Thursday, April 23, 2015

ஏப்ரல் 28 தமிழர் நீதிப் பேரணியில் தலைநகர் குலுங்கட்டும்-வைகோ!

ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழர் நீதிப் பேரணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்ச்சி, தமிழர் இதயங்களைக் கோடரி கொண்டு பிளந்து இருக்கின்றது.
செம்மரக் கொள்ளையும் கடத்தல் வணிகமும் மாபியாக்களின் கண் அசைவில்தான் நடக்கின்றது. ஆனால், ஒரு பாவமும் அறியாத தமிழகத்தைச் சேர்ந்த 20 ஏழைத் தமிழர்கள், ஏப்ரல் 6 ஆம் தேதி பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்தபோது அவர்களைக் கைது செய்து, காவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று, எங்கோ ஓரிடத்தில் கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று, அவர்களின் உடல்களைக் காட்டு வழியில் வீசி எறிந்து உள்ளனர்.

அந்த இடத்தில் செம்மரங்கள் கிடையாது. எனவே, முன்பு எப்போதோ வெட்டப்பட்ட பழைய மரங்களைத் தமிழர்களின் உடல்களுக்கு அருகில் போட்டுப் பொய்யான காட்சியைக் காவல்துறையினர் புனைந்து இருக்கின்றனர்.

காவல்துறையினரோடு மோதல் என்பது அப்பட்டமான கட்டுக்கதை என்பது உறுதியாகி விட்டது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களுடன் பேருந்தில் பயணித்துப் பின்னர் தப்பி வந்தவர்கள், இந்திய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இறந்து போன ஆடு மாடுகளை கம்புகளில் கட்டித் தூக்கி வருவது போல 20 தமிழர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. காட்டில் உலவும் விலங்குகளையும், மரக்கிளைகளில் அமரும் பறவைகளையும் சுட்டுக் கொல்லத் தடை உண்டு. ஆனால், விலங்குகள் பறவைகளை விட தமிழர்களின் உயிர்கள் மலிவாகக் கருதப்பட்டு, ஆந்திர அரசின் கொலைவெறியால் பறிக்கப்பட்டு இருக்கின்றன.

‘செம்மரக் காட்டுக்குள் வந்தால் சுட்டுக் கொல்லுவோம்’ என்று ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ண ரெட்டி இரத்த வெறியோடு கூச்சலிடுகிறார். ஆந்திரத்தின் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ, கொல்லப்பட்ட தமிழர்களுக்காகத் துளி அளவு அனுதாபத்தையும் தெரிவிக்காதது, அவர் மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டார் என்பதைக் காட்டுகிறது.

காவல்துறை அதிகாரி காந்தாராவ் உள்ளிட்ட, இந்தப் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; அவர்களைக் கைது செய்ய வேண்டும். ஆனால், ஆந்திர அரசு எள் முனை அளவு கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, ஈவு இரக்கம் அற்ற கிராதகப் போக்கு ஆகும்.

காவல்துறை வனத்துறை அதிகாரிகள் மட்டும் அல்ல, இந்தக் கொடுங் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் எவராக இருப்பினும், அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

நடைபெற்ற அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமானால், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். நடுவண் புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கின் புலனாய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

படுகொலைக்குள்ளான ஒவ்வொரு தமிழரின் குடும்பத்திற்கும், ஆந்திர அரசு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும். அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இந்தப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் வாய்மூடிக் கிடக்கும் மத்திய அரசின் போக்கும், தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய தமிழக அரசின் போக்கும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழர்களின் இதயத்தில் கொந்தளிக்கும் வேதனையை மத்திய மாநில அரசுகளுக்கும், ஆந்திர அரசுக்கும் உணர்த்திடும் வகையில், தலைநகர் சென்னையில் ஏப்ரல் 28 - செவ்வாய்க்கிழமை மாலையில் தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி தமிழர் நீதிப் பேரணி நடத்துவது என, ஏப்ரல் 11 ஆம் தேதியன்று, தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அப்பேரணியை தமிழர்களின் எழுச்சிப் பிரளயமாக நடத்திட வேண்டும்.

நீதி கேட்கும் முழக்கம் விண்ணைப் பிளக்கட்டும். தமிழர் பேரணியால் தலைநகர் குலுங்கட்டும். அலையலையாய் அணியணியாய்ப் பங்கேற்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளையும், தமிழ் இன உணர்வாளர்களையும் வேண்டுகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment