1965 ல் மூண்டெழுந்த மொழிப்புரட்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராளியாகக் களத்தில் நின்ற, எனது ஆருயிர் நண்பர் ம.நடராசன் மறைந்த செய்தி, என் இதயத்தில் வேலாகப் பாய்ந்தது.
கடந்த 53 ஆண்டுகளாக, நேசமும் பாசமும் கொண்டு நாங்கள் பழகி வந்தோம். என் திருமணத்தை முன்னின்று நடத்த அவர் உழைத்ததையும், என் கிராமத்து இல்லத்திற்கு வந்ததையும், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் திருமணம் செய்து கொண்டதும், மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணி ஆற்றியபோது தகுதி வாய்ந்த இளைஞர்களைப் பணிகளில் அமர்த்த அவர் துணை நின்றதும், அண்ணன் எல்.கணேசன் அவர்களுக்கும் எனக்கும் பக்கபலமாக அவர் செயல்பட்டதும், தமிழ் ஈழ விடுதலைக்காக அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்த எண்ணற்ற உதவிகளும், என்னால் மறக்க முடியுமா? ஒருபோதும் இல்லை.
சிங்களக் கொலைவெறி இராணுவம், தமிழ் ஈழத் தாயகத்தில் மாவீரர் துயிலகங்களை இடித்து அழித்ததால், மானத்தமிழர்கள் நெஞ்சம் கொந்தளித்தபோது, அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பிட, தொடக்கத்தில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து, அத்தியாகிகள் கோட்டத்திற்கான நிலத்தைப் பெற்றுத் தந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாகவும், உயிர்க்காவியமாகவும் அம்முற்றம் திகழ்ந்திட அரும்பாடுபட்டவர் ம.நடராசன் அவர்கள் ஆவார்.
தமிழ் ஈழ விடுதலைக்காகவே தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஓவியர் வீர சந்தனத்தை மரண வாசலில் இருந்து மீட்டு வர மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
2009 ல், தமிழ் இனப்படுகொலையைத் தடுக்க, முத்துக்குமார் உள்ளிட்ட வீரத்தியாகிகள் தீக்குளித்து மடிந்தபோது, ஒவ்வொருவரின் உடலுக்கும் மலர் அஞ்சலி செலுத்தி, அனைத்து இறுதி நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.
உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு நிகழ்ச்சியில், சகோதரர் நடராசன் அவர்களின் அரும்பணிகளை விவரித்து, அவரை நான் பாராட்டியபோது எழுந்து நின்று கரம் கூப்பி அவையோரை வணங்கியதை மறக்க முடியுமா?
முதன்முறை அவரது உடல்நலம் பாதித்து குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அங்கே விரைந்து சென்றேன். அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் உரையாடியபோது, அவரது கண்கள் பனித்ததையும், தொடர்ந்து நான்கு முறை சென்று, அவருக்கு அறுவை மருத்துவம் நடைபெறுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பும் அவர் அருகில் இருந்ததையும் மறக்க முடியுமா?
மார்ச் 14 ஆம் நாளன்று, அவரது உடல் நலம் மேலும் குன்றியதை அறிந்து, அந்த இரவில் நான் மருத்துவமனை சென்று, அவர் படுக்கை அருகே நின்றபோது, தூக்கத்தில் இருந்தார்.
புகை, மது போன்ற எந்தப் பழக்கமும் இல்லாத கட்டுடல் வாய்ந்த என் சகோதரன் நடராசனை, மரணம் என்ற இரக்கம் அற்ற காலன் கொத்திக்கொண்டு போய்விட்டானே?
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தாய்த்தமிழகத்திற்கும், தமிழ் ஈழத்திற்கும் அருந்தொண்டு ஆற்றக் காத்திருந்த என் வீரச் சகோதரனை இழந்துவிட்ட துக்கத்தில் நான் தவிக்கின்றேன்.
யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது?
அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் இன்று 20-03-2018 தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment