Tuesday, September 20, 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை இன்று (20.09.2016) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.


காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை என்று நாம் கூறி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கையைச் செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. 

காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆறு ஆண்டுக் காலம் தாமதித்துதான் மத்திய அரசு மார்ச் 19, 2013 இல் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியவாறு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வந்தது.

தற்போது உச்ச நீதிமன்றம் சட்டப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டதின் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறைக் குழுவையும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment