Sunday, April 19, 2015

இணையதள சேவையில் கட்டுப்பாடு கூடாது...வைகோ!

இணையதள சேவைகள் மக்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள் இணைய சேவைகளை இலவசமாக வழங்குவதால் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன. 

இணையதளம் என்பது நாட்டின் சொத்து. அலைக்கற்றைகள் மூலமாக இணைய சேவை அளிப்பதற்கு மத்திய அரசு உரிமங்கள் தருகின்றது. இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் சில இணையதள தகவல் தொகுப்புகளை கட்டுப்படுத்த விரும்புகின்றன. இதனால் இணைய சமநிலை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

கணினிகள், கைப்பேசிகள், டேப்லட் போன்றவற்றின் மூலம் இணைய சேவையை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் அதற்கு உரிய கட்டணங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் இக்கட்டணங்களை விருப்பம்போல அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ளும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தற்போது இணையதள பக்கங்களை மக்கள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சி செய்கின்றன. 

இணையதள நிறுவனங்கள், வாட்ஸப், பேஸ்புக், ஹைப், யூடியுப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் தயாரிப்பாளர்கள் கட்டணம் செலுத்தினால்தான் அவர்களின் இணையதளங்களை விரைவான வேகத்தில் அளிக்கப்படும். இல்லையேல் குறைந்த வேகத்தில்தான் செயற்படும் என்று கூறுகின்றன. இதனால் இனி இந்த சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். தொலைத் தொடர்பு நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுகுறித்து வரைவு அறிக்கை ஒன்றை மார்ச் 27 ஆம் தேதி மக்கள் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டு இருக்கிறது. 

‘ட்ராய்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதளங்கள் கட்டணம் இன்றி பார்க்கும் வசதி தொடர்ந்தால் தனிமனிதர் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த இணையப் பக்கங்களை காண வேண்டும் என்பதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இணையதள நிறுவனங்கள் அளிக்கும் கட்டணத்திற்கு ஏற்பவே ‘இணையத்தின் வேகம்' இருக்கும் என்பதால் சில இணையதளங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும். இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி இணைய பக்கங்களை பயன்படுத்தும் வாய்ப்பு பறிபோகும். 

இணையதள சமநிலையை சீர்குலைக்கும் வகையில், தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என்று இதுவரை 8 இலட்சம் வாடிக்கையாளர்கள் ‘ட்ராய்'க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். மக்கள் தேவைகளுக்கு ஏற்ப எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி விருப்பம் போல இணையதள சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment