மறுமலர்ச்சி தி.மு.க., மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள்/துணை அமைப்பாளர்கள், மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண்: 1
திமுக வோடு தோழமை ஏற்படுத்திய கழகத்திற்கும்,
தலைவர் வைகோ அவர்களுக்கும் பாராட்டு
திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு நாலாத் திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துகளை உணர்ந்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கட்டிக் காத்த திராவிட இயக்க உணர்வுகள் பட்டுப் போகாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாப்பதற்கு, தேர்தல் அரசியலைக் கடந்து, தொலைநோக்குப் பார்வையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தோழமை ஏற்படுத்திய கழகத்திற்கும், தலைவர் வைகோ அவர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம்: 2
நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணத்தில்
150 மாணவர்கள் பங்கேற்பு!
நியூட்ரினோ நாசகாரத் திட்டத்தை எதிர்த்து, மார்ச் 31 மதுரையில் தொடங்கி, ஏப்ரல் 9 இல் தேனி மாவட்டம் கம்பம் சென்றடையும் தலைவர் வைகோ தலைமையிலான விழிப்புணர்வு நடைப்பயணத்தில், கழக மாணவர் அணி மற்றும் மாணவர் மன்றத்தின் சார்பில் 150 பேர் முழுமையாகப் பத்து நாட்களும் பங்கேற்பது என்று மாணவர் அணிக் கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 3
மறுமலர்ச்சி தி.மு.க., 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி
25 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவைச் சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மே 6 ஆம் தேதி நடைபெற உள்ள கழகக் கொடியேற்று விழா நிகழ்வுகளில், இயற்கை வாழ்வாதாரப் போராளி தலைவர் வைகோ அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில், மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 4
கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் - அண்ணா பேச்சுப் போட்டி
ரூபாய் பத்து இலட்சம் - தங்கப் பதக்கம் பரிசு
மார்ச் 6, ஈரோட்டில் நடந்த மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுக்குழு வகுத்த தீர்மானத்தின் அடிப்படையில், கழக மாணவர் அணி ‘பெரியார் - அண்ணா’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்துவது என்றும்;
மாவட்ட அளவில் 22.7.2018 ஞாயிறு;
மண்டல அளவில் 12.8.2018 ஞாயிறு;
மாநில அளவில் 26.8.2018 ஞாயிறு
ஆகிய நாள்களில் நடத்துவது என்றும்;
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மூவருக்குத் தலா 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம்;
மண்டல அளவில் வெற்றி பெறும் மூவருக்குத் தலா 15 ஆயிரம், 10 ஆயிரம், 7 ஆயிரம்;
மாநில அளவில் முதல் பரிசு, ரூபாய் ஒரு இலட்சம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கம்;
இரண்டாம் பரிசு, ரூபாய் 50 ஆயிரம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம்;
மூன்றாம் பரிசு, ரூபாய் 25 ஆயிரம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் உள்பட ரூபாய் பத்து இலட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்குவது என்றும்,
இந்தப் பேச்சுப் போட்டியில், தமிழகத்தில் உள்ள 2000 கல்லூரி மாணவர்களை நேரடியாகப் பங்கு பெறச் செய்வது என்றும், சுமார் இரண்டு இலட்சம் மாணவர்களிடம் பெரியார் -அண்ணா குறித்த தாக்கத்தை ஏற்படுத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 5
மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு
பரிசளிக்க இசைவு அளித்தவர்களுக்குப் பாராட்டு!
பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்குவதாக இசைவு தந்துள்ள கழகத்தின் சட்டத்துறைச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் அவர்களுக்கும்;
இரண்டாம் பரிசு ரூபாய் 50 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்குவதாக இசைவு அளித்துள்ள இலக்கிய அணி மாநிலப் பொருளாளர் சாத்தூர் கண்ணன் அவர்களுக்கும்;
மூன்றாம் பரிசு ரூபாய் 25 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்குவதாக இசைவு அளித்துள்ள மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் வி.சேஷன் அவர்களுக்கும் கழக மாணவர் அணி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இதே போல மாவட்ட - மண்டல அளவில் நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளுக்கு கழக நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்குமாறும் மாணவர் அணி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்: 6
மாணவர் அணி கலந்தாய்வுக் கூட்டங்கள்
‘பெரியார் - அண்ணா’ பேச்சுப் போட்டியை நடத்துவதற்கு ஆயத்தப்படுத்திடும் வகையில், மாணவர் அணிச் செயலாளர், மே மாதம் 2, 3, 4, 5, 8, 9, 10 ஆகிய தேதிகளில் மண்டலக் கூட்டங்களில் பங்கேற்பது என்றும், அந்தந்த மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் சீரிய வழிகாட்டுதலோடு, மாவட்ட அமைப்பாளர்களின் துணையுடன் மே மாதம் 20, 21, 22, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர அளவில் மாணவர் அணிக் கூட்டத்தை நடத்தி பேச்சுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான களப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 7
திராவிட இயக்க அரசியல் பயிலரங்கம்
தந்தை பெரியார் சிலையை அப்புறப்படுத்த எத்தனிக்கும் இன எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகின்ற தலைவர் வைகோ அவர்களின் திராவிட இயக்க இன உணர்வை, இளைய தலைமுறையின் நெஞ்சத்தில் விதைத்திடும் வகையில், மறுமலர்ச்சி தி.மு.க. 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாகை, திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 11 மையங்களில் மாணவர் அணி சார்பில் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் 2ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஆண்டு முழுவதும் திராவிட இயக்க அரசியல் பயிலரங்கம் நடத்துவது என்றும்;
ஒரு மையத்திற்கு 25 மாணவர்களுக்குக் குறையாமலும், 50 மாணவர்களுக்கு மிகாமலும் ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பின் கீழ் தேர்ந்த திராவிட இயக்கப் பயிற்றுநர்களைக் கொண்டு அரசியல் வகுப்பு நடத்துவது;
பயிலரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பருவத் தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவர்களுக்கு, ‘திராவிட இயக்க இளம் பயிற்றுனர்’ என்னும் விருதையும், அடுத்த நிலையில் வருகின்றவர்களுக்கு ‘திராவிட இயக்க அரசியல் மாணவர்’ என்னும் சான்றிதழையும் வழங்கி சிறப்பிப்பது என்றும்,
இந்தப் பயிலரங்கின் மூலம் ஆண்டுக்கு 500 திராவிட இயக்க ஆளுமைப் பண்பு மிக்க கல்லூரி மாணவர்களை உருவாக்குவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 8
பெரியார் சிலை உடைக்கக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடு!
சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தந்தை பெரியார் சிலையை உடைத்து நொறுக்குவோம் என்று வன்முறையைத் தூண்டிய காவி பயங்கரவாதிகளின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட அவலம் நடந்தேறியுள்ளது. ஆண்டாண்டுக் காலமாக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, சமூக ஒற்றுமை காத்து வரும் தமிழகத்தில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் மத பயங்கரவாதிகளின் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்: 9
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்
துணை வேந்தர் நியமனத்தைத் திரும்பப் பெறுக!
தமிழ் மொழியை நீச பாஷை என்றும், சமஸ்கிருதத்தைத் தெய்வீக மொழி என்றும் பேசியதால் திமுக அரசால் கடும் கண்டனத்துக்கு ஆளாகி, 2009 இல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சூர்ய நாராயண சாஸ்திரியை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமித்ததை கழக மாணவர் அணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
மத்திய பா.ஜ.க., அரசிடம் தாள்பணிந்து கிடக்கும் அதிமுக அரசு, இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு இணங்கிச் சென்று, ஆளுநரின் நியமனத்தை ஏற்பது தமிழ் இனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.
எனவே, ஆளுநர் அறிவித்துள்ள துணைவேந்தர் நியமனத்தை ரத்துசெய்துவிட்டு, தேர்வுக்குழு பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகப் பேராசிரியர்கள் மூன்று பேரில் ஒருவரை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 10
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வரை
தொடர் போராட்டம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறும் வரை ஒத்த கருத்துள்ள மாணவர் அமைப்புகளுடன் இணைந்து, மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் தொடர்ந்து போராடுவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகின்றது.
தீர்மானம்: 11
டெல்லியில் தமிழக மாணவர்கள் மர்ம மரணத்திற்கு
நீதி விசாரணை வேண்டும்!
வட இந்தியாவில் மருத்துவ மேற்படிப்புக்குச் செல்லும் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்படும் இன ரீதியான பாகுபாட்டைக் கண்டிப்பதோடு, தமிழக மாணவர்களின் மர்ம மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 12
மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்திய
நிர்வாகிகளுக்குப் பாராட்டு!
மாவட்டக் கழகச் செயலாளர்களின் சீரிய வழிகாட்டுதலோடு, அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தைச் சிறப்பாக நடத்திய மாணவர் அணி மாநிலத் துணைச்செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு இக்கூட்டம் தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது என மதிமுக தலைமை நிலையம் இன்று 25-03-2018 அன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment