Sunday, July 2, 2017

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயலும் கர்நாடக வஞ்சகத்திற்கு மத்திய அரசு துணைபோகக் கூடாது-வைகோ வலியுறுத்தல்!

தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, இராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு 5912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தடுப்பு அணைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் ஜூன் 7 ஆம் தேதி அளித்து அனுமதியையும் நாடும் தீவிர நடவடிக்கையில் கர்நாடக மாநில அரசு இறங்கி உள்ளது.

மேகதாட்டு, இராசிமணலில் கட்டப்படும் தடுப்பு அணைகள் மூலம் 67.14 டி.எம்.சி. நீரை தேக்கி வைத்துக்கொள்ளவும், 400 மெகாவாட் நீர் மின்சார உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கர்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. மேலும் 16.1 டி.எம்.சி. நீரை பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் துச்சமாகக் கருதி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் வஞ்சித்து வருகிறது.

கர்நாடகம் மேகதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகள் கட்டினால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது. ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாமல் காவிரிப் படுகையில் 12 இலட்சம் ஹெக்டேர் நிலங்கள் தரிசாகிவிடும். வேளாண்மைத் தொழில் முற்றாக அழிந்து, தமிழ்நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்து ஆடும் ஆபத்து நேரிடும்.

2014 டிசம்பர் 7, 8 தேதிகளில் கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க. மத்திய அமைச்சர் அனந்தகுமார் டில்லி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் அன்றைய மத்திய சட்ட அமைச்சருமான சதானந்த கவுடா, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி தராது என்றும், அணைகள் கட்டும் பணிகளை தொடங்கினால் தடை செய்யாது என்றும் கூட்டத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டது.


தற்போது பா.ஜ.க.வின் கண் அசைவில்தான் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய அரசின் அனுமதியையும் கேட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அலட்சியப்படுத்தும் வகையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வரும் கர்நாடகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு துணைபோவது மட்டுமின்றி, இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை என்று மனுத்தாக்கல் செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

காவிரி நடுவர் மன்ற உத்தரவுப் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தாமல், மத்திய அரசு தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் இழைத்து வருகிறது.

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பறிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு துணைபோகாமல், மேகதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகள் அமைப்பதற்கு மத்திய அரசு நீர்வளத்துறை ஆணையம், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை அளிக்கக் கூடாது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற உத்தரவுப் படியும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 02-07-2017 தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment