மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 34 காசும், டீசல் விலையை 2 ரூபாய் 37 காசும் உயர்த்தி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 50 முதல் 51.95 அமெரிக்க டாலர் அளவுதான் நீடிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அரசு பதவி ஏற்ற மே 2014, இல் கச்சா எண்ணெய் விற்பனை விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 2016 இல் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 விழுக்காடு அளவுக்கு குறைந்து இருக்கிறது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு சாதாரண மக்கள் மீது சுமையை ஏற்றுவது கண்டனத்துக்கு உரியது ஆகும்.
மேலும் பெட்ரோல், டீசலுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதால், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும் அதன் பயன் மக்களுக்குக் கிடைக்கவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஐந்து முறை அதிகரித்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தாமலிருந்தால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.10.02, டீசலின் விலை ரூ.9.97 என்ற அளவில் குறைக்க முடியும். ஆனால், மக்களிடம் பகல் கொள்ளை அடிப்பதற்காகவே பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பது மட்டுமின்றி, கலால் வரியையும் மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
உணவுப் பொருட்களின் விலை 3.88 விழுக்கhடு அளவு உயர்ந்து இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போய் மக்கள் அல்லல் படும் நிலைமை உருவாகும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment