Saturday, February 28, 2015

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பட்ஜெட் இல்லை - வைகோ!

நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார். ஆனால், மத்திய அரசு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளையே பெரிதும் நம்பி இருப்பதை நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.
2015-16 நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 விழுக்காடு என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறை மற்றும் உற்பத்தித் தொழில்துறையின் பங்களிப்பு குறைந்துள்ள நிலையில் எவ்வாறு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. பணவீக்க விகிதம் 5 விழுக்காட்டுக்குக் கீழே குறைந்துள்ளது என்றாலும், சேவை வரி 12.34 விழுக்காடு என்பது 14 விழுக்காடு என்று உயர்த்தப்படுவதால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் குறைத்தால்தான் மக்களுக்குப் பலன் கிடைக்கும். நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மானியங்களை முழுதாக இரத்து செய்கின்ற நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல. வேளாண் கடனுக்காக 8.5 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 4 விழுக்காடு வட்டியில் வழங்கப்படும் கடன் தொகையை 3 இலட்சம் ரூபாயிலிருந்து அதிகரிக்க வேண்டும். ஓராண்டுக்குள் கடனை திரும்பச் செலுத்தத் தவறியவர்களுக்கு 14 விழுக்காடு அபராத வட்டியை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வைத்த நியாயமான கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. வேளாண் துறைக்கான முதலீடும் அதிகரிக்கவில்லை.
மரபுணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையைப் பாதுகாப்போம் என்பது முரண்பாடாக இருக்கிறது.
பிரதமரின் ‘இந்தியாவில் தயாரிப்பு’ திட்டத்துக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று நம்பி இருந்த நடுத்தர மக்களுக்கு நிதி அமைச்சர் ஏமாற்றத்தைத் தந்துள்ளார்.
செல்வ வரியை இரத்து செய்து, பெரு நிறுவனங்களுக்காக வரி விகிதம் 5 விழுக்காடு குறைத்த மோடி அரசின் நிதிநிலை அறிக்கை பெருநிறுவனங்களுக்கே சாதகமானதாக இருக்கிறது.
செல்வ வரி மற்றும் வங்கிகளின் வாராக்கடன் வசூல் இலக்கை எட்ட முயற்சிக்காமல், நிதி ஆதாரங்களைத் திரட்ட பொதுத்துறைப் பங்குகள் விற்பனையை ஊக்குவிப்பது ஏற்கக்கூடியது அல்ல.
திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் செயல்திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.
மக்கள் நலவாழ்வுக்கு, பொது சுகாதாரத் திட்டங்களுக்கு 10 விழுக்காடு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், பொது சுகாதரத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஏழை, நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தகவல்தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெறுவதற்கு கடன் வழங்கும் திட்டம் வரவேற்கக் கூடியது. எனினும், அனைத்துத் துறைகளுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் சேருவது கட்டாயம் என்பதை விருப்ப உரிமையாக மாற்றுவது தொழிலாளர்களின் எதிர்கால குடும்ப நலனைப் பாதிக்கும்.
சிறு, குறு தொழில் முனைவோருக்குக் கடன் வழங்கும் திட்டம், தமிழகத்தின் உயர்தர ஏ.ஐ.எம்.எÞ. மருத்துவமனை உருவாக்குதல், வரி விலக்குடன் கூடிய பத்திரங்கள் வெளியிடுதல் போன்ற வரவேற்கக் கூடிய கூறுகள் இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மத்திய பட்ஜெட் இல்லை.

மதிமுக இணையதள அணி - ஓமன்

நீயூட்ரினோ விஞ்ஞானி பத்மநாபன்-உடன் வைகோ ஆலோசனை!

கேரள மாநிலம் கொச்சினில் உள்ள Sea Park ஹோட்டலில் நாசகார நீயூட்ரினோ திட்டம் குறித்து அனுபவம் வாய்ந்த அறிவியல் விஞ்ஞானி பத்மநாபன் குழுவினரை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று (28.02.2015) சந்தித்து நான்கு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டு தெளிவான விளக்கங்களையும் பெற்றுகொண்டார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, February 27, 2015

நியூட்ரினோவை எதிர்த்து மேதா பட்கர் – வைகோ பிரச்சாரப் பயணம்!

வருகிற ஞாயிற்றுக் கிழமை 01.03.2015, நாசகார நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து சமூக போராளிகள் மேதா பட்கர் – வைகோ பிரச்சாரப் பயணம் மேற்கொள்கின்றனர்.

பிரச்சாரப் பயணத்தில்,கம்பம் கே. எம். அப்பாஸ், லெனின் ராஜப்பா, மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, கி.வே. பொன்னையன், முகிலன், சந்திரன், இளையரசு ஆகியோர் பங்கேற்கின்றனர். மதிமுக தொண்டர்களும் விவசாயிகளும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

பிப்ரவரி 27-ல் உயர் நீதிமன்றத்திற்கு வைகோ வருகை புரிந்தார்!

சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 21.06.2008 அன்று நடைபெற்ற உள் அரங்குக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமிழீழம் பற்றி பேசிய பேச்சுக்கு தேச துரோகம் என்று அன்றைய கருணாநிதி தலைமையிலான  தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிய விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று 27.02.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வைகோ வருகை தந்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்.

ம.தி.மு.க பிரமுகர் திரு.சம்பத் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்!

சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணமடைந்த ம.தி.மு.க அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் சம்பத் குடும்பத்தினரை தர்மபுரியில் நேரில் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்

Thursday, February 26, 2015

அண்ணன் மு.செந்திலதிபன் உரை!


இரயில்வே பட்ஜெட் கானல் நீராகக் காட்சி அளிக்கிறது - வைகோ!

எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு, இரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து இருக்கின்றது.
2014 இல் பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற உடனேயே பயணிகள் கட்டணம் 14.2 விழுக்காடு, சரக்குக் கட்டணம் 6.5 விழுக்காடு உயர்த்தப்பட்டது. தற்போது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துள்ள நிலையில், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தைக் குறைப்பதற்கு இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முயற்சிக்கவில்லை.
இரயில்வே துறையின் வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் 8.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் தேவை என்றும், தனியார்-அரசு பங்கேற்புடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துவிட்டு, இரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று கூறுவது முரணாக இருக்கிறது.
இரயில்வே துறையின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அந்நிய நேரடி முதலீடுகளும் பெறப்படும் என்று அறிவித்து இருப்பதால், உண்மையில் இரயில்வே துறை தனியார் மயம் நோக்கிப் போய்க்கொண்டு இருப்பது தெளிவாகிறது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள ‘தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய திட்டங்களுக்கு இரயில்வே முன்னுரிமை கொடுக்கும் என்று இரயில்வே அமைச்சர் கூறுகிறார். ஆனால், இத்திட்டங்களை முழுக்கமுழுக்கத் தனியார்துறையின் பங்கேற்பில் மட்டுமே நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வந்த மோடி அரசு, அதே நோக்கத்திற்காக இரயில்வே துறையின் நிலங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆபத்து உருவாகி இருக்கின்றது.
தமிழ்நாட்டின் இன்றியமையாத தேவைகளான இராயபுரத்தில் புதிய முனையம் அமைப்பது, சென்னை-கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை, அகலப்பாதைத் திட்டங்கள், ஆய்வு செய்யப்பட்ட புதிய வழித்தடங்கள் அமைத்தல், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் புதிய இரயில் சேவை, மற்றும் புறநகர் இரயில்சேவை விரிவாக்கம் போன்றவை குறித்து இந்த இரயில்வே பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் பற்றி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று இரயில்வே அமைச்சர் குறிப்பிட்டு இருப்பது, இதுவரையில் இல்லாத நடைமுறை ஆகும்.
இரயில்வே திட்டங்களுக்காக மாநிலங்கள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து கையேந்த வேண்டிய நிலைமையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.
இரயில்வே துறை மேம்பாட்டுக்காக வங்கிக் கடனுடன், லட்சக்கணக்கான ஊழியர்களின் ஓய்ñதிய நிதியைத் திருப்பி விடுவது ஏற்கத்தக்கது அல்ல.
இரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துதல், பயணிகள் குறை தீர்க்க இலவச தொடர்பு எண்கள் அறிவிப்பு, இணைய வழி சேவைகள் அறிவிப்பு போன்றவற்றை வரவேற்கலாம்.
இரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தல், இரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல், பசுமைக் கழிவறைகள் ஏற்படுத்துதல், பெண் பயணிகள் பாதுகாப்பு, முக்கிய இரயில் நிலையங்களில் வைஃபை வசதி, குறைந்த விலையில் தரமான குடிநீர் விற்பனை போன்றவை அனைத்தும் கடந்த இரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.
மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட், காகித அறிவிப்பாகவும், கானல் நீராகவும் காட்சி அளிக்கின்றது.
மதிமுக இணையதள அணி - ஓமன்

பிப்ரவரி 27-ல் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வைகோ வருகை!

சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 21.06.2008 அன்று நடைபெற்ற உள் அரங்குக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிய பேச்சு தேச துரோகம் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஆஜராவதற்காக வருகிற 27.02.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வைகோ வருகை தருகிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

திகார் சிறை 2 ல் ஓம் பிரகாஷ் சௌதாலா - வைகோ சந்திப்பு!

தில்லி திகார் சிறை 2 ல் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவை, வைகோ இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது நில அபகரிப்பு சட்டத்திற்கு எதிராக போராடி வரும் வைகோவிற்கு ஓம் பிரகாஷ் சௌதாலா தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். திகார் சிறை 2ல் உள்ள கண்காணிப்பாளர் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது. அப்போது வைகோ, ஓம் பிரகாஷ் சௌதாலாவிடம் வழக்கிலிருந்து விரைவில் விடுதலை ஆவீர்கள் என்று தெரிவித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Wednesday, February 25, 2015

மதிமுக தீர்மான குழு செயலாளர் நியமனம்!

டில்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் வைகோ சந்திப்பு!

டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தலைவர் வைகோ  தொலைபேசி வாயிலாக வாழ்த்து சொல்லும் பொழுது, கெஜ்ரிவால் அவர்கள் தலைவர் வைகோவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் டெல்லியில் பிப்ரவரி 24-ம் தியதி நில கையகப்படுத்தும் மத்தியரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடகிறது. அதை முடித்துக்கொண்டு பிப்ரவரி 25-ல் உங்களை சந்திக்கிறேன் எனத்தெரிவித்தார். 

அதன்படி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான திரு. அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களை டெல்லியில் தலைமை செயலகத்தில் மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

பார்வார்டு பிளாக் தலைவர் பிஸ்வாஸ் வைகோ சந்திப்பு!

அகில இந்திய பார்வார்டு பிளாக் தலைவர்  திரு.பிஸ்வாஸ் அவர்களை இன்று டெல்லியில் மரியாதையின் நிமித்தமாக மதிமுகவின் பொதுச்செயலாளர் திரு.வைகோ சந்தித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்த்துத் தில்லியில் அறப்போர்!

இந்தியாவில் உள்ள வேளாண் நிலங்களையும், மற்ற நிலங்களையும் ஏழை விவசாயிகளிடம் இருந்து அதிரடியாகப் பறித்து, பகாசூர கார்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கும் குறிக்கோளுடன் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலப் பறிப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான மேதா பட்கர் அம்மையார் 2015 பிப்ரவரி 24 ஆம் அன்று தலைநகர் டில்லியில் நாடாளுமன்றத்துக்கு எதிரே ஏற்பாடு செய்து இருந்த பிரம்மாண்டமான விவசாயப் பேரணியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கழகத்தின் விவசாய அணியினரோடு பங்கேற்றார்.

மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்க்கும் முழக்கங்கள் தாங்கிய அட்டைகளோடு, மீத்தேன் எதிர்ப்பு இயக்கம், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம், காவிரி பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகல் 1 மணி அளவில் தலைவர்கள் இருந்த மேடைக்கு அன்னா ஹசாரே வந்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.
இரண்டரை மணி அளவில் வைகோ தனது உரையைத் தமிழில் 
தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் பேசினார்.

‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றார் திருவள்ளுவர். உலக மக்கள் அனைவரும் விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழ்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை நரேந்திர மோடி அரசு செய்கிறது. விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு, அவர்களுடைய ஒப்புதல் தேவை இல்லை என்கின்ற அளவிற்கு ஒரு கொடூரச் சட்டத்தை இயற்றி இருக்கின்றது. இந்த அவசரச் சட்டம், ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது. கோடான கோடி விவசாயிகளுக்கு மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின் ஆபத்து இன்னமும் புரியவில்லை. 

கெட்டிÞபெர்க் போர்க்களத்தில் ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய உரையில், மக்களால் மக்களுக்காக மக்கள் உடையதுதான் அரசு என்று விளக்கம் அளித்தார். ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகளால், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக, கார்ப்பரேட் கம்பெனிகளுடைய அரசுதான் நரேந்திர மோடி அரசு ஆகும். அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சட்டம் ஆக்கிவிடும் திட்டத்தோடுதான் மத்திய அரசு செயல்படுகிறது. டில்லி வாக்காளர்கள் தேர்தலில் விளக்குமாற்றுப் பூசை கொடுத்தும் இந்த அரசுக்குப் புத்தி வரவில்லை.

விவசாயி நிலத்தைத் தாயாகப் போற்றுகிறான். தன் உயிராகக் கருதுகிறான். அவனிடம் இருந்து நிலத்தைப் பறிக்க முனைந்தால் எதிர்த்து நிற்பான்; இரத்தம் சிந்துவான்; உயிரையும் கொடுப்பான். நிலப்பறிப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்யாவிடில், நாடெங்கும் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மத்திய அரசை எதிர்த்து எரிமலையாய்ச் சீருவார்கள். இந்த அரசு மக்களால் தூக்கி எறியப்படும் என எச்சரிக்கிறேன்.

நரேந்திர மோடி அரசே! பகல் கொள்ளைக்காரனைப்போல நிலங்களைப் பறிக்கும் சட்டத்தை இரத்து செய்! 

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விவசாய அமைப்புகளின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கே வந்து இருக்கின்றோம். தொடர்ந்து போராடுவோம்! விவசாயிகளுக்கு எதிரான அரசின் திட்டங்களை முறியடிப்போம்! என்று பேசினார்.

மேதாபட்கர் அம்மையார் அவர்கள் சென்னையில் கேட்டுக்கொண்டபடி, தந்தை பெரியார் சிலையை வைகோ அவரிடம் வழங்கினார்.

அன்னா ஹசாரே பேசும்போது, ‘விவசாயிகளுக்குக் கேடு செய்யும் இத்திட்டத்தை எதிர்த்து அடுத்த ஓரிரு மாதங்களில் ராம்லீலா மைதானத்தில் இலட்சக் கணக்கானவர்களைத் திரட்டி, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம்’ என்றார். 

‘சிறை செல்லத் தயார்’ என கூட்டத்தினர் அனைவரும் முழங்கினார்கள். அன்னா ஹசாரேயிடம் வைகோ, ‘நான் 32 முறை சிறை சென்று இருக்கின்றேன். உங்கள் அழைப்பின் பேரில் இப்பொழுதும் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

அன்னா ஹசாரே உடன் வந்த ஒரு தலைவர், ‘வைகோவின் வாழ்க்கையே போராட்டங்களும் சிறையும்தான்’ என்றார்.

மூன்று மணி அளவில் டில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை தந்தார். மேடைக்கு முன்னர் தொண்டர்களோடு தரையில் அமர்ந்தார். கூட்டம் ஆரவாரம் செய்தது. 

‘கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் தனது மேடைக்கு வரக்கூடாது; தொண்டர்களோடு அமர்ந்து கொள்ளலாம்’ என்று அன்னா ஹசாரே இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறி இருந்தார்.

அன்னா ஹசாரேவுக்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த வைகோ, அவரிடம் “உங்கள் ஆசீர்வாதத்தில் வளர்ந்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில வாக்காளர்கள் அவருக்கு முதல்வர் பதவி கிரீடம் சூட்டி இருக்கின்றார்கள். பொதுமக்களின் தீர்ப்பை எண்ணி கெஜ்ரிவாலை நீங்கள் மேடைக்கு அழையுங்கள். இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களும், உலகெங்கிலும் உள்ளோரும் இந்த நிலைமையை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவரை நீங்கள் மேடைக்கு அழைப்பதால் உங்கள் மதிப்புதான் உயரும்” என்று தொடர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வைகோ வற்புறுத்தினார். அருகில் இருந்த பல தலைவர்களும், வைகோவிடம், ‘நீங்கள்தான் ஹாசரேவை இதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்றனர்.

ஒருவழியாக அன்னா ஹாசரே வைகோவிடம் சம்மதம் தெரிவித்தார். வைகோ ஒலிபெருக்கிக்குச் சென்று, ‘அன்னா ஹாசாரே அவர்கள் சார்பில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்’ என்றார்.

அதனை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மேடைக்கு வந்து அன்னா ஹாசரே அவர்களின் பாதம் பணிந்து ஆசி பெற்றார். வைகோவின் கைகளைப் பற்றிக்கொண்டார். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவாலைப் பேச வைக்க வேண்டும் என்று மேதாபட்கர் அம்மையாரிடம் வைகோ வலியுறுத்தினார். அம்மையார் அவர்களும் அதே மனநிலையில்தான் இருந்தார். ஆனால், ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். வைகோ மீண்டும் அம்மையாரிடம் வற்புறுத்தினார்.

பின்னர் அன்னா ஹாசரே அவர்களிடமும் வைகோ கூற, ‘அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவார்’ என்று ஹாசரே அவர்களே ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

சற்றும் அதிகார அகந்தை கொள்ளாமல், மிகுந்த அடக்கத்தோடு கெஜ்ரிவால் நடந்துகொண்டது குறித்து அவரிடம் வைகோ சிலாகித்துச் சொன்னார். கெஜ்ரிவால் அதற்கு நன்றி தெரிவித்தார்.

விவசாயிகள் பேரணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

பின்னர் மாலை 5 மணிக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை, அவரது இல்லத்தில் வைகோ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஒருமணி நேரம் நீடித்தது. 

பின்னர் இரவு 7 மணிக்கு ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் அவர்களை, அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அ.கணேசமூர்த்தி, டாக்டர் சி. கிருஷ்ணன், விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் பூவை கந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன், தொண்டர் அணி மாநிலச் செயலாளர்ஆ.பாÞகரசேதுபதி, மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, மதுரை புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் சரவணன், திருச்சி புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், திருப்பூர் முத்துரத்தினம், மகளிரணி மாநிலத்துணைச் செயலாளர் மல்லிகா தயாளன் மற்றும் கௌசல்யா இரவி, ஆனந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

லாலு பிரசாத் யாதவ் வைகோ சந்திப்பு!

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களை டெல்லியில் அவரது பண்ணை வீட்டில் அவரது குடும்பத்தினருடன் இன்று வைகோ சந்தித்து அவரின் மகளை வாழ்த்தினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Tuesday, February 24, 2015

சரத் யாதவ் - வைகோ சந்திப்பு!

டெல்லி நில கையகபடுத்துதல் எதிப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாலையில் 7.30 மணியளவில், முந்நாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான சரத் யாதவ் அவர்களை, அவரது இல்லத்தில் திரு.வைகோ அவர்கள் மரியாதையின் நிமித்தமாக சந்தித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

கோவை வனக்கல்லூரி மதிமுக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்!

நாளை 25/2/2015 மேட்டுபாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது. இந்நிலையில், கல்லுரி துணைவேந்தர் அவர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன் வந்ததால் இந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தம் செய்யபடுகிறது என மதிமுக மாநில இளைஞர் அணிஅமைப்பாளர் திரு.வே‬ .ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

வைகோ மன்மோகன் நட்புரீதியாக சந்திப்பு!

இந்திய துணை கண்டத்தின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ அவர்கள் நட்புரீதியாக டெல்லியில் சந்தித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

போராட்டத்தில் வைகோவுடன் டெல்லி முதல்வர் பங்கேற்பு!

டெல்லியில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்துசெய்யக்கோரும் போராட்டத்தில் தலைவர் வைகோ, தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்று வெற்றி பெற வைத்தனர். பின்னர் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்

மதிமுக இணையதள அணி - ஓமன்

மேதா பட்கருடன் இணைந்து வைகோ -அன்னா ஹசாரே நாடாளுமன்ற முற்றுகை!

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி தில்லி ஆர்பாட்டத்தில் மேதா பட்கர் அவர்களுக்கு வைகோ பெரியார் சிலையை வழங்கிய போது !
வீராங்கனையான மேதா பட்கர் அம்மையார் தலைமைத் தாங்கும் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில், நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி இன்று (பிப்ரவரி 24) இந்திய நாடாளுமன்ற முற்றுகை அறப்போர் நடைபெற்றது.

இதில் மேதா பட்கர் அம்மையாருடன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், சமூகப் போராளி அன்னா ஹசாரே அவர்களும் நாடாளுமன்ற முற்றுகைப்போரில் கலந்துகொண்டார்.
நாடாளுமன்ற முற்றுகைப்போரில் மதிமுக தொண்டா் படை வீரா்கள் டெல்லயில் அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.
மதிமுக விவசாய அணியினர், தலைவா் வைகோ தலைமையில் தமிழ் வீரா்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

கலிங்கப்பட்டி கரிபால்டி வைகோ!

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி கலிங்கப்பட்டி பெற்றெடுத்த காவியம், ஓய்வறியா போராளி நெல்லைச் சீமை தந்த கரிபால்டி வைகோ.