தமிழகத்திற்கு உயிர் வாழ்வாதாரத்தை வழங்கும் காவிரி தீரத்தைப் பாலைவனமாக்கி, கார்ப்ரேட் கம்பெனிகள் எரிவாயு திட்டங்களால் கொள்ளையடிக்க செயல்படுத்த முனையும் மத்திய அரசின் வஞ்சகச் செயலுக்கு தமிழ்நாடு அரசு துணைபோகும் விபரீதம் உருவாகி வருகிறது.
தஞ்சைத் தரணியை பஞ்சப் பிரதேசமாக்கும் திட்டங்களில் ஒன்றான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் விவசாயிகளும், பொதுமக்களும் கடந்த 86 நாட்களாக அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், குடந்தையை அடுத்துள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு திட்டத்திற்கான வேலைகளில் ஈடுபட முயன்றதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்களின் அறப்போராட்டம் எழுந்தது.
எண்ணெய் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு பெருத்த நாசம் விளையக்கூடும் என்ற நிலையில், தாய்மார்களும், பொதுமக்களும் நியாயமான அறப்போர் நடத்தினர். காவல்துறை அடக்குமுறையை ஏவியது. தொடர்ந்து இத்தகைய நாசகார திட்டங்களை எதிர்த்துப் போராடி வருகிற மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் மீது அபாண்டமாகப் பொய் வழக்குப் போட்டு தமிழக அரசின் காவல்துறை அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தது.
இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி அன்று தஞ்சையில் உலகத்தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் பல்வேறு அரசியல் இயக்கங்களும், விவசாய சங்கங்களும் ஆலோசனை மேற்கொண்டு, “ஜூலை 9 ஆம் தேதிக்குள் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பத்துப் பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தைவிட்டு வெளியேற வேண்டும். காவல்துறையினர் திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கைளை நிறைவேற்றாவிடில், அறப்போராட்டத்தினர் சார்பாக ஜூலை 10 ஆம் தேதி கதிராமங்கலத்தை நோக்கி முற்றுகையிடும் அறப்போர் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் காவல்துறை எதிர்மறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை பிணையில் விடுவிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை, குதிரை கீழே தள்ளியது மட்மல்லாமல் குழியும் பறித்ததாம் என்பதற்கு ஒப்ப நேற்று ஜூலை 5ஆம் தேதி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பத்துப் பேர் மீது புதிதாக ஒரு பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 147, 341, 294பி, 353, 506(1)(பி) மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு நாசம் விளைவிக்கும் சட்டத்தின் 31 ஆவது பிரிவின் பேரில் வழகுப் பதிவு செய்து திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏஜெண்ட் வேலை பார்க்கும் அநீதியான இந்த நடவடிக்கை பாசிச அடக்குமுறை நடவடிக்கையாகும்.
அடக்குமுறைச் சட்டங்களாலோ, காவல்துறையின் அநீதியான அடக்குமுறையாலோ, சிறைச்சாலைகளில் அடைப்பதாலோ மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அத்தகைய பாசிச போக்கில் ஈடுபட்ட அரசுகளுக்கு வரலாறு பாடம் கற்பித்து இருக்கிறது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியது தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியின் மன்னிக்க முடியாத குற்றமாகும். இத்தகையப் போக்கு அரசுக்கு எதிராக விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும். இதே எதேச்சதிகார போக்கு நீடிக்குமானால் விநாசகால விபரீத புத்தி என்ற எச்சரிக்கையை நினைவூட்டுகிறேன் என வைகோ தனது இன்றைய 06-07-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment