காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேள்விக்குறி ஆக்கி, தமிழ்நாட்டின் காவிரி மரபு உரிமைகளை மத்திய அரசுடன் இணைந்து உச்சநீதிமன்றமும் தட்டிப்பறித்துவிட்டது. நரேந்திர மோடி அரசின் நயவஞ்சகத் திட்டங்களால் தமிழ்நாடு, இயற்கை வளங்களை இழந்து சுற்றுச் சூழல் சீர்கெட்டு பேராபத்தாக முடியும் நிலைமை உருவாகி வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்து வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப்படிம எரிவாயு எனும் ஷேல் கேஸ் திட்டங்களால் சோலைவனமான காவிரி டெல்டா, பாலைவனமாக ஆக்கப்படும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
மோடி அரசு, பொறுப்பேற்ற பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எந்த வழியிலாவது செயல்படுத்த மூர்க்கத்தனமான முறையில் முயன்று வருகிறது. நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் மாதக் கணக்கில் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்புகளைத் திசை திருப்பும் விதமாக மத்திய அரசு அவ்வப்போது மோசடி அறிவிப்புகளை வெளியிடுகிறது. கடந்த பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் கேஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. எந்தத் திட்டமும் தமிழக அரசு மற்றும் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறினார்.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவல் மூலம் மத்திய அரசு, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல நடைமுறையை தொடங்கி நடத்தி வருகிறது என்பது அதிர்ச்சி தருகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களுக்கு தனித்தனியாக உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, ஒரே உரிமம் அளிக்கும் திட்டத்தை கடந்த 2017 மார்ச் மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் ‘ஹெல்ப் (HELP - Hydrocarbon Exploration and Licencsing Policy)’ எனப்படும் ‘ஒற்றை உரிமம்’ வழங்கும் புதிய கொள்கைக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த ‘ஹெல்ப்’ திட்டத்தின்படி காவிரி டெல்டாவில் எங்கு வேண்டுமானாலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களை, உரிமம் பெறும் நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும்.
மேலும் ‘ஓ.ஏ.எல்.பி. (Open Acreage Licensing Policy -OALP)’ எனும் திட்டப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க கண்டறியப்படும் பகுதிகளை வருவாய் பங்கீடு மூலம் தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்யும் திட்டத்தையும் மத்திய அரசு 2017, ஜூலையில் தொடங்கிவிட்டது.
அதன்படி காவிரி டெல்டா பகுதிகளில் புதிய எண்ணெய் வளப்பகுதிகளை அடையாளமிட்டு, அங்கு ஆய்வு மற்றும் துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச ஏல முறைக்கு (Global Tender) ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் (Directorate General of Hydrocarbons -DGH) மூலம் 2018 ஜனவரி 19 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மற்று உள்நாட்டு பெருநிறுவனங்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் 2018 ஜூன் மாதம் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு உற்பத்திப் பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஏவலுக்குப் பணிந்து கிடக்கும் அதிமுக அரசு, மோடி அரசின் வஞ்சகத் திட்டங்களைச் செயல்படுத்தத் துணைபோய்க்கெண்டு இருப்பதை தமிழக மக்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (PCPIR) அமைக்க மத்திய அரசு, நிலங்களைக் கையகப்படுத்திட உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்று கடந்த 2017, ஜூலை 19 இல் தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும், 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி படுகையில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ள நிலக்கரிப் படிமங்களில் இருந்து மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப் படுமானால் வேளாண் விளை நிலங்கள் முற்றாக அழிந்து, வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய்விடும். சோழவளநாடு சோற்றுக்குத் திண்டாடும் நாடு ஆகிவிடும். தமிழகத்தைச் சூறையாட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் மோடி அரசின் இத்தகைய நாசகாரத் திட்டங்களை எந்த விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் கோரி வரும் நிலையில், நாசகாரத் திட்டங்களைத் திணித்து, காவிரி டெல்டாவை பாலைவனம் ஆக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில், மத்திய பா.ஜ.க. அரசின் நயவஞ்சகத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் எரிமலையென வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 12-03-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment