நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில், அதன் தலைவர் வைகோ அவர்கள், நியூட்ரினோவால் ஏற்படும் பாதிப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 31.03.2018 மதியம் மதுரை பழங்காநத்தத்தில் இருந்து விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த தொடக்க விழாவில், திரு.மு.க.ஸ்டாலின், திரு.திருமாவளவன், திரு.ஜவாஹிருல்லா, திரு.ஹென்றி திபேன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை போராளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இதில் மு.க.ஸ்டாலின் மூவேந்தர் கொடியை வைகோ அவர்களிடம் வழங்க, வைகோ பெற்றுக்கொண்டார்.
மணியரசன் பேசும்போது, இன்று மதுரையில் வைகோ அறிமுகப்படுத்தி இருப்பதுதான் தமிழ் மரபுக்கொடி என்று புகழாரம் சூட்டினார்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் வைகோவின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம். கடமையை செய்து பலனை எதிர் பார்க்காமல் இருப்பவர் வைகோ. அஞ்சா நெஞ்சன் அழகர்சாமி இந்தி எதிர்ப்பு பயணம் போல், வைகோவின் பயணம் பத்தாவது நாள் பெரிய எழுச்சி ஏற்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் பேசினார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைபாளர் சிவகாசி ரவி நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவேண்டும் என பெட்ரோல் ஊற்றி தன்னை நெருப்பால் கொளுத்தினார். உடனே மதிமுக மாநில மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சத்தியகுமாரன் உள்ளிட்ட மதிமுகவினர் ரவியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ரவியுடனே மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு பயணமானார்கள்.
ரவி தீக்குளித்ததை தாங்கமுடியாமல் மேடையில் கதறி அழுதார் வைகோ. இதுபோன்ற தீக்குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன், மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து இனி யாரும் இப்படி செய்யாதீர்கள் எனவும் வேண்டுகோள் வைத்தார். 90 சதவீத தீக்காயங்களுடன் இருப்பதாக தலைவர் வைகோ பேட்டியளித்தார். வைகோ அவர்கள் மருத்துவமனையில் ரவியை நலம் விசாரித்தார்.
அபோது வைகோ அவர்கள் கேட்டதற்கு, என் தலைவர் நாட்டுக்கு பாடுபடுகிறார்.
மக்களுக்கு புரியவில்லையே. தொண்டனாகிய நான் நியூட்ரினோவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏதாவது செய்ய வேண்டாமா. வேறு வழி தெரியவில்லை, தீக்குளித்தேன் என உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நிலையிலும் உரத்த குரலில் சொன்னார் ரவி.
இந்நிலையில், நீதிபதி திருமதி சாமுண்டீஸ்வரியிடம், நியூட்ரினோ தமிழ்நாட்டுக்கு கேடு. மோடி அரசை கண்டிக்கிறேன். நியூட்ரினோ வேண்டாம் ரவி வாக்குமூலம் கொடுத்தார்.
வைகோ அவர்கள் நியூட்ரினோ எதிர்த்து பிரச்சார விழிப்புணர்வு நடைபயணத்தை தொண்டர்களுடன் தொடர்ந்தார். செக்காவூரணியில் வைகோ அவர்கள் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயண உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment