Thursday, March 19, 2015

ஏப்ரல் 7 தஞ்சையில் மனிதச் சங்கிலி, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் அறப்போர்! கைகோர்க்க வாரீர்! வைகோ அழைக்கிறார்!

இது, தமிழக மக்களுக்கு அபாயங்கள் அச்சுறுத்தும் சோதனைக் காலம்!

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தை வாழ வைக்கும் உயிர் ஆதாரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுதான் காவிரி நதி ஆகும். பொங்கி வரும் பெருவெள்ளத்தை கல்லணை கட்டித் தேக்கி, சோழ மண்டலத்திற்குப் பெரும் செழுமை சேர்த்தான் கரிகால் பெருவளத்தான்.
உலக நாடுகள் வகுத்துள்ள ஹெல்சிங்கி விதிகளின்படி, காவிரி நதிநீர் உரிமை தமிழகத்தின் சட்டப்பூர்வமான ஆதிபத்திய உரிமை ஆகும். 1924 இல், அன்றைய மைசூர் அரசுடன் தமிழகம் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக எழுபதுகளில் கர்நாடக அரசு காவிரிக்குக் குறுக்கே புதிய அணைகளைக் கட்டியபோதே, அதைத் தடுக்கும் கடமையில் அன்றைய காங்கிரÞ மத்திய அரசு தவறியது. இரு அரசுகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதால், உச்சநீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பையும் முற்றாக உதாசீனம் செய்து விட்டு, கர்நாடக அரசு காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டூ, ராசிமணலில் இரண்டு புதிய அணைகளைக் கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் படுவேகமாகச் செய்து வருகிறது. இதில் மேகதாட்டூவில் மட்டும் 48 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். மைசூர் பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக என்று பொய்யுரைக்கும் கர்நாடக அரசு, நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக 11 இலட்சம் ஏக்கரில் பாசனத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டு உள்ளது.
இந்த இரண்டு அணைகளும் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு மேட்டூருக்குத் தண்ணீர் வர வாய்ப்பே இருக்காது. பெருமழை காலத்தில் வெள்ளப்பெருக்கால் வரும் உபரி நீர் கூட மேட்டூருக்குக் கிடைக்காது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நாம் கற்பனை செய்ய முடியாத துன்பமும், அழிவும், தமிழகத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்களைத் தாக்கும். தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் குடிதண்ணீரும் பாசன நீரும் இன்றிப் பரிதவிக்கும். 5 கோடி மக்களுக்குக் குடிநீர் இன்றி, மூன்று கோடி விவசாயிகளுக்குப் பாசன நீர் இன்றிப் போகின்ற உத்பாதம் நிகழும்.
சோறுடைத்த சோழ வளநாடு பிச்சைப் பாத்திரம் ஏந்தும். தமிழகத்தின் எத்தியோப்பியாவாக காவிரி தீரம் மாறும். இத்தகைய ஒரு அபாயம், இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்டதே இல்லை. இந்த ஆபத்தை நாம் தடுக்காவிடில் வருங்காலத் தலைமுறை நம்மை மன்னிக்காது. அணைகளைக் கட்டியே தீருவோம் என்று கொக்கரிக்கும் கர்நாடக அரசு, அதற்கு அடையாளமாக 25 கோடி ரூபாயை தொடக்க நிதியாக அறிவித்தும் விட்டது. தமிழகத்திற்குப் பெருங்கேடு செய்ய முனையும் கர்நாடக அரசைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ள நரேந்திர மோடியின் மத்திய அரசு அதற்கு மாறாக புதிய அணைகள் கட்ட மறைமுகமாக ஊக்குவிக்கிறது. அதனால்தான், மத்திய அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில் டிசம்பர் மாதம் இரண்டு நாள்கள் நடைபெற்ற சதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவும் பங்கேற்றார்; சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்தே இக்கூட்டம் நடந்தது. நான் ஏற்கனவே கூறியது போல், பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் மத்திய அரசு, மிகப்பெரிய நயவஞ்சக நாடகம் நடத்துகிறது. புதிய அணைகள் கட்ட மத்திய அரசு இப்போது அனுமதி கொடுக்கவில்லை என்று ஒருபுறத்தில் கூறிக்கொண்டே மறுபுறத்தில் அணைகள் கட்டுவதை ஊக்குவித்து வருகிறது. புதிய அணைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விட்டன. கட்டுமான ஆயத்தங்கள் நடக்கின்றன. தமிழக மக்கள் மத்திய அமைச்சர்களின் வார்த்தைகளில் ஏமாந்து விடக் கூடாது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கும் நிலைமையைத் தடுக்க தமிழக மக்கள் கட்சி சாதி மத எல்லைகளைக் கடந்து, போர்க்குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசுக்கு அது எச்சரிக்கையாக அமைய வேண்டும். இதனைக் கருதித்தான் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் காவிரி தீர மக்களைச் சந்திக்கும் பயணமும், அறப்போராட்ட ஆலோசனைக் கூட்டங்களும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன.
பிப்ரவரி 18 ஆம் தேதி 14 மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டமும், மார்ச் 11 ஆம் தேதி, தலைநகர் சென்னையில் மத்திய அரசின் சுங்க இல்ல முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்றன.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குப் பச்சைத் துரோகம் இழைக்கும் நரேந்திர மோடி அரசுக்குக் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவும், தஞ்சை சிவகங்கை மாவட்டங்களைப் பாழாக்க முனையும் மீத்தேன் நாசகாரத் திட்டத்தை விரட்டவும், நிலங்களைக் கையகப்படுத்த முனையும் மத்திய அரசின் அநீதியான மசோதாவை எதிர்க்கவும், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை மாநகரில் மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறும்.
கடந்த இரண்டு அறப்போர்களிலும் பங்கேற்ற அமைப்புகளும், விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் இந்த மனிதச் சங்கிலியில் கை கோர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment