தாமிர உருட்டு ஆலை நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை, முதலில் மராட்டிய மாநிலத்தில், ரத்தினகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.
இந்த ஆலை வெளியிடும் நச்சுப்புகையால், அங்கே விளையும் அல்போன்சா மாம்பழங்கள் நஞ்சாகும்; அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது என்பதால், பல்லாயிரக்கக்கான விவசாயிகள் திரண்டு, கடப்பாரை சம்மட்டிகளைக் கொண்டு, 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலை இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள்.
அப்போது மராட்டிய முதல்வராக இருந்த சரத் பவார் அவர்கள், போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஸ்டெர்லைட் ஆலை அமைக்கக் கொடுத்து இருந்த உரிமத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இத்தகைய துணிச்சல் எந்த மாநில முதல்வருக்கும் வராது போலும்.
இதன்பின்னர், ஸ்டெர்லைட் நச்சு ஆலை, கோவா மாநிலத்திற்குள் நுழைய முயன்று தோற்றுப்போய், அப்பொழுது தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அனுமதியை, சட்ட விதிகளை எல்லாம் குப்பையில் போட்டு, இரண்டு வார காலத்திற்குள் அனுமதி பெற்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை அமைக்கும் பணியைத் தொடங்கினார்கள்.
1995 ஆம் ஆண்டில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை மறுமலர்ச்சி தி.மு.கழகம் தூத்துக்குடியில் நடத்தியது. மூன்று உண்ணாவிரத அறப்போர், மூன்று மறியல் அறப்போர்கள் என் தலைமையில் நடைபெற்றன. மறியல் அறப்போரில் கைது செய்யப்பட்டோம்.
பின்னர் திருவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக, ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு நடைபயணப் பிரச்சாரம் மேற்கொண்டோம். ஆலையை நெருங்க விடாமல், ஆயிரக்கணக்கான காவலர்கள் தடுத்தனர்.
சில நாள்கள் கழித்து, என் தலைமையில் ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டோம்.
அன்று இரவு, ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டு தொழிலாளர்கள் ஆலை விபத்தில் உயிர் இழந்தனர். உடனே ஸ்டெர்லைட் நிர்வாகம், வைகோவின் தூண்டுதலால் விடுதலைப்புலிகள் சதி வேலை என்று குற்றம் சாட்டியது.
ஆனால், அப்பொழுது தூத்துக்குடி காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த ஜாங்கிட் அவர்கள், அப்படி எந்த சதி வேலையும் நடக்கவில்லை; ஆலை செயல்பாட்டில் நேர்ந்த தவறால்தான் இருவர் உயிர் இழந்தனர் என்று அறிக்கை தந்தார்.
இத்தகைய பழிகளைச் சுமத்தியதால், நான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மூட, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உலகக் கோடீசுவரர்களுள் ஒருவனான அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் உடனே மேல் முறையீடு செய்து, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை ஆணை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து 36 அமர்வுகளுக்கு நானும் சட்டத்துறைச் செயலாளர் தேவதாசும் சென்று பங்கேற்றோம்.
நீதிபதி பட்நாயக், நீதிபதி கோகலே அமர்வில் மூன்று மணி நேரம் வாதங்களை எடுத்து வைத்தேன். என் வாதங்களை நீதிபதிகள் மெச்சியபோது, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று நம்பினேன். அங்கேயும் தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்ப்பு வரும் என்று கருதிய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தீர்ப்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூடச் செய்தார்.
ஆனால், ஆலையைத் தொடர்ந்து நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வாசித்தபோது, நீதிமன்றத்தில் இருந்த அதைக் கேட்டு நான் தாங்க முடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன்.
நான் எழுந்து, நீதிபதிகளைப் பார்த்துச் சொன்னே: மராட்டிய மாநிலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கினார்கள். தமிழர்கள் வீரத்தில் குறைந்தவர்கள் அல்ல. நாங்களும் உடைத்து இருக்க முடியும். ஆனால், வன்முறையை நாடாமல், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது. உச்சநீதிமன்றம் அதைப் பறித்துக் கொண்டது என்றேன்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத நீதிபதி பட்நாயக், நீங்கள் பொதுநலனுக்காகப் போராடுகின்றீர்கள் என்று தீர்ப்பில் பாராட்டி இருக்கின்றேனே என்றார்.
உடைந்த உள்ளத்தோடு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தேன்.
அதே உச்சநீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தனர். அதன்பின்னர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து வழக்குத் தொடுத்தேன்.
ஆனால், பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை நீதிபதி சுதந்திரகுமார், எந்தக் காரணமும் இன்றி, சென்னைத் தீர்ப்பு ஆயத்தில் இருந்த வழக்கை, தில்லி தலைமைத் தீர்ப்பு ஆயத்திற்கு மாற்றினார். அங்கே நான் வழக்காடச் சென்றபோது, தீர்ப்பு ஆய நீதிபதியின் அணுகுமுறையும் நடவடிக்கையும், எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு கட்டத்தில், ஸ்டெர்லைட் சார்பில் வழக்காடிய, வழக்கறிஞரைப் பார்த்து, ஏன் கவலைப்படுகின்றீர்கள்? ஆலையைத் தொடர்ந்து நடத்துவதற்குத்தான் நான் தீர்ப்பு அளிக்கப் போகிறேனே என்றார்.
நான் நீதிமன்ற வாசலில் இருந்த செய்தியாளர்களிடம், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் நீதி குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றது என்றேன்.
அதன்பின்னர், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் குறித்து ரிட் மனு தாக்கல் செய்தது. நானும், ரிட் மனு தாக்கல் செய்தேன். உச்சநீதிமன்றம் நீதியரசர் இப்ராகிம் கலிபுல்லா அமர்வில், என் ரிட் மனு வழக்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுத் தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கு இடையில், ஒருநாள் அதிகாலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப்புகையால், தூத்துக்குடி மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சிலர் மயக்கமுற்றனர். உடனே, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, மறியல் போராட்டத்தை ம.தி.மு.க ஏற்பாடு செய்தது. இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் அண்ணன் நல்லகண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாங்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டோம். இந்தப் பின்னணியில், ஸ்டெர்லைட் ஆலை நரித்தந்திரத்தோடு, தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றது.
இதை எதிர்த்து, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.
இன்று தூத்துக்குடி மாநகரத்திலும் சுற்று வட்டாரத்திலும் வணிகப் பெருமக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழுக்கடையடைப்பை வெற்றிகரமாக நடத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்திய நிலத்தை, நில உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும்; ஸ்டெர்லைட் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவதோடு, 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடி வருகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அந்தப் போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்தும் என அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றேன் என மதிமுக் பொதுச் செயலாளர் வைகோ இன்று 24-03-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment