Friday, July 28, 2017

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-வைகோ அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு ஆகிய நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வேளாண்மைத் தொழிலையே முற்றிலும் அழிக்கும் வகையில் மத்திய அரசு முனைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நூறு நாட்களுக்கும் மேலாக நெடுவாசலில் மக்கள் தன்னெழுச்சியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அறப்போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.


கதிராமங்கலத்திலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் ஆய்வுப் பணிகளை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வரும் தமிழக அரசு, மக்கள் போராட்டங்களைக் காவல்துறை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடலாம் என்று கருதுகின்றது.

இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் ஒரு பேரிடியாக பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் சுமார் 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 57345 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் தமிழக அரசு ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி ஆகிய வட்டங்களில் 25 கிராமங்களும், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, வட்டங்களில் 20 கிராமங்களும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தால் முழுமையாகப் பாதிக்கப்படும். எண்ணெய்க் கிணறுகள், எரிவாயுக் கிணறுகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்தால், கைப்பற்றப்படும் 57345 ஏக்கர் நிலங்கள் மட்டுமின்றி அவற்றைச் சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாழாகும். சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய கேடு உருவாகும்.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் என்ற பெயரில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு போன்றவற்றைச் சேமிக்கக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை கிழக்குக் கடற்கரை மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லவும், ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிடுகின்றது.

காவிரிப் படுகை மாவட்டங்களைக் குறிவைத்து மத்திய அரசு இத்தகைய நாசகாரத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சோழவள நாட்டையே பாலைவனம் ஆக்கி பஞ்சப் பகுதியாக மாற்றிவிடும் பேரபாயம் சூழ்ந்துள்ளது. இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாழாவதுடன், நீர் வளமும் மாசுபட்டுக் குன்றிவிடும். 50 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகும்.

எனவே, மத்திய அரசின் பெட்ரோலியம், இரசயானம் மற்றும் பெட்ரோ ரசாயனம் முதலீட்டு மண்டலம் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைவதற்கு நிலங்களை கையகப்படுத்திட தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்; எக்காரணம் கொண்டும் மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி, ஜூலை 31 ஆம் தேதி மாலை 3 மணி அளவில், கடலூர் மஞ்சக்குப்பம் அஞ்சலகம் அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கழக துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி தொடக்க உரை ஆற்றுவார். மாநில விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், கடலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஜெ.இராமலிங்கம், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ஏ.என்.குணசேகரன், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எÞ.மோகன், விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் க.ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகிப்பர்.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்கும் இந்த அறப்போராட்டத்தில் கழகத் தோழர்களும், விவசாயப் பெருங்குடி மக்களும், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று மத்திய அரசின் நாசகார திட்டங்களைத் தடுத்து நிறுத்த அன்புடன் அழைக்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 28-07-2017 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment