இன்று காலையில் அலைபேசியில் வந்த காணொளியைப் பார்த்தேன். இது நடப்பது தமிழ்நாட்டிலா? அல்லது குஜராத்திலா? அல்லது ஒரு பாதிரியாரை உயிரோடு எரித்துக் கொன்றார்களே ஒடிசாவிலே, அதுபோன்ற நிலைமை, தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதா? என்று மிகுந்த கவலையும், வேதனையும் அச்சமும் ஏற்பட்டது.
நான் அந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன். பொதுவாக எளிய மக்கள், கர்த்தரை வழிபட ஜெபக்கூட்டம் நடத்த வசதி இல்லாதவர்கள், ஒரு சாதாரண ஓட்டு வீடுகளில் வழிபாட்டுக் கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். யாரையும் வற்புறுத்துவது இல்லை; மதம் மாறும்படி அழைப்பதும் இல்லை. வாழ்க்கையில் வேதனைப்படுகின்றவர்கள், வழிபாட்டுக்காக அங்கே செல்கின்றார்கள். அங்கே அன்பைப் போதிக்கின்றார்கள்; கருணையைப் போதிக்கின்றார்கள். வெறுப்பைப் போதிப்பது இல்லை. யாரையும் தாக்கச் சொல்லுவது இல்லை.
வலது கன்னத்தில் அடித்தால் உன் இடது கன்னத்தையும் காட்டு என்று இயேசு பெருமான் சொன்னதைப்போல, ஒரு வஸ்திரத்தைப் பறித்துக் கொண்டால், இன்னொரு வஸ்திரத்தையும் கொடு என்ற வசனத்தைப் போலத்தான் அவர்கள் அமைதியாக வழிபாடு செய்கின்றார்கள். ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே தென்பாண்டி மண்டலத்தில் தேவாலயங்கள் கட்டுவதற்கு மன்னர்கள் ஒப்புதல் அளித்தார்கள்.
இந்த மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கின்றது. நாளும் இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகின்றார்கள்; சித்திரைத் திருவிழாவிலும் இலட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றார்கள். அதுபோல இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மசூதிகளில் கூடி அமைதியாக வழிபடுகின்றார்கள்.
கிறித்துவர்கள் மிக அமைதியாக, எந்த இடத்திலும் துளி அளவும் வன்முறையைத் தூண்டுகின்ற வகையில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், சக மனிதனின் கண்ணீரைத் துடைப்பதற்காக, இயேசுநாதரின் மலைப் பிரசங்கத்திலே சொல்லப்பட்டதைப் போல, வருத்தப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள், இரக்கப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள், நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்ற முறையில்தான் இருக்கின்றார்கள்.
நான் போய்ப் பார்த்த இடத்தில் சகோதரர் ரவி ஜேக்கப் என்ற பாதிரியார் தாக்கப்பட்டு இருக்கின்றார். அவரது துணைவியார் சகோதரி பெல்சியாவும் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார்கள்.
நான் காலையில் பார்த்தபோது, இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் நீ பெத்லகேமில் பிறந்தாயாடா? நீ பொட்டைடா? என்கிறார். பெண் என்றால் இழிவானவளா? இதே மதுரை மாநகரில் மன்னன் செய்த தவறைக் கண்டித்து, அவன் உயிர் துறக்கக் காரணமாக இருந்தாளே கண்ணகி, ஒரு பெண்தான். ஒரு சாதாரண வணிகக் குடும்பத்தில் பிறந்தவள், நீதி கேட்டு அரச சபைக்கே சென்று போராடினாள்; நீதிக்காக மன்னன் அந்த இடத்திலேயே உயிர் துறந்த வரலாறு இந்த மதுரை மண்ணுக்கு உண்டு.
இந்து முன்னணிப் பிரமுகர் பேசுவதை அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருக்கின்றார். இவள் யாருடா? உன் வைப்பாட்டியாடா? எல்லாவற்றையும் உடைச்சு நொறுக்கிக் கொளுத்தி விடுவோம் என்ற இந்தக் கொலை மிரட்டல் காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவிக்கொண்டு இருக்கின்றது.
இதில் மிக வேதனை என்ன என்றால், அந்த இந்து முன்னணிக்காரருக்கு ஒரு காவலர் பாதுகாப்பு அளித்துக் கொண்டு நிற்கின்றார். இது என்ன இட்லர் ஆட்சியா? யாருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கின்றீர்கள்? ஒருவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கலாம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணிக்காரர்கள் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றால், அப்படி ஒரு காவலர் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு வந்தால், அந்த நபருக்குத் திமிர் ஏறிப் போகின்றது.
நான் தமிழ்நாடு அரசைக் கேட்கிறேன், எந்த அடிப்படையில் இவர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கின்றீர்கள்? அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்தான் ஆபத்து இருக்கின்றது. எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுக்கின்றீர்களா? என் வீட்டுக்கு இரண்டு டிஎஸ்பிக்களையும், காவலர்களையும் பாதுகாப்பிற்காக பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். நான் அவர்களுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு, இந்தக் காவலர்களை அழைத்துக் கொண்டு போய்விடுங்கள்; நான் மக்களோடு இருப்பவன்; எனக்கு எந்தப் பாதுகாப்பும் தேவை இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
நான் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை. மாநகரக் காவல் ஆணையருக்குச் சொல்லுகின்றேன். இங்கே உளவுத்துறை அதிகாரிகளும் வந்திருக்கின்றார்கள். உங்கள் ஆணையரிடம், துணை ஆணையரிடம் சொல்லுங்கள். எப்ஐஆர் போட்டு இருக்கின்றார்களா? இல்லையா? என்று கேளுங்கள். நாதி இல்லையா? இதற்குள் அந்த நபரைக் கைது செய்து இருக்க வேண்டும். ஆனால் அவனுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளித்து இருக்கின்றீர்கள் என்றால் இதைவிடக் கேடு கெட்ட அரசு தமிழகத்தில் இதுவரை இருந்தது இல்லை.
பாவப்பட்ட ஏழைகள் தங்கள் ஒரு ஓட்டு வீட்டில் ஜெபம் செய்தால் உங்களுக்கு என்ன? இது அங்கே எரிக்கப்பட்ட பைபிள். எரிக்கப்பட்டது மனித நேயம்; எரிக்கப்பட்டது மதச்சார்பு இன்மை. பகவத் கீதையை எரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கின்றோமா? இல்லை. இந்த விவிலியத்தைப் படித்துவிட்டுப் பிடல் கேஸ்ட்ரோ சொன்னார்: என்னை மிகவும் கவர்ந்தது இயேசுவின் மலைப்பிரசங்கம்தான் என்று சொன்னார். அதைத்தான் எரித்து இருக்கின்றீர்கள்.
இந்த இடத்தில் மட்டும், மேலும் நான்கு தேவாலயங்களுக்குச் சென்று போதகர்களை மிரட்டி இருக்கின்றார்கள். இந்த வட்டாரத்தில் 21 தேவாலயங்களை நாங்கள் தகர்க்கப் போகின்றோம் என்றும் எச்சரித்து இருக்கின்றார்கள். ஒலிபெருக்கியை உடைத்து இருக்கின்றார்கள். அங்கே இருக்கின்ற குழந்தைகளை அச்சுறுத்தி இருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. எங்கள் கலிங்கப்பட்டியில் வடக்கத்தி அம்மன் கோவில் இருக்கின்றது. அங்கே மார்ச் 27 ஆம் தேதி கும்பாபிசேகம் கொடை விழாவுக்கு நான் ஏற்பாடு செய்துள்ளேன். என் தலைமையில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களுடைய பட்டிமன்றம் நடைபெற இருக்கின்றது. நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன்.
தமிழக அரசுக்குச் சொல்லுகின்றேன். நீங்கள் மத்திய அரசின் காலடியில் கிடக்கின்றீர்கள். அவர்களுடைய ஆணைகளுக்குக் கீழ்படிந்து நடக்கின்றீர்கள். இதற்காகத் தமிழக மக்கள் உங்களைத் தேர்ந்து எடுக்கவில்லை. சகோதரி ஜெயலலிதா இருந்தபோது வராத ஆணவம் மத்திய அரசுக்கு இப்போது வந்திருக்கின்றது. உங்களைக் கால் மிதியடியாக அல்ல, தரை விரிப்பாக நடத்தலாம் என்கின்ற திமிர் பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் வந்திருக்கின்றது. தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலையை இப்போது உருவாக்க முனைகின்றார்கள்.
ஆனால், தமிழகத்தில் இந்துக்கள் இத்தகைய வன்முறைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கோவில்களுக்குச் செல்கின்ற மக்கள்,தேவாலயங்களைத் தாக்குவதை அனுமதிக்க மாட்டார்கள்.
தாக்குதல் நடத்தியவர்களைக் காவல்துறை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ரௌடிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்காதீர்கள். உடனே திரும்பப் பெறுங்கள்.
வடஇந்தியா முழுமையும் இரத்தக்களறிகள் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்த காலத்திலும் தமிழகம் அமைதியாகத்தான் இருந்தது. அண்ணன் தம்பிகளாக உறவாடிக்கொண்டு இருக்கின்ற மண்ணில் விஷத்தைப் பாய்ச்ச முனைகின்றார்கள். மதமாற்றம் செய்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கின்றார்கள்.
இது மிகவும் கவலை தருகின்றது. நான் கண்டனம் தெரிவிக்கின்றேன். கிறித்துவ மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இது மதச்சார்பு அற்ற நாடு. யாரும் எந்த மதத்தையும் வழிபடலாம் என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை.
இந்தத் தாக்குதல் மிகுந்த கவலை அளிக்கின்றது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா ஆகியோர் நட்புக் கொண்டு இருந்த திரு வி.க. மறைமலை அடிகள், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் இறை வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து பண்பாட்டை வளர்த்த தமிழகத்தில் வன்முறையைத் தூண்டத் திட்டமிடுகின்றார்கள். இது ஒரு தொடக்கம். இங்கே தொடங்கிய முயற்சியைத் தமிழகம் முழுமையும் அரங்கேற்றலாம் என்று கருதுகின்றார்கள். அந்தக் கிறித்துவ சகோதரியின் நெற்றியில் பொட்டு வைக்க முனைந்து இருக்கின்றார்கள். சேலையை இழுத்து இருக்கின்றார்கள். இத்தகைய கொடூரமான நிலைக்குத் தமிழகத்தைத் தள்ள முனைகின்றார்கள். வடக்கே இருந்து நச்சு நெருப்பு பரவி வருகின்றது; அதைத் தடுத்து நிறுத்துகின்ற அரணாக, திராவிட இயக்கம் பிரளயமாக எழுந்து நிற்கும் என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்காக எந்தத் தியாகத்திற்கும் ஆயத்தமாக இருக்கின்றோம். தமிழகத்தில் வளர முயல்கின்ற நச்சுச் செடியை வேரோடு பிடுங்கி எறிவோம்.
இந்து, முஸ்லிம், கிறித்து என எந்த வழிபாட்டு இடங்களுக்குப் போகின்றவர்கள் மீதும் யாரும் தாக்குதல் தொடுக்க அனுமதிக்க மாட்டோம்.
கிறித்துவ சகோதரர்களே, நீங்கள் பைபிளில் படித்து இருப்பீர்கள். மங்கி எரிகின்ற திரியை அணையாமலும்,நெறிந்த நாணலை முறியாமலும் எப்படிப் பாதுகாப்பாரோ,அதைப் போல உங்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம். அச்சம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு அரணாக இருப்போம். தமிழகத்தில் வாழ்கின்ற இந்துக்களும், இஸ்லாமியர்களும் உங்களைச் சகோதரர்களாக அரவணைத்துக் கொள்வார்கள். இந்தக் காட்டுத்தனமான வெறிக்கூட்டத்திற்குத் தமிழகம் இடம் கொடுக்கhது.
முளையிலேயே கிள்ளி எறியாவிடில் தமிழகம் முழுவதும் பரவி விடும். வன்முறையில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் உங்களிடம் என் கருத்துகளைச் சொல்லக்கூடிய வாய்ப்பினைத் தந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 12-03-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment