குறிப்பாக வளரும் தலைமுறையைப் பாழ் படுத்தி கோடானுகோடித் தாய்மார்களின் கண்ணீருக்குக் காரணமான மது அரக்கனை விரட்டுவதற்காகத் தமிழகத்தில் 1200 கிலோ மீட்டர் வெயிலிலும் மழையிலும் ஆயிரக் கணக்கான இளைஞர்களுடன் நடந்து நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்களை, குறிப்பாகத் தாய்மார்களைச் சந்தித்ததும், அப்போது என் உடல் நலம் கெட்டு பாதிக்கப்பட்ட செய்திகளும் நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள்.
அதை சென்னை தினமலர் பதிப்பு வெளியிட்டது இல்லை.
கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளி மாணவர்கள் மத்தியிலும்கூட மதுப்பழக்கம் பரவுகின்ற பேரபாயம் குறித்து மிகுந்த கவலையுடன், மாணவர்கள் மத்தியில் மது எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் மூலமாகவே மது ஒழிப்புப் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் குறிக்கோளுடன் மது ஒழிப்பு மராத்தான் போட்டியை, கழகத்தின் இளைஞர் அணி மாணவர் அணி தொண்டர் அணி சார்பில் ஏற்பாடு செய்தேன்.
2014 நவம்பர் 23 ஆம் நாள் கோவையில் 18,000 பேர் பங்கேற்றனர். 2015 ஜனவரி 4 ஆம் நாள் தலைநகர் சென்னையிலோ கின்னÞ சாதனையாக 59,000 பேர் பங்கேற்றனர். பொங்குமாங்கடல் போலக் காட்சி அளித்தது மராத்தான் மாணவர் கூட்டம். தொலைக்காட்சிகள் பலவும் நாட்டு மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டின.
ஆனால், தினமலரின் பத்திரிகை தர்மம் நாட்டு மக்கள் நலனுக்காக நடத்தப்பட்ட இந்தச் சாதனையைச் செய்தியாக்க விரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு ஓடிய அந்த நிகழ்ச்சியில் ஒரு பிள்ளைக்குக் கூட காயம் ஏற்பட வில்லை; எந்த விபரீதமும் நடக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்து இருந்தால், தினமலர் சென்னைப் பதிப்பு அதனைச் செய்தியாக்கி இருக்கும்.
இந்த மராத்தான் போட்டிகளில் மிகக் குறிப்பிடத்தக்க செய்தி யாதெனில் ம.தி.மு.க. கட்சிக்கொடியோ, கட்சி அடையாளமோ எங்கும் கிடையாது. ஏன், நான் எனது உரையில் மறுமலர்ச்சி தி.மு.க. என்ற பெயரைக் கூட உச்சரிக்கவில்லை.
ஜனவரி 25 ஆம் நாளன்று திருச்சி மாநகரில் நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாணவர் மராத்தான் போட்டியில் 42,000 பங்கேற்றனர்.
திருச்சி தினமலர் பதிப்பு இதனை பெரிய அளவில் படத்துடன் மிகச் சிறப்பான செய்தியாக வெளியிட்டது. அவர்களுக்கு எனது நன்றி.
ஆனால், சென்னை தினமலர் பதிப்பு ஒரு வரிகூட இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
இந்த இலட்சணத்தில்தான் தினமலர் கார்ட்டூனிÞட் கடித்துக் குதறுகின்றார்.
தேள் கடி 3
என்ன திடீர்னு தலைவர் தாயம் விளையாடிக் கிட்டிருக்காரு? அதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்குதா என்ன?
இது கார்ட்டூனிÞடின் உன்மத்தம் பிடித்த புலம்பல்.
என்ன செய்றது பாவம். யாருமே போராட்டத் துக்குக் கூப்பிடலையாம். அதான், இப்படி பொழுத போக்கிகிட்டு இருக்காரு.
தூத்துக்குடி மாநகரையும் சுற்று வட்டார மக்கiளையும், குறிப்பாக விவசாயிகளையும் மீனவர்களையும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கும் Þடெர்லைட் நாசகார நச்சு ஆலை, நிலம் நீர் காற்று மண்டலத்தை நச்சு மயமாக்கும் என்பதால், அதனைத் தடுக்க 17 ஆண்டுகள் போராடினேன். மராட்டிய மாநிலம் இரத்தின கிரியில் Þடெர்லைட் தொழிற் சாலை அமைக்கப்பட்டபோது, விவசாயிகள், கடப்பாறை, சம்மட்டி களோடு புறப்பட்டு Þடெர்லைட் ஆலையின் கட்டடத்iயும், இயந்திரங்களையும் உடைத்து நொறுக்கினார்கள். அன்றைய மராட்டிய முதல் அமைச்சர் சரத் பவார் போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மறுநாளே Þடெர்லைட் லைசென்சை இரத்து செய்தார். குஜராத், கோவா மாநிலங்கள் உள்ளே நுழைய அனுமதிக்காத நிலையில், தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் Þடெர்லைட் நச்சு ஆலைக்கு லைசென்Þ கொடுத்தனர். அண்ணா தி.மு.க., தி.மு.க. இரண்டு அரசுகளுமே இதற்குத் துணை நின்றன.
Þடெர்லைட் ஆலையை எதிர்த்து இடைவிடாத உண்ணா விரதங்கள், மறியல் போராட்டம், நடைபயணம் பின்னர் உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து வழக்காடினேன். ஆலையை மூடுகின்ற உத்தரவை 2010 செப்டெம்பர் 28 ல் பெற்றேன். ஆலை நிர்வாகம் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தில்லியில் வழக்கு நடைபெற்ற 33 வாய் தாக்களுக்கு நானும் சட்டத்துறைச் செயலாளர் தேவதாசும் உச்சநீதிமன்றத் திற்குத் தவறாமல் சென்றோம். இறுதிக் கட்ட வாதங்களின்போது நான் மணிக்கணக்கில் எடுத்து வைத்த வாதங்களை நீதிமன்றத்திலேயே உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக் வெளிப்படையாகப் பாராட்டினார். ஆனால் ஆலை நிர்வாகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தது. எனினும் மனம் தளராமல் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்தேன். தற்போது அந்த வழக்கும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்குக் காத்திருக்கின்றது.
முல்லைப் பெரியாறு, பென்னி குயிக் கட்டிய அணையைப் பாது காக்கவும், ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் உரிமையையும், விவசாயி களின் பாசன நீர் உரிமையையும் காக்க, எட்டு ஆண்டுகள் இடைவிடாது போராடி இருக்கின்றேன். மதுரையில் இருந்து கூடலூர் வரை பல்லாயிரக்கணக்கானவர்களோடு கால்கடுக்க நடந்து இருக்கின்றேன்.
மதுரை தினமலர் பதிப்பு எனது போராட்டங்களை முழுமையாகப் பிரசுரித்ததை என்றும் மறக்க மாட்டேன். நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் வட்டார விவசாயிகளுக்கு வாழ்வு அளிக்கும் செண்பகவல்லி தடுப்பு அணை 300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப் பட்டது. தற்போது கேரள எல்லைக்குள் அமைந்து இருக்கின்றது. 1965 இல் பெரு வெள்ளத்தால் தடுப்பு அணையில் ஏற்பட்ட உடைப்பைப் பழுது பார்த்துக் கொடுக்க, கேரள அரசு தீர்மானித்த செலவு மதிப்பீட்டுத் தொகையான 10 இலட்சத்து 29 ஆயிரத்தில் பாதித் தொகையான 5 இலட்சத்து 15 ஆயிரத்தை, தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் செலுத்தியது. ஆனால், 2006 ஆம் ஆண்டில் அந்தப் பணத்தைக் கேரள அரசு தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பி விட்டது.
2005 இல் அன்றைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களை நான் சந்தித்து, செண்பக வல்லி தடுப்பு அணையைப் பழுது பார்த்துக் கொடுக்க வேண்டியபோது, ஆவன செய்வதாகக் கூறினார். ஆனால், 2006 இல் அங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தப் பணிகள் நடக்கவில்லை. எனவே, 2015 பிப்ரவரி 7 ஆம் நாள் கேரள மாநிலம் எர்ணா குளத்தில் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி அவர்களைச் சந்தித்து, செண்பகவல்லி தடுப்பு அணை குறித்து விளக்கம் கூறி, பழுதுபார்த்துத் தருமாறு வேண்டினேன். என் கோரிக்கையைக் கவனிப்பதாக உறுதி கூறி இருக்கின்றார்.
இதே கோரிக்கைக்காக நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் 2015 ஜனவரி 28 ஆம் நாளன்று என் தலைமையில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பங்கேற்ற உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டேன்.
நெல்லை தினமலர் பதிப்பு மிகப் பெரிய அளவில் இந்தச் செய்தியை வெளியிட்டது.
தினமலரைத் தந்தவரின் சொந்த மாவட்டம் ஆயிற்றே? அந்த பாசம் விட்டுப் போகுமா என்ன? அவர்களுக்கு நன்றி.
ஆனால், சென்னை தினமலர் இந்தச் செய்தியையும் வெளியிடவில்லை. அதற்காக அவர்கள் மீது நான் ஆத்திரப்படவில்லை. அவர்கள் செய்தி வெளியிடுகின்ற அளவுக்கு நான் பெரிய மனிதன் அல்ல.
நான் தாயம் விளையாடுவது இல்லை; சீட்டும் ஆடுவது இல்லை. சிறைச்சாலையில் நேரம் போவதற்காகச் சிலர் சீட்டாடுவது உண்டு. ஆனால் ஒருநாளும் சிறையில் சீட்டைக் கையால் தொட்டது இல்லை. எனக்கு சீட்டு விளையாடத் தெரியும். கல்லூரி நாள்களில் ஆடி இருக்கின்றேன். நேரம் போகவில்லை என்று என் வாழ்நாளில் என்றுமே நினைத்தது இல்லை. போத வில்லையே என்றுதான் எண்ணி இருக்கிறேன். ஒரு நாளைக்குக் குறைந்தது 18 மணி நேரம் உழைக்கிறேன். பெரும் பாலான நாள்களில் நான்கு மணி நேரம்தான் தூங்குகிறேன். அதுவும் கூடக் கார் பயணத்தில் தான். என் கார் ஓட்டுநர்கள் துரை, பொன்னாங்கனைக் கேட்டால் சொல்லுவார்கள். கடந்த 35 ஆண்டுகளில் மட்டும், நான் 90 இலட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு காரில் பயணித்து இருக்கின்றேன். நாளொன்றுக்குச் சராசரியாக 500 கிலோ மீட்டருக்குக் குறையாமல் மாதக்கணக்கில் பயணித்து இருக்கின்றேன்.
சிறையில் காலையிலும், மாலையிலும் கைப்பந்து ஆடுவேன். இப்போதும்கூட கிராமத்திற்குப் போனால், என் கிராமத்து இளைஞர்கள், மாணவர்களோடு கைப் பந்து ஆடுகிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையான மே 16 ஆம் நாளன்று காலை 6.30 மணி முதல் எட்டு மணி வரை கைப்பந்து ஆடி விட்டுத்தான் என் இல்லத்திற்கு வந்தேன்.
தொலைக்காட்சியின் முதல் செய்தி யிலேயே அண்ணா தி.மு.க. முன்னிலை என்று அறிந்தபோது, நான் உட்பட அனைத்துத் தொகுதிகளிலும் தோற் போம் என்பதை அறிந்து கொண்டேன். நான் வருத்தப்படவில்லை என்பதை விட நண்பகலில் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடித்த என் கிராமத்துத் தாய்மார் களிடம் என் அன்னையார் மாரியம்மாள் அவர்கள், ‘யாரும் அழக் கூடாது; என் மகன் தோற்பான் என்பதை முன்பே அறிவேன். ஓட்டுக்குத் தான் பணம் கொடுக் கின்றார்களே, மகன் எப்படி வெற்றி பெற முடியும்? என்பதை முன்பே உணர்ந்து கொண்டேன்’ என்று சொன்னபோது மெய்சிலிர்த்துப் போனேன். இந்த வீரத் தாய்க்கு மகனாகப் பிறந்ததை எண்ணிப் பெருமைப்பட்டேன்.
அன்று பிற்பகலில் என்ன செய்தேன் தெரியுமா? உலகம் போற்றும் மாபெரும தலைவர் தியாகசீலர் கருப்பர் உலகின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா அவர்களைப் பற்றி, அவர்களின் முழு வாழ்வு குறித்து, அவரது ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட அற்புதமான ஆங்கிலத் திரைப்படத்தை நானும் என் தம்பியும் குடும்பத்தினரும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தோம். இதுதான் என் வாழ்க்கை; இதுதான் என் இயல்பு!
சில ஆண்டுகளுக்கு முன்னர், மதுரை தினமலர் அலுவலகம் ஒரு அரசியல் கட்சியின் வன்முறையாளர்களால் கடுமை யாகத் தாக்கப்பட்டது. அச்சு இயந்திரங் கள், கணிப்பொறிச் சாதனங்கள் மற்றும் பொருள்கள் உடைத்து நொறுக்கப் பட்டன. பணியாளர்கள் அடித்து விரட்டப் பட்டனர். இதனைக் கேள்விப்பட்ட நான் உடனடியாக மதுரைக்கு விரைந்து வந்து, அன்று இரவிலேயே தினமலர் அலுவலகத் தைப் பார்வையிட்டேன். தினமலர் ஏட்டின் ஆசிரியர் குழுவினருக்கும், அலுவலர் களுக்கும் ஆறுதலும் தைரியமும் கூறினேன். அங்கிருந்தவாறே மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அறிக்கை விடுத்தேன்.
மறுநாள் மாலை நான்கு மணிக்கு மேல மாசி வீதி- வடக்குமாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தினமலர் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அவர்களை உடனடியாகக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டு மெனக் கோரிக்கை விடுத்து முழக்கங்கள் எழுப்பினோம்.
ஜனநாயக மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களுள் ஒன்றான பத்திரிகைகளைத் தாக்குவது ஜனநாயகத்தின் குரல் வளையை அறுக்க முற்படும் அராஜகம் ஆகும். ஜனநாயக உரிமைகளுக்காக, பத்திரிகை சுதந்திரத்தைக் காக்க நெருக்கடி நிலையை எதிர்த்து ஓராண்டு மிசா கைதியாகக் கொட்டடியில் இருந்தவன் நான். எங்கே ஜனநாயகத் திற்கு ஆபத்து நேர்ந்தாலும், அதனைத் தடுக்கவும் எதிர்க்கவும் எந்த அடக்கு முறைக்கும் அஞ்சாது அறப்போர்க் களத்திற்கு வருவேன் என எச்சரிக்கை விடுத்தேன்.
அந்த நாள்களிலும் என்னைப் பற்றியோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியோ உரிய முறையில் செய்திகளைத் தருவதற்குத் தினமலருக்கு மனம் இல்லாமல்தான் இருந்தது. நான் அதனைப் பொருட்படுத்தவே இல்லை. இதுதான் என் அறப்போர்க் குணம்!
என் மீது சேற்றை வாரி வீச வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டவர்களின் புத்திக்கு இதெல்லாம் எப்படி எட்டும்?
தேள் கொட்டத்தான் செய்யும்; கொட்டப் பட்டவரின் வலி குறித்துத் தேள் கவலைப் படாது.
சென்னை தினமலர் கார்ட்டூனை ஒரு விசித்திர வேலைப்பாடாகக் கருதுகிறேன். இதில், தேள் தானாகக் கொட்டவில்லை. அந்தக் கொடுக்கை இயக்கிய ஆசாமி ஒருவர் இருக்கிறார்.
ஆசிரியருக்கு இந்தப் பின்னணி துளியும் தெரிய வாய்ப்பு இல்லை.
அந்தக் கொடுக்கை கொட்டச் செய்ய வைத்த ஆசாமிக்கு ஒரு பழமொழி மிகப் பொருத்தம்.
விநாச காலே விபரீத புத்தி.
தினமலர் ஏட்டுக்குள் நுழைந்து கொண்டு தேள் கொடுக்கைச் சொடுக்க வைக்கும் அந்த நபருக்கு அவ்வளவு வன்மம் என் மீது. நன்றாக இருக்கட்டும்!
தினமலர் ஏட்டின் ஆசிரியர் மீது எனக்கு எந்த மனவருத்தமும், கோபமும் துளியும் கிடையாது.
தமிழர்களின் தொன்மை வரலாறை, மூவேந்தர்கள் ஆட்சியை அந்நாளைய நாகரிகத்தை அதற்கு அடையாளமாக அம்மன்னர்கள் காலத்தில் மக்களிடம் புழங்கிய நாணயங்களை, எப்படித் தமிழ்த் தாத்தா உவே.சா ஓலைச்சுவடி ஏடுகளைத் தேடித் தேடிக் கண்டறிந்தாரோ, அதுபோல விடா முயற்சி செய்து, நாணயங்களைத் தேடிக்கண்டு அவற்றில் புதைந்து இருக்கின்ற வரலாற்றுச் சாட்சியங்களை உலகத்திற்கு அறிவித்தவர் சென்னை தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கம்பன் கழகத்தார் நடத்திய கம்பன் விழாவில் நான் பேசும்போது, தமிழகத்தில் குமரி மாவட்டம் உள்ளிட்ட நாஞ்சில் நாடு கேரளத்தின் பிடியில் இருந்து விடுபட்டுத் தமிழகத்துடன் இணையக்குரல் கொடுத்த தோடு, போராட்டத்திற்குத் தோள் கொடுத்த பெருமகனார்தான் தினமலர் ஆசிரியர் இராமசுப்பையர் என்று கூறிய தோடு, தமிழகத்தின் நதிநீர் உரிமை களைக் காக்க, அன்னாரும் தினமலர் ஏடும் ஆற்றிய சேவையை உளமாறப் பாராட்டிப் பேசினேன்.
‘நான் இதுவரை எந்தச் சிறைச் சாலைக் குள்ளும் போய் யாரையும் பார்த்தது இல்லை. நீங்கள் சிறையில் இருப்பது என் மனதுக்குக் கவலை தந்தது. அதனால் உங்களைக் காண வந்தேன்’
என்று, வேலூர்ச் சிறையில் பார்வை யாளர் கூடத்தில் தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியதை நினைக்கும்போது என் நெஞ்சு நெகிழ்கிறது. அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. விடுதலைப் புலிகள் குறித்த எனது நிலைப்பாட்டைக் கடுமை யாக விமர்சிக்கும் தினமலர் ஏட்டின் ஆசிரியர் ஆவார். ஆயினும் மனித நேயம் அவரிடத்தில் ஓங்கி இருப்பதால் என்னைக் காண வந்தார்.
இன்னொரு செய்தி தெரியுமா? கேட்டால் திகைத்துப் போவீர்கள்.
இம்முறை டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி காலை பத்து மணிக்குச் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் என் மீது கலைஞர் கருணாநிதி அரசு தொடுத்ததும், ஆயுள் தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளதுமான தேசத்துரோக வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிற்பதற்காக நான் காரில் பயணித்த போது, அன்றைய தினமலர் ஏட்டினைப் படித்தேன். அதில், சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற சாமிநாதம் என்ற நூல் அறிமுக விழாவில், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் ஆற்றிய உரை, 7 ஆம் பக்கத்தில் பிரசுரம் ஆகி இருந்ததைப் படித்தேன்.
“புறநானூறுதான் என் ஆய்வு களுக்கு அடிப்படை. உ.வே.சா. தான் என் உழைப்பின் ஏணிப்படி என அவர் ஆற்றி இருந்த உரையில் மதுரையில் கிடைத்த ஒரு செப்பு நாணயத்தில் தமிழ் பிராமி எழுத்தில் பெருவழுதி என்ற பெயர் இருப்பதைக் கண்டதாகவும், நாணயத்தின் முன்புறத்தில் குதிரையும், பின்புறத்தில் கோட்டு வடிவச் சின்னமும் இருந்ததைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டதோடு, சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் நாணயங்கள் வழக்கத்தில் இருந்த உண்மையை வாரணாசியில் நடைபெற்ற நாணயவியல் மாநாட்டில் நிரூபித்ததையும், அசோகர் பிராமிதான் உண்டு; தமிழ் பிராமி இல்லை என்று சொல்லப்பட்ட தவறான கருத்தை மறுத்து, தமிழின் சிறப்பு ‘ழ’ கர எழுத்து இடம் பெற்று இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ததையும் தெரிவித்து உள்ளார்.
சங்க காலச் சேர நாணயம், சோழ நாணயம், மலையமான் நாணயம், உரோமானிய கிரேக்க நாணயங்களை ஆய்வு செய்ததையும் குறிப்பிட்டு உள்ளார்.
இதைப் படித்தபோதுதான், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாநிலக் கல்லூரி மாணவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். உடனே, அவரை அலை பேசியில் தொடர்பு கொண்டேன்.
‘ஐயா உங்கள் பேச்சைப் படித்தேன். மகிழ்ந்தேன், நானும் மாநிலக் கல்லூரி மாணவன் அல்லவா? அதனால் பெருமைப்பட்டேன். நீங்கள் எங்கு தங்கி இருந்தீர்கள்?’ என்று கேட்டேன்.
‘விக்டோரியா விடுதியில்தான்’ என்றார். ‘நானும் அந்த விடுதியில் தான் இருந்தேன்; தமிழ்மன்றத் தலைவராகவும் இருந்தேன்’ என்றேன்.
அப்பொழுதெல்லாம் மாநிலக் கல்லூரி மாணவர்களை பிரின்சÞ ஆஃப் பிரசிடென்சி; இராசதானிக் கல்லூரி இளவரசர்கள் என்று அழைப்பார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். விக்டோரியா விடுதியில் இருந்து மாலை வேளைகளில் முன்னிரவு நேரங்களில் காலாற நடந்து சென்று மெரீனா கடற்கரை மணல் வெளியில் அமர்ந்த அனுபவங்களை இருவரும் பரிமாறிக் கொண்டோம்.
தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், தமிழர்களின் வரலாற்றுக்கும் புகழ் சேர்க்கும் தொண்டினை நீங்கள் செய்கின்றீர்கள் என்றேன்.
நான் பாராட்டியதில் மகிழ்ந்தார். ‘ஐயா, இப்போது மாநிலக் கல்லூரி நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாணவர்கள் அரிவாள் கத்தியோடு மோதுகிறார்கள். நான் படித்த காலத்திலும போராட்டம் நடத்தி இருக்கின்றேன். ஆனால் மாணவர் களுக்குள் எந்தக் கலகமும் நடந்தது இல்லை. அப்பொழுதெல்லாம் உடன் படிக்கும் மாணவர்கள், ஏன் அறைத் தோழன் உட்பட எவருடைய சாதியையும் அறிந்து கொள்ள முயல்வதையே அநாகரிகமாகக் கருதினோம். சாதிச் சிந்தனையே ஏற்பட்டது இல்லை. இப்பொழுது சாதிய வட்டாரங்கள் ஏற்படு கின்றன. மதுப்பழக்கம் பரவுகிறது. இவை யெல்லாம் மிகுந்த கவலை தருகிறது’ என்றேன்.
‘டெல்லி போராட்டம் எல்லாம் சிறப்பாக நடந்து இருக்கின்றதே’ என்றார்.
‘இப்பொழுது தேசத் துரோகக் குற்றச் சாட்டின் மீதான வழக்கில், குற்றவாளிக் கூண்டில் நிற்க கோர்ட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கின்றேன்’ என்றேன். அதுகுறித்துக் கவலைப்பட்டார். ‘எனக்கு வழக்குகள் எல்லாம் பழகிப்போய்விட்டது’ என்றேன்.
இந்த உரையாடலின்போதோ, இதற்கு முன்போ, ‘எனக்கு செய்தி போடுங்கள்’ என்று அவரிடம் நான் கேட்டதே இல்லை. அது நாகரிகம் அல்ல. சகோதரர் லெனின் அவர் களிடம் எப்போதாவது அப்படிச் சொல்வது உண்டு. இதற்கு முன்னர் ஒருமுறை மனதைக் காயப்படுத்து கின்ற விதத்தில் ஒரு கட்டுரை வந்தபோது, மனம் வருந்திக் கடிதம் அனுப்பினேன். அதைப் பார்த்து விட்டு, அப்படிச் செய்தி வந்தததற் காக ஆசிரியர் வருந்தியதாகவும் அறிந்தேன். கழகத்துக்கு நிதி திரட்டிய போது, ‘வைகோ யாசகம் கேட்கிறார்’ என்று சென்னை தினமலர் செய்தி வெளியிட்ட போது, என் மனவருத்தத்தைத் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் தெரிவித்தது உண்டு.
இவ்வளவு விரிவாக இந்தக் கடிதத்தை நான் எழுதியபோதிலும், இந்தக் கருத்துப் படம், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய கவனத்திற்கு வராமலேயே பிரசுரிக்கப்பட்டு இருக்கும் என்று தான் இப்போதும் எண்ணுகிறேன். இத்தகைய கருத்துப்படங்களை அவரது நல்ல மனம் ஏற்காது என்பது திண்ணம்.

கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த ஒன்று 
நன்று உள்ளக் கெடும்

என்றார் திருவள்ளுவர்.
கொன்றன்ன இன்னா செய்தது அப்பெருந் தகையாளர் அல்ல. கார்ட்டூனிÞடை இயக்கிய வன்மம் பிடித்த விகார புத்தி கொண்ட ஆசாமிதான் இந்தக் கார்ட்டூன் களுக்கு விசயதானம் செய்தவர்.
நன்று என்பது, டாக்டர் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் வேலூர்ச் சிறைக்கு வந்து என்னிடம் காட்டிய கனிவு. அந்த ஒன்றையே உயர்வாக நினைக் கின்றேன்.
எனது டெல்லிப் பயணம் குறித்தும், எனது போராட்டங்கள் குறித்தும் விரிவாகக் கழகக் கண்மணிகளிடம் தெரிவிக்கும் இந்தக் கடிதத்தை எழுதுகின்ற நல்ல வாய்ப்பை நல்கியமைக்கு தினமலர் ஏட்டுக்கு எனது நன்றி!
கண்ணின் மணிகளே!
எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ

No comments:

Post a Comment