Wednesday, September 7, 2016

தமிழகத்தில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலைக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்! நாகை செல்வராஜ் மறைவுக்கு வைகோ இரங்கல்!

காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல், கர்நாடக மாநிலம் வஞ்சித்து வருவதால், காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா பயிர் சாகுபடி பொய்த்து விடுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துள்ள துயரச் செய்தி, வேதனை அளிக்கின்றது.

மயிலாடுதுறை அருகே கடலங்குடி மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் ஒரு ஏக்கர் நிலத்தில் வட்டிக்குக் கடன் வாங்கி குறுவைப் பயிர் சாகுபடி செய்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் அறுவைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிவிட்டன. இதனால் மிகுந்த வருத்தமுற்ற செல்வராஜ் சேத்திரபாலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மறு சாகுபடிக்கு கடன் கேட்டுள்ளார். அவர்கள் கடன் தர மறுத்துவிட்டதால் மனமுடைந்த செல்வராஜ் வயலுக்குச் சென்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி விட்டார். திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்ற வழியில் உயிர் இழந்துள்ளார்.

அதிமுக அரசு பொறுப்பு ஏற்றபோது, கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள 5780 கோடி ரூபாய் அளவுக்கான பயிர்க்கடன் நடுத்தர, குறுகிய, நீண்ட கால கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

இதில் 2.5 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்து இருப்போர் சிறு விவசாயிகள் என்றும், 2.5 ஏக்கர் வரை வைத்து இருப்போர் குறு விவசாயிகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறு, குறு விவசாயிகள் என்று பராபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்கவில்லை.

நடப்பு ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்கள் பயிர்க் கடன் வழங்க ஆறு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் 2016 -17 நிதி நிலை அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால், நடைமுறையில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாத நிலைமைதான் தொடர்கிறது என்பதை மயிலாடுதுறை விவசாயி செல்வராஜ் தற்கொலை உணர்த்துகின்றது.

தஞ்சை சோழகன்குடிகாட்டைச் சேர்ந்த விவசாயி பாலன், கோட்டாக் மகிந்திரா தனியார் வங்கியில் வாங்கிய கடன் நிலுவையை வசூலிக்கச் சென்ற வங்கி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் விவசாயி பாலனை அடித்து உதைத்து இழுத்துச் சென்ற கொடுமை கண்டு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு எழுந்தது.

அரியலூர் மாவட்டத்தில் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர், சோழமண்டலம் நிதி நிறுவனம் என்ற தனியாரிடம் கடனுக்கு டிராக்டர் வாங்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தார். மொத்தம் 7 இலட்ச ரூபாய் பெற்ற கடனில், 5 இலட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்திவிட்ட நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள் பாக்கித் தொகையைச் செலுத்துமாறு நிர்பந்தம் செய்தது மட்டுமின்றி, அவரைத் தாக்கிவிட்டு டிராக்டரையும் பறிமுதல் செய்து கொண்டு போய்விட்டனர். மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி அழகர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணத்தில் கடன் தொல்லையால் தனசேகர் என்ற விவசாயி உயிரை மாய்த்துக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம்-திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற விவசாயியும், அவரது மனைவி பழனியம்மாளும் விளைபொருளுக்குச் சரியான விலை கிடைக்காமல் நட்டம் ஏற்பட்டதால் கடந்த மே மாதம் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செது கொண்டனர்.

இவ்வாறு தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. எனவே, தமிழக அரசு விவசாயிகளின் நலனில் முழு அக்கறை செலுத்த வேண்டும்.

மயிலாடுதுறையில் கூட்டுறவு வங்கிக் கடன் கிடைக்காமல், தற்கொலை செய்து கொண்ட விவசாயி செல்வராஜ் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், 20 இலட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment