Friday, March 20, 2015

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் - வைகோ!

அஞ்சல் துறையை தனியார்மயம் ஆக்கக்கூடாது, கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதியக்குழு அமைத்து கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும், இலாகா ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைத்திட பணி நிரந்தரம் வேண்டும் போன்ற கோரிக்கைளை முன்வைத்து, தமிழகத்தில் உள்ள 56 ஆயிரம் கிராமப்புற அஞ்சலகங்களில் பணியாற்றும் சுமார் 26 ஆயிரம் அஞ்சல் துறை பணியாளர்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் நடத்தி வரும் இப்போராட்டத்தில் இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தினால் தபால் பட்டுவாடா, பணவிடைகள் அனுப்புதல் மற்றும் சேகரிப்பு, அஞ்சலக சிறுசேமிப்புப் பணிகள், பொதுமக்களுக்கான சேவைகள், ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணி நிரந்தரம், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் நியாயமானவை ஆகும்.
கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள் என்று சொல்லப்படுகிறதேயொழிய அவர்களின் பணி, நகர்ப்புற அஞ்சலக பணியாளர்கள் போலவே வரையறுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கிராமிய அஞ்சல் ஊழியரும் தினமும் சராசரியாக 30 முதல் 60 கிலோ மீட்டார் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், பணி நேரத்தைவிட கூடுதலாக 6 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இருக்கின்றனர். ஆனால், கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள் பெறும் ஊதியம் மொத்தம் ரூ. 7ஆயிரம்தான் என்பது வேதனைக்குரிய ஒன்று. ஆங்கிலேயர்கள் காலத்தில் மாத ஊதியமாக ரூ. 5, ரூ. 10 என்று பெற்றுக்கொண்டு, அஞ்சல் பணியை ஒரு கௌரவம் என்று கிராமப்புறங்களில் வசதி படைத்தோர் கருதினர்.
ஆனால், இப்போது கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இந்த சொற்ப ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால், 2014 பிப்ரவரியில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தது. பணி நிரந்தரம், ஊதியக்குழு அமைத்தல் போன்றவற்றை ஏற்பதாகவும் கூறியதால், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தற்போதைய பா.ஜ.க. அரசு முந்தைய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தட்டிக்கழித்து வருவது மட்டுமின்றி, கிராமப்புற அஞ்சலகங்களை தனியார் மயம் ஆக்கும் முயற்சியிலும் முனைப்பு காட்டுகிறது.
சாதாரண எளிய மக்களுக்கு மகத்தான சேவை அளித்து வரும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராமல், அலைக்கழித்து வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment