மக்கள் நலக்கூட்டு இயக்க கட்சிகளின் கூட்டறிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து 7.10.2016 அன்று டெல்டா மாவட்டங்களில் மக்கள் நலக் கூட்டு இயக்கம் - கண்டன ஆர்ப்பாட்டம்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் அக்டோபர் 4-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இன்று (3.10.2016) மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது” என்றும் தெரிவித்து இருக்கின்றது.
அரசியல் சட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு இக்கடமையினை நிறைவேற்ற தவறிவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதை நிறைவேற்ற மறுப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகத்திற்கு ஆதரவாக இவ்வாறு தெரிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய பாஜக அரசின் இந்நிலைபாடு கூட்டாட்சி கோட்பாட்டிற்கே விரோதமானது.
அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் விரோதமாக நடந்து கொள்ளும் மத்திய பாஜக அரசின் அணுகுமுறையை கண்டித்து 7.10.2016 அன்று தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சகோதர அமைப்புகள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என மக்கள் நலக் கூட்டியக்க தலைவர்களான, வைகோ - பொதுச்செயலாளர் - மதிமுக, ஜி. ராமகிருஷ்ணன் -செயலாளர் - சிபிஎம், தொல்.திருமாவளவன் -தலைவர் - விசிக, ஆர்.முத்தரசன் - செயலாளர்-சிபிஐ ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment