Tuesday, September 13, 2016

கர்நாடக தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வைகோ அறிக்கை!

காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரித்து ஆடுகிறது. கன்னட வெறியர்கள் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களைத் தேடித் தேடி தீ வைத்ததில், தனியார் பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் நூற்றுக்கணக்கில் சாம்பலாக்கி உள்ளன.

பெங்களூருவில் தமிழர்களின் சிறு வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமிமன்றி, பூட்டிய கடைகளை உடைத்துத் திறந்து தீ வைத்து எரித்து உள்ளனர். இதனால் தமிழர்களின் கோடிக்கணக்கhன ரூபாய் மதிப்புடைய உடைமைகள் எரிந்து நாசமாகிவிட்டன. பெங்களூரு, மாண்டியா மற்றும் மைசூர் உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வன்முறையாளர்கள் இனவெறிப் பித்தம் தலைக்கு ஏறி தாண்டவமாடி வருகின்றனர்.

1991 ஜூன் 25 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியபோது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் சொத்துகள் நாசமாக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக ஆகிற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. அதே போன்ற ஒரு சூழல் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கர்நாடகhவில் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தி, தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தருவதால், கர்நாடகம் பற்றி எரிகிறது என்ற தோற்றத்தை உருவாக்கிட, தமிழ்நாட்டு எதிர்ப்புப் போராட்டங்களை கர்நாடக அரசே பின்னணியில் இருந்து இயக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு கர்நாடக மாநிலத்தை அறிவுறுத்த வேண்டிய மத்திய அரசு நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மௌன சாட்சியாக அமைதியாக இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

மத்திய பாரதிய ஜனதா அரசு, தமிழர் விரோத போக்குகிற்கு துணைபோய் கொண்டிருப்பது மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும். கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு இருக்கிறது என்பதை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

இலட்சக்கணக்கhன தமிழர்கள் பல ஆண்டுகளாக கர்நாடகத்தில் வசித்து வருகின்றனர். தமிழர்களின் வணிக நிறுவனங்கள் ஏராளமானவை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் உணர்ச்சிக்கு இடமளிக்கும் விதத்தில் கன்னடர் மீதும், அவர்களது நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டால் அவை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். தமிழகம் ஓரணியில் திரண்டு நின்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட மத்திய அரசுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment