Monday, July 31, 2017

மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் வீரசந்தனம் நினைவேந்தல்!

மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவிலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் தமிழீழ போராளி வீரசந்தனம் அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று 31-07-2017 மாலை 5 மணி அளவில் நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அப்போது ஓவியர் வீரசந்தனம் அவர்கள் பட திறப்பதற்காக, ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் விரும்பிய ஒரே தலைவர் வைகோ அவர்கள் மட்டுமே. எனவே வைகோ அவர்கள் தான் ஓவியரின் படத்தை திறந்து வைக்க வேண்டும் என கவிஞர் காசி.ஆனந்தன் அழைக்க தலைவர் வைகோ அவர்கள் ஓவியரின் படத்தை திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீர.சந்தனம் அவர்களின் மகள் சங்கீதா அவர்கள் கண்ணீர் மல்க வருகை தந்தவர்களுக்கு நன்றி உரை வழங்கினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

தமிழ் தேசிய போராளி ஓவியர் வீரசந்தனம் நினைவேந்தல்

தமிழ் தேசிய போராளி ஓவியர் வீரசந்தனம் நினைவேந்தல் கூட்டம் இன்று 31/07/2017 மாலை 3 மணிக்கு, சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் வைத்து நடக்கிறது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்துகிறார்.


கழக கண்மணிகள் வருகை தந்து போராளியை நினைவு கூர்க.

ஓமன் மதிமுக இணையதள அணி

மேல்புறம் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்!

மேல்புறம் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டமானது 30-07-2017 அன்று குமரி மாவட்ட செயலாளர் திரு வெற்றிவேல் அவர்கள் தலைமையில் இனிதே நடைப்பெற்றது.

கூட்டத்தில் மேல்புறம் ஒன்றிய செயலாளர் திரு கே ஆன்றனி அவர்களும் திருவட்டார் ஒன்றிய செயலாளர் திரு சேம்ராஜ் அவர்களும் கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் திரு ராமகிருஷ்ணண் அவர்களும் மற்றும் சிலரும் உரையாற்றிநார்கள். 

கூட்டத்தில் அதிக இடங்களில் மாநாட்டு மேல்புறம் ஒன்றியத்திலிருந்து சுவர் விளம்பரங்களும் இன்னும் அதிகமாக கழக கொடிகள் ஏற்றவும் வருகிற செப்டம்பர் 15ம் நாள் தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டிற்கு நூறு பேருக்கு குறையாமல் செல்லவும் திர்மானிக்கப்பட்டது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, July 29, 2017

மதிமுக மாணவர் அணி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தாயகத்தில்!

மறுமலர்ச்சி தி.மு.க., மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள்/துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், 29.07.2017 சனிக்கிழமை தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண். 1
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குக் கோரி மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களைத் தலைநிமிரச் செய்த திராவிட இயக்கத்தின் மூலக்கொள்கை இடஒதுக்கீடு - சமூக நீதி ஆகும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போராடிப் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் தகர்த்திடும் வகையில், நீட் தேர்வு என்கிற பெயரால் தகுதித் தேர்வைப் புகுத்தி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி பயிலும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குக் கோரியும், ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி சார்பில், 10.08.2017 வியாழக்கிழமை அன்று தலைநகர் சென்னையில் மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம் எண். 2
மாணவி வளர்மதியை நிபந்தனை இன்றி விடுதலை செய்க!


மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற உரிமைப் போராட்டங்களை நசுக்கிடும் அடக்குமுறைச் செயலில் ஈடுபட்டுள்ளன.

கதிராமங்கலம் போராட்டத்தை ஆதரித்து துண்டறிக்கை வெளியிட்டதற்காக சேலம் பெரியார் பல்கலைக் கழக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது அடக்குமுறையின் உச்சகட்டமாகும்.

தன்னெழுச்சியாக உருவாகும் இளைஞர், மாணவர்களின் போராட்டத்தை எந்த அடக்குமுறையாலும் அச்சுறுத்தி ஒடுக்கிவிட முடியாது என்பதை இக்கூட்டம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்வதோடு, கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்; பெரியார் பல்கலைக் கழகம் விதித்த தடையை அகற்றி, மாணவியின் கல்வி பெறும் உரிமையை நிலைநாட்டிட வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 3
தஞ்சை மாநாட்டில் பத்தாயிரம் மாணவர்கள் சீருடையுடன் பங்கேற்பு!


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தஞ்சை மாநகரில் செப்டம்பர் 15 இல் நடைபெறும் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டில், கழக மாணவர் அணி மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் பத்தாயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்றுச் சிறப்பிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம் எண். 4
தஞ்சை மாநாடு விளக்கப் பரப்புரைப் பயணம்!


மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில், தஞ்சை மாநகரில் 15.09.2017 அன்று தமிழினத்தின் ஈடு இணையற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். திராவிட இயக்கப் பகைவர்கள் நாலாத் திசைகளிலும் பெருகிவரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்திடவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்பாடும் தஞ்சை மாநாட்டின் நோக்கங்களைப் பொதுமக்களிடம் பரப்புரை செய்திடவும், கழக மாணவர் அணி சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகள் தாங்கிய அலங்கார ஊர்தி பரப்புரைப் பயணம் மேற்கொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மேலும், தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஈரோடு, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி, நூறு வயதிலும் மது ஒழிப்புக்காகக் களமாடி உயிர்தியாகம் செய்த வீரத்தாய் அன்னை மாரியம்மாள் அவர்களின் தாயகமாம் கலிங்கப்பட்டி ஆகிய மூன்று திருவிடங்களிலிருந்தும் புறப்பட்டு, 20 மாவட்டங்கள் வழியாக 50 இலட்சம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பயணத் திட்டம் வகுத்து பரப்புரை மேற்கொள்வது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண். 5
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கத்திற்கு வரவேற்பு!


ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி லக்சம்பர்க் உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை இக்கூட்டம் வரவேற்கிறது.
இந்திய அரசும் தமிழர் விரோதப் போக்கை மாற்றிக்கொண்டு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உடனடியாக நீக்கிட வேண்டும் என மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தலைவர் வைகோ அவர்கள் 2011 ஜூன் 1ஆம் தேதி ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பிரஸ்ஸல்ஸ் உரையில் முன்வைத்தவாறு, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்திட ஐ.நா. மன்றம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 6
சங்கொலி ஐந்தாண்டுச் சந்தா 1000 சேர்த்திடுவீர்!


தலைவர் வைகோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் திராவிட இயக்கத்தின் ஒரே கருத்துப்பெட்டகமாகத் திகழும் சங்கொலி வார ஏட்டிற்கு, மாணவர் அணியினர் தத்தமது மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து ஆயிரம் ஐந்தாண்டுச் சந்தாக்களை வழங்கிடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்.7
சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்குத் தடையை உடைத்த தலைவர் வைகோவுக்குப் பாராட்டு!


சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றுத் தந்த தலைவர் வைகோ அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் தன்னார்வ அமைப்புகள் அந்த உத்தரவைச் சிறப்பாக செயல்படுத்துவதற்குத் தமிழகம் முழுமையும் பரப்புரை செய்ததோடு, தாமே களத்தில் இறங்கிப் பணியாற்றினார்.

அந்தத் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், 28.07.2017 வெள்ளிக்கிழமை அன்று தாமே வழக்காடி சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை உடைத்த தலைவர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண். 8
மாநில - மாவட்ட நிர்வாகிகளுக்குப் பாராட்டு!


தலைவர் வைகோ அவர்களின் அறிவுரைக்கு இணங்க சீமைக் கருவேல மரங்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாவட்டக் கழகச் செயலாளர்களின் சீரிய வழிகாட்டுதல்படி சிறப்பாக வினியோகம் செய்து சாதனை படைத்த கழக மாணவர் அணியின் மாநில - மாவட்ட நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்.9
கல்லூரிகள் தோறும் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் உருவாக்குதல்!

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மறுமலர்ச்சி மாணவர் மன்றக் கிளைகளை ஏற்படுத்தி, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிப்பது என்றும், ஆங்காங்கே கல்லூரிகள், விடுதிகளில் ஏற்படும் மாணவர் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்திப் போராடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம். 10
மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம்!

மறுமலர்ச்சி தி.மு.க., மாணவர் அணியை வலுப்படுத்தும் வகையிலும், தஞ்சையில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு சிறப்படையவும், அம்மாநாட்டின் நோக்கங்களைப் பிரகடனப்படுத்துகிற வகையில் நடைபெற உள்ள பரப்புரைப் பயணத்துக்கான திட்டங்களை வகுத்திடவும், ஆகஸ்டு 25 முதல் 31 ஆம் தேதி வரை மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு மதிமுக தலைமை நிலையமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி