1956 ஆம் ஆண்டு, மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது, இன்றைய வரைபடம் கொண்ட தமிழ்நாடு அமைந்தது. சங்ககாலத் தமிழகத்தின் பல பகுதிகளை நாம் இழந்து விட்டோம்.
தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார், ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்றார்.
இன்று திருப்பதி எனப்படும் திருமலைதான் தமிழகத்தின் வடக்கு எல்லையான வேங்கடம் ஆகும்.
முன்பு, தமிழ்ப் பகுதிகளாக இருந்து, ஆந்திராவுடன் பின்னர் இணைக்கப்பட்ட சித்தூர் மாவட்டத்தின் 19,200 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பின் பெரும்பகுதியும், 13000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள நெல்லூர் மாவட்டத்தின் கணிசமான பகுதியும் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். அது நடக்காததால், வட பெண்ணை ஆறு, ஆரணி ஆறு, பொன்வாணி ஆறு உள்ளிட்ட, இன்றைக்குப் பிரச்சினை ஆகிவிட்ட பாலாற்றின் பகுதிகளையும் தமிழகம் இழந்தது. ஆந்திராவில் சேர்ந்தது.
இந்நிலையில், 1954 ஆம் ஆண்டு, பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் அரசு, பசல் அலி தலைமையில் மாநில எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தது. அவர் பீகாரைச் சேர்ந்தவர், 3 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில், கே.எம்.பணிக்கர் என்ற கேரளத்தவரும், எஸ்.என். குஸ்ரூ என்ற வட மாநிலத்தவரும் இடம் பெற்றனர். தமிழர் எவரும் இதில் உறுப்பினராக இடம் பெறவில்லை.
இந்த ஆணையம், 1955 அக்டோபர் 10 ஆம் நாள் அளித்த பரிந்துரையில், சென்னை மாகாணத்தில் இருந்த மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தைக் கர்நாடகத்துடனும் சேர்த்து விட வேண்டும்; திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் இருந்த கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டையில் பாதி ஆகிய தமிழ் வட்டங்களைத் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும்; தேவிகுளம் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள், திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலேயே நீடிக்க வேண்டும் என்றும்; சென்னை மாகாண ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை, அதற்கென நியமிக்கப்பட்ட எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் திருத்தி அமைக்க வேண்டும் எனவும் பரிந்துரைகள் அளித்தது. அதன்படி அமைக்கப்பட்ட நீதிபதி வாஞ்சு குழு, சென்னை மாநகர் ஆந்திராவின் தலைநகராக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
சென்னை மாநகரைத் தமிழ்நாட்டுக்கும் ஆந்திரத்திற்கும் பொதுத் தலைநகராக ஆக்கலாம் என பண்டித நேரு யோசனை தெரிவித்தார்.
அதனைத் தமிழக முதல்வர் ராஜாஜி கடுமையாக எதிர்த்தார்; வேண்டுமானால் என்னை நீக்கி விட்டு வேறு முதல்வரைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் போர்க்குரல் தொடுத்தார். அதனால் சென்னை மாநகர் பாதுகhக்கப்பட்டது.
இந்நிலையில், மொழிவழியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் திசை திருப்ப, தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என இந்தியாவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று நேரு சொன்னார்.
தட்சிணப் பிரதேசம் என்பது, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
இதனை எதிர்த்து 1956 ஜனவரி 27 இல், சென்னையில் ஜி. உமாபதி அவர்களின் இல்லத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
தி.மு.கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன்; தமிழரசுக் கழகத்தின் சார்பில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., டி.கே.சண்முகம்; கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் ஜீவானந்தம், மணலி கந்தசாமி; சோசலிஸ்ட் கட்சி சார்பில் க. நல்லசிவம், சின்னசாமி; ஜஸ்டிஸ் கட்சி சார்பில் தமிழவேள் பி.டி. ராசன்; வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு சார்பில் விநாயகம்; மற்றும் பாவேந்தர் பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், கா. அப்பாத்துரையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு மொழிவழி மாநிலக் கோரிக்கையை ஏற்கhததைக் கண்டித்தும், தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்தும், 1956 பிப்ரவரி 20 ஆம் நாள் தமிழகம் முழுவதும் கடை அடைப்பு, பொது வேலை நிறுத்தம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. மிகப்பெரிய எழுச்சியோடு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.
தந்தை பெரியார், முதல் அமைச்சர் காமராசர் அவர்களுக்கு அனுப்பிய தந்தியில், ‘தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது, தமிழர்களுக்கு வாழ்வா? சாவா? என்பது போன்ற உயிர்ப் பிரச்சினை ஆகும்; அப்படி நடந்தால், இதுவரை நடந்திராத கிளர்ச்சிக்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகும்; தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
மொழிவாரி மாநில அமைப்புகள், 1956 நவம்பர் 1 ஆம் நாள், சட்டப்படிப் பிரிக்கப்பட்ட மாநிலங்களாக அதிகாரம் பெற்றன.
தமிழகம் இழந்த பகுதிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வேதனை ஒருபக்கம் இருப்பினும், இன்றைய தமிழ்நாடு வரைபடமாக உருவான 60 ஆம் ஆண்டில், தமிழர் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழ்நாடு என்று அமைக்க உயிர்நீத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, போராடிய தலைவர்களை மனதால் போற்றுவோம் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment