Saturday, March 14, 2015

மோடியின் இலங்கைப் பயணம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் கைது!

பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு தமிழ் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க, தமிழ்தேசிய விடுதலை இயக்கம், மனித நேய மக்கள் கட்சி, பெரியார் விடுதலை கழகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.
இலங்கையுடன் இந்தியா எவ்வித உறவும் மேற்கொள்ளக்கூடாது என்றும், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை அதிபருக்கு எதிராகவும், மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்தும் அவர்கள் பலவித முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, சைதாப்பேட்டை s.p.s திருமணமண்டபத்தில் அடைத்து வைத்த போலீஸ் பின்னர் அவர்களை விடுவித்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment