Friday, September 30, 2016

உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்! வைகோ வலியுறுத்தல்!

காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த உச்சநீதிமன்றம், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக அரசு, ‘தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

இதனை ஏற்காத உச்சநீதிமன்றம், ‘செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்காக, இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.

செப்டம்பர் 29 ஆம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறக்க முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கி அமர்வு காவிரி பிரச்சினை குறித்த மனுக்களை விசாரித்தது. ‘கடந்த 20 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, ‘தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை அக்டோபர் 6ஆம் தேதி வரை காவிரியில் திறந்துவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து அவமதித்து வருகின்றது; இதுவே கர்நாடக மாநிலத்திற்குக் கடைசி எச்சரிக்கை’ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; இன்று மாலை 5 மணிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.

அக்டோபர் 1 ஆம் தேதி மாலைக்குள் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் தங்கள் மாநில பிரதிநிதிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் தமிழக, கர்நாடக அணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கின்றது.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதுடன், உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

உள்ளாட்சித் தேர்தலில் பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டி-வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னத்தில் போட்டியிட, மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கழக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதற்குரிய ஆவணங்களை மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, September 29, 2016

காவிரி மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ப்பு!

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று 29-09-2016 கரூர் வேலாயுதம்பாளையத்தில் மணற் கொள்ளைக்கு எதிராக உண்ணாநிலை போராட்டம் நடந்தது. இதில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

உண்ணாநிலை போராட்டத்தின் இறுதி நிகழ்வாக வைகோ அவர்கள் நிறைவு பேருரை ஆற்ற வந்த போது, அது வரை பொருத்து இருந்த கரிய மேகங்கள் அடர் மழையாய் கொட்ட ஆரம்பிக்க மழையின் வேகம் கூடியது. இடியாய் முழங்கினார் வைகோ. 

காவிரி பிரச்சனை குறித்து புள்ளி விவரங்களோடு உரையாற்றினார். மணற் கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

காவிரி நீர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சகோதரர் விஸ்வநாதனை மணற் கொள்ளையர்கள் வீடு தேடி வந்து மிரட்டல் விடுத்து சென்றதாக சொன்னார்கள். 

நான் விஸ்வநாதனை இந்த தகவல் அறிந்து தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவரிடம் சொன்னேன், நான் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் வந்து தங்குகிறேன் என்றேன். 

யார் மிரட்ட முடியும். இது விஸ்வநாதனுக்கான மிரட்டலாக எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவில் இருந்த விஸ்வநாதன் பல ஆண்டுகளுக்கு பிறகு தாய் மண்ணிற்கு வந்து குடியேறி இருக்கிறார். தமிழர்களுக்காக உழைக்கிறார். காவிரி மணற் கொள்ளை பிரச்சனையில் முன்னின்று போராடுகிறார். 

அவருக்கு ஊறு விளைவிக்க நினைக்கும் குண்டர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அவரின் பின்னால் நாங்கள் இருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள். என்ன செய்துவிட முடியும் என உணர்ச்சிபூர்வமாக வைகோ உரையாற்றினார். 

உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு பழச்சாறு கொடுத்து நிறைவு செய்து வைப்பது வழக்கம். ஆனால் மழையே அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டது. உங்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்து இருக்கிறது என்றார். 

உண்ணாவிரத பந்தலில் வைகோ. நல்லக்கண்ணு, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, தமிழ் புலிகள் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

வைகோ அவர்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து விட்டு கலிங்கப்பட்டி நோக்கி புறப்பட்டார். மாவட்ட எல்லையில் நிர்வாகிகள் தலைவரை வழி அனுப்பி வைத்தனர். 

ஓமன் மதிமுக இணையதள அணி

கீழடி தொல்லியல் அகழ்வு கள அருங்காட்சியகம் அமைத்திட நிலம் ஒதுக்கீடு செய்க! தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

பழந்தமிழர் நாகரிகம், கலை, பண்பாட்டு வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பறைசாற்றும் தொல்பொருள் ஆய்வுகள் ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களில் நடைபெற்று, பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. பழந்தமிழகத்தில் நகர நாகரிகம் செழித்து ஓங்கி இருந்ததற்கான சான்றுகள் சிவகங்கை மாவட்டம் - திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வு ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்பட்டு இருக்கின்றன.

அங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் 110 ஏக்கர் நிலப்பரப்பில், தற்போது வெறும் ஐம்பது சென்ட் நிலப்பரப்பில் நடந்த ஆய்வில் மட்டும், தொன்மையான கட்டங்களின் தரைத் தளங்கள், மதில் சுவர்கள், வடிகால்கள் மற்றும் சுடுமண் குழாய்கள் மற்றும் சதுரங்கக் காய்கள், மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுத் தொழிலுக்கான தக்கைகள் போன்றவை கிடைத்துள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் பிராகிருதம் உள்ளிட்ட வேறு மொழிப் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்கள் ரோமாபுரி வரை சென்று வணிகம் செய்ததற்கான ஆவணங்களாக மட்பாண்டங்கள், முத்துக்கள், தந்தத்தால் ஆன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் ஈராயிரம் ஆண்டுக்காலத் தொன்மை குறித்த வரலாற்று ஆவணங்களாக கீழடி அகழ்வு ஆய்வில் கிடைத்த பழங்காலப் பொருட்கள் விளங்குகின்றன.

எஞ்சிய பகுதிகளில் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், சங்க காலத்தில் செழிப்புற்ற தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்து உலகிற்கு மேலும் பற்பல உண்மைகள் தெரிய வரும்.

கீழடியில் கிடைத்த பழங்கால வரலாற்றுப் பொருட்களைக் காட்சிப்படுத்தக் கள அருங்காட்சியகம் அமைக்க மத்திய தொல்லியல்துறை தயாராக இருந்தும், அதற்கான இடம் ஒதுக்கித் தருவதற்கு தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது வேதனை அளிக்கின்றது.

கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு, இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது ஆகும். அரசு நிலம் ஒதுக்கீடு செய்து தராவிட்டால், அங்கு அகழ்வராய்ச்சில் கிடைத்த பழங்காலப் பொக்கிஷங்கள் அனைத்தும் மூட்டை கட்டி, மைசூரில் உள்ள மத்திய அகழ்வுப் பிரிவின் கிட்டங்கியில் கொண்டுபோய்ப் போடப்படும் நிலைமை ஏற்படும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் கள அருங்காட்சியகம் அமைக்கத் தேவையான நிலத்தைத் தமிழக அரசு உடனடியாக ஒதுக்கித் தர வேண்டும்.

அத்துடன், அகழ்வு ஆய்வுப் பணிகள் முழுமையாக நடைபெற்றிடத் தொல்லியல் துறைக்குத் தேவையான உதவிகளையும் செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, September 28, 2016

காவிரி ஆற்று மணல் குவாரிகளை ரத்து செய்ய வைகோ பங்கேற்க்கும் உண்ணா நிலை போராட்டம்!

காவிரி ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை 29-09-2016 வியாழன் அன்று உண்ணாநிலை அறப்போராட்டம் நடக்கிறது. 

இந்த உண்ணா நிலை அற போராட்டத்தை முடித்து வைத்து தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். 

இந்திய பொதுவுடமை கட்சி நல்லக்கண்ணு, திருமாவளவன், டி.கே.ரங்கராஜன், இனமான நடிகர் சத்தியராஜ், வானதி சீனிவாசன், கோவை ராமகிருஷ்ணன், பாமக வழக்கறிஞர் பாலு, காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். 

கழக கண்மணிகளும், காவிரி ஆற்றின் மேல் பற்றுள்ள தமிழர்களும் கலந்துகொண்ண்டு போராட்டத்தை வெற்றியடைய செய்வதன் மூலம் தமிழக இந்திய அரசுகளை மணல் கொள்ளையை தடுக்க செய்யவும், காவிரி நீரை தமிழகத்திற்கு விட வைக்கவும் முடியும். 

எனவே ஏராளமாக கலந்துகொண்டு வாழ்வாரத்தை காக்குமாறு அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

காவிரி பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை. தமிழகம் பங்கேற்கக் கூடாது; பங்கேற்றால் அது பெருங்கேடு என வைகோ எச்சரிக்கை!

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்படியான கடமைதான் கர்நாடகத்திற்கு உண்டே தவிர, இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

1974 க்குப் பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. எனவேதான், 1990, ஏப்ரல் 24 இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலைமையிலான அமர்வு, காவிரி நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில்தான் வி.பி.சிங் அரசு 1990, ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. அம்மன்றம், 1991, ஜூன் 25 ஆம் தேதி இடைக்காலத் தீர்ப்பை அளித்தது.

இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் கர்நாடகாவில் அப்போதைய பங்காரப்பா அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதற்கு உச்சநீதிமன்றம் கர்நாடக மாநில அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கர்நாடக அரசு கொண்டு வந்த சட்டத்தையும் இரத்து செய்தது.

அதன் பின்னர் 1991, டிசம்பர் 11 இல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டபோது கர்நாடக அரசு தமிழர்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கர்நாடகாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டு தமிழகத்திற்கு அகதிகளாக வரும் நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.

2007, பிப்ரவரி 5 இல் காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய பிறகும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடக மாநிலம் அடாவடித்தனமாகச் செயல்பட்டது.

கர்நாடக மாநிலம் காவிரிப் பிரச்சினையில் அரசியல் சட்டத்தையோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையோ நடைமுறைப்படுத்தாமல் காலில் போட்டு மிதித்து வருகின்றது. எனவேதான் தற்போதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

இந்நிலையில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சில குரல்கள் எழுவது தமிழகத்திற்குப் பெருங்கேடாகத்தான் முடியும். காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழு அமைப்பது மட்டும்தான் ஒரே தீர்வு ஆகும். இதைத்தான் உச்சநீதிமன்றமும் தெளிவாகத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கர்நாடக மாநிலம் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.

அதைத் தவிர, கர்நாடக மாநிலத்தின் சட்ட விரோதப் போக்குகளை அனுமதிப்பதோ, மீண்டும் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் விழுவதோ, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழி இல்லாமல் போகும் ஆபத்து நேரிடும் என எச்சரிக்கை செய்கின்றேன்.

மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறைக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என வைகோ தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி