Monday, October 31, 2016

தற்காலிக தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர் ஊதியம் வழங்க மதொமு ஆவடி அந்தரிதாஸ் அறிக்கை!

ஒப்பந்த, தற்காலிக, தினசரித் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்குரிய ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்திட வேண்டுமென்று மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆவடி அந்தரிதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் இந்த இணைப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

2016 நவம்பர் 1 ஆம் நாள், தமிழ்நாட்டுக்கு 60 ஆம் ஆண்டு விழா! வைகோ அறிக்கை!

1956 ஆம் ஆண்டு, மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது, இன்றைய வரைபடம் கொண்ட தமிழ்நாடு அமைந்தது. சங்ககாலத் தமிழகத்தின் பல பகுதிகளை நாம் இழந்து விட்டோம்.

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார், ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்றார்.

இன்று திருப்பதி எனப்படும் திருமலைதான் தமிழகத்தின் வடக்கு எல்லையான வேங்கடம் ஆகும்.

முன்பு, தமிழ்ப் பகுதிகளாக இருந்து, ஆந்திராவுடன் பின்னர் இணைக்கப்பட்ட சித்தூர் மாவட்டத்தின் 19,200 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பின் பெரும்பகுதியும், 13000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள நெல்லூர் மாவட்டத்தின் கணிசமான பகுதியும் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். அது நடக்காததால், வட பெண்ணை ஆறு, ஆரணி ஆறு, பொன்வாணி ஆறு உள்ளிட்ட, இன்றைக்குப் பிரச்சினை ஆகிவிட்ட பாலாற்றின் பகுதிகளையும் தமிழகம் இழந்தது. ஆந்திராவில் சேர்ந்தது.

இந்நிலையில், 1954 ஆம் ஆண்டு, பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் அரசு, பசல் அலி தலைமையில் மாநில எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தது. அவர் பீகாரைச் சேர்ந்தவர், 3 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில், கே.எம்.பணிக்கர் என்ற கேரளத்தவரும், எஸ்.என். குஸ்ரூ என்ற வட மாநிலத்தவரும் இடம் பெற்றனர். தமிழர் எவரும் இதில் உறுப்பினராக இடம் பெறவில்லை.

இந்த ஆணையம், 1955 அக்டோபர் 10 ஆம் நாள் அளித்த பரிந்துரையில், சென்னை மாகாணத்தில் இருந்த மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தைக் கர்நாடகத்துடனும் சேர்த்து விட வேண்டும்; திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் இருந்த கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டையில் பாதி ஆகிய தமிழ் வட்டங்களைத் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும்; தேவிகுளம் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள், திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலேயே நீடிக்க வேண்டும் என்றும்; சென்னை மாகாண ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை, அதற்கென நியமிக்கப்பட்ட எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் திருத்தி அமைக்க வேண்டும் எனவும் பரிந்துரைகள் அளித்தது. அதன்படி அமைக்கப்பட்ட நீதிபதி வாஞ்சு குழு, சென்னை மாநகர் ஆந்திராவின் தலைநகராக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

சென்னை மாநகரைத் தமிழ்நாட்டுக்கும் ஆந்திரத்திற்கும் பொதுத் தலைநகராக ஆக்கலாம் என பண்டித நேரு யோசனை தெரிவித்தார்.

அதனைத் தமிழக முதல்வர் ராஜாஜி கடுமையாக எதிர்த்தார்; வேண்டுமானால் என்னை நீக்கி விட்டு வேறு முதல்வரைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் போர்க்குரல் தொடுத்தார். அதனால் சென்னை மாநகர் பாதுகhக்கப்பட்டது.

இந்நிலையில், மொழிவழியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் திசை திருப்ப, தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என இந்தியாவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று நேரு சொன்னார்.

தட்சிணப் பிரதேசம் என்பது, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

இதனை எதிர்த்து 1956 ஜனவரி 27 இல், சென்னையில் ஜி. உமாபதி அவர்களின் இல்லத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன்; தமிழரசுக் கழகத்தின் சார்பில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., டி.கே.சண்முகம்; கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் ஜீவானந்தம், மணலி கந்தசாமி; சோசலிஸ்ட் கட்சி சார்பில் க. நல்லசிவம், சின்னசாமி; ஜஸ்டிஸ் கட்சி சார்பில் தமிழவேள் பி.டி. ராசன்; வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு சார்பில் விநாயகம்; மற்றும் பாவேந்தர் பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், கா. அப்பாத்துரையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மத்திய அரசு மொழிவழி மாநிலக் கோரிக்கையை ஏற்கhததைக் கண்டித்தும், தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்தும், 1956 பிப்ரவரி 20 ஆம் நாள் தமிழகம் முழுவதும் கடை அடைப்பு, பொது வேலை நிறுத்தம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. மிகப்பெரிய எழுச்சியோடு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.

தந்தை பெரியார், முதல் அமைச்சர் காமராசர் அவர்களுக்கு அனுப்பிய தந்தியில், ‘தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது, தமிழர்களுக்கு வாழ்வா? சாவா? என்பது போன்ற உயிர்ப் பிரச்சினை ஆகும்; அப்படி நடந்தால், இதுவரை நடந்திராத கிளர்ச்சிக்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகும்; தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மொழிவாரி மாநில அமைப்புகள், 1956 நவம்பர் 1 ஆம் நாள், சட்டப்படிப் பிரிக்கப்பட்ட மாநிலங்களாக அதிகாரம் பெற்றன.

தமிழகம் இழந்த பகுதிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வேதனை ஒருபக்கம் இருப்பினும், இன்றைய தமிழ்நாடு வரைபடமாக உருவான 60 ஆம் ஆண்டில், தமிழர் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழ்நாடு என்று அமைக்க உயிர்நீத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, போராடிய தலைவர்களை மனதால் போற்றுவோம் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, October 30, 2016

தேவர் சிலைக்கு வைகோ மாலையணிவித்து மரியாதை!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேற்று தமிழ்நாடு ஹோட்டல் மதுரையில் தங்கினார். இன்று 30-10-2016 காலை தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதற்கு முன்னதாக கூடியிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் பேசினார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து மதுரையில் தேவரின் திருவுருவச் சிலைக்கு வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் 41 வது ஆண்டாக வந்து, மலர்வளையம் வைத்து வணங்கி புகழஞ்சலி செலுத்தினார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.

உடன் கழக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, October 29, 2016

சத்தியம் டிவியில் வைகோ பங்கெடுத்த கேள்வி கணைகள் நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சத்தியம் டிவி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளித்தார்.

இந்த கேள்விகணைகள் நிகழ்ச்சி இன்று மாலை 7.30 மணிக்கு முடிந்தது. ஆனால் மறு ஒளிபரப்பு 30-10-2015 நாளை மாலை 3.30 மணிக்கும், 31-10-2016 திங்கள் காலை 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

கழக கண்மணிகள் இன்று தவறவிட்டோர் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, October 27, 2016

தீபாவளி முன் பணம் உடனே வழங்க மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்!

மதிமுகவின் தொழிலாளர் அமைப்பான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவர் இரா.அந்திரிதாஸ் அவர்கள் அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன் பணத்தை உடனே வழங்கிட வேண்டுமென அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை நகல் இணைக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, October 26, 2016

ஈழ மாணவர் படுகொலையை கண்டித்து, இலங்கை தூதரகம் முற்றுகை!

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், கடந்த 20 ஆம் தேதி ஈழத்தில் போலீசாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் நீதி வேண்டி, அந்த படுகொலையை கண்டித்து இன்று காலை சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினை முற்றுகையிட்டனர்.

இதில் தமிழர் அமைப்புகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விசிக தலைவர் தொல் திருமாவளவன், கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ட்ருட்டி வேல்முருகன் மற்றும் முக்கிய ஈழ ஆதரவான தலைவர்களும் தொண்டர்களும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்: சர்க்கரை ஆலைகளிடமிருந்து நிலுவைத்தொகையை பெற்றுத்தர தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ அறிக்கை!

தமிழக அரசு 2013-14 ஆம் ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு வாகன வாடகை ரூ.100 சேர்த்து ரூ.2650 என்று நிர்ணயம் செய்தது. ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு நிர்ணயித்த கரும்பு கொள்முதல் விலையை தராமல் கரும்பு விவசாயிகளை அலைக்கழித்து, அரசின் பரிந்துரை விலையில் விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 300 குறைத்து வழங்கின. அந்த வகையில் 2013-14 ஆம் ஆண்டு ரூ.300 கோடியும், 2014-15 இல் ரூ.250 கோடியும், 2015-16 இல் ரூ.450 கோடியும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

2013 ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத்தரக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துப் போராடி வருன்றனர்.

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அறிவித்தார். ஆனால், தமிழக அரசு இதுவரையில் அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது கரும்பு விவசாயிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்வேறு இன்னல்களுடன் கடன் சுமைகளைத் தாங்கிக் கொண்டும், தங்க நகைகளை அடகு வைத்தும் விவசாயிகள் கரும்பு உற்பத்தி செய்து, சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிவிட்டு, அரசு நிர்ணயம் செய்துள்ள கொள்முதல் விலையைக் கூடப் பெற முடியாமல் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், 2004-09 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு தனியார் ஆலைகள் தரவேண்டிய லாபப் பங்குத் தொகை ரூ.350 கோடியை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தர மறுக்கின்றனர். எனவே, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை இரண்டு ஆயிரம் கோடி ரூபாயை 15 விழுக்காடு வட்டியுடன் மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.

2016-17 ஆம் ஆண்டு நடப்பு கரும்புப் பருவத்திற்கு மத்திய அரசு கொள்முதல் விலையை உயர்த்தாமல், கடந்த ஆண்டு வழங்கிய விலையான ரூ. 2ஆயிரத்து 300 மட்டுமே நிர்ணயம் செய்தது விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. தமிழக அரசு நடப்பு கரும்புப் பருவத்திற்கு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர். நேற்று இரவு காவல்துறையினர் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்துள்ளனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சர்க்கரை ஆலை நிர்வாகங்களை அறிவுறுத்தி, கரும்பு விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுசை வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, October 25, 2016

மமக, பாபிஆஇ நிர்வாகிகள் வைகோவுடன் சந்திப்பு!

மமக, பாபிஆஇ நிர்வாகிகள் வைகோவுடன் சந்திப்பு!

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று மாலை 5:30 மணியளவில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை, மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு: ஜவாஹிருல்லா அவர்கள் மற்றும் பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா திரு: அப்போலோ ஹனீபா ஆகியோர் நிர்வாகிகளோடு சந்தித்தனர்.

அப்போது பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவுக்கோரி கடிதத்தை வழங்கி வேண்டுகோள் விடுத்தார்கள்.

தகவல்: சேது முத்தையா

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, October 24, 2016

வைகோவுடன் திருமாவளவன் முக்கிய ஆலோசனை!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், திமுக அழைத்திருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு செல்வதா, இல்லையா என விசிக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு இன்று இரவு 11.30 மணி அளவில் வைகோ அவர்களை சந்தித்து,  ஆலோசனை நடத்தினார். 

அப்போது மதிமுக, விசிக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி