Tuesday, February 17, 2015

ஈழத் தமிழ் இனப்படுகொலையை மூடி மறைக்க நரேந்திரமோடி - மைத்ரிபால சிறிசேனா வஞ்சகத் திட்டம்!

ஜெர்மனியில் யூத இனப்படுகொலையும், ருவாண்டாவில் பழங்குடி இனப்படுகொலையும், அர்மீனியாவில் நடந்த இனக்கொலையும் போல இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009 ஆம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப் பேரழிவு நடத்தப்பட்டது.

1983 ஜூலையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசின் இராணுவத் தாக்குதலால் கொல்லப்பட்டபோது, 1983 ஆகÞட் 16 அன்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், “இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை” என்று அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் அறிவித்தார்கள். “அங்கு நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல; அனைத்து நாடுகளுக்கும் கவலை தரும் மனித உரிமை அழிப்புப் பிரச்சினை” என்றே நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கூறினார்கள்.
1999-இல் ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசால் கொடுந்துயர் தொடர்ந்தபோது, நாடாளுமன்றத்தின் 62-ஆம் எண் அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள், ஈழத் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இந்திய அரசு இலங்கை அரசுக்கு வர்த்தக ரீதியாக எந்த உதவியும் செய்யாது என்றும், சிங்கள அரசு பணம் கொடுத்தாலும் ஆயுதங்களை விற்பனை செய்யாது என்றும் அனைத்துக் கட்சியினர் ஒப்புதலோடு பிரகடனம் செய்தார்.
2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய இலங்கை இராணுவ கூட்டு ஒப்பந்தம் திட்டமிடப்பட்டு கையெழுத்தாகின்ற நிலையில், நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, சரத்பவார், பிரியரஞ்சன்தாÞ முன்சி, மார்க்சிÞட் கட்சித் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், இந்தியக் கம்யூனிÞடு கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் ஆகியோரைச் சந்தித்து உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் ஈழத் தமிழர்களுக்குப் பெருங்கேடாக முடியும் என்று தகுந்த ஆதாரங்களுடன் விளக்கிய பின், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஆனால், திரைமறைவில் ரகசியமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இலங்கைக்கு முப்படை தளவாடங்களையும் வழங்கி ஈழத் தமிழ் இனக்கொலையை சிங்கள அரசு நடத்துவதற்கு உடந்தையாக செயல்பட்டதால், நடைபெற்ற இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளி தான் இந்திய அரசு என்று பகிரங்கமாக கூறியதோடு, ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் முழு ஆதாரங்களோடு தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் வெளியிட்டேன்.
‘ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்’ என்று ஒன்றே கால்மணி நேர குறுந்தட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரித்து இலட்சக்கணக்கான பிரதிகள் எடுத்து ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நின்று மாணவர்களிடத்திலும், அதுபோல பொதுமக்களிடத்திலும் கொண்டுபோய்ச் சேர்த்தேன்.
இந்தியாவில் உள்ள 159 நாடுகளின் தூதர்களுக்கு நான் அனுப்பிய ஆங்கில குறுந்தட்டுக்கு பல நாட்டுத் தூதர்கள் பதில் தந்தனர். டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் இவர்களைக் கொண்டு டெல்லியில் ஆங்கில, இந்தி குறுந்தட்டுகளை வெளியிட்டேன். பின்னர் மும்பையில் மராத்தியில் தயாரிக்கப்பட்ட குறுந்தட்டை வெளியிட்டேன்.
ஈழத்தமிழ் இனப்படுகொலை குறித்த ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த மார்சுகி தாரீÞமென் தலைமையிலான மூவர் குழு 196 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதில், 2009 மே மாதத்தில் சிங்கள இராணுவம் நடத்திய படுகொலையில் ஒரு இலட்சத்து முப்பத்தி ஏழாயிரம் தமிழர்கள் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் போரில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் கொல்லப்பட்ட விபரங்கள் மனசாட்சி உள்ளவர்களின் நெஞ்சை இரத்தத்தால் உறையச் செய்தது.
2011 ஜூன் ஒன்றாம் தேதி, பெல்ஜியத்தின் தலைநகர் பிரÞஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழ் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணையை ஐ.நா.மன்றம் நடத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பினை இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்துவிட்டு, ஐ.நா. மன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்றும் உலகில் பல நாடுளில் ஏதிலிகளாக வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியிலும், அந்தந்த நாடுகளிலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்றும் நான் அறிவித்ததை உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் வாழ்த்தி வரவேற்றார்கள்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் ஜெர்மனி நாட்டின் முயற்சியால் கூட்டப்பட்ட மனித உரிமைக் கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் இனக்கொலை நடத்திய சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதற்கு மாறாக கொலைகார சிங்கள அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் இந்திய - கியூப - சீன அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு, 12 நாடுகள் எதிர்க்க, 6 நாடுகள் வாக்களிக்காமல் போக, ஐ.நா. வரலாற்றில் இல்லாத அக்கிரமமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் கூடிய மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என்ற அநீதியான கருத்தை இந்திய அரசு முன் வைத்தது. அதைக் கண்டித்து அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்திய அரசைக் கண்டித்து அறிக்கை தந்தார்கள்.
தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் கொந்தளிப்பு ஏற்பட்டதன் விளைவாக 2013-ஆம் ஆண்டு இந்திய அரசு தனது துரோகப் போக்கின் சுருதியைக் குறைத்துக்கொண்டது. ஒரு கவைக்கு உதவாத தீர்மானத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்தது. எனினும் 2009 ஐ விட இது சற்று முன்னேறும் நகர்வு தான் என்று பல நாடுகள் ஆதரித்தன. இதிலும் இந்தியா துரோகம் செய்தது.
கடந்த ஆண்டு 2014 இல் சற்று முன்னேற்றமாக 2009 போரின்போது, சிங்கள இராணுவம் நடத்திய மனித உரிமை அழிப்பு குறித்து விசாரிக்க சுதந்திரமான விசாரணைக்குழுவை மனித உரிமைக் கவுன்சில் அறிவித்தது. இந்திய அரசு இந்த கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக இப்போதும் துரோகம் செய்தது.
‘ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் நியமித்த விசாரணைக் குழுவினரை இலங்கை தீவுக்குள் நுழையவிடமாட்டேன்’ என்று கொலைகார ராஜபக்சே கொக்கரித்தான்.
இந்தியாவில் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி அரசு முன்னைய காங்கிரÞ அரசின் துரோகத்தை அப்படியே பின்பற்றும் போக்கில் செயல்படும் என்று இந்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பேச்சுகள் உணர்த்தின.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி ராஜபக்சேவைத் தமது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்ததோடு, அந்தக் கொலைபாதகனை மீண்டும் இலங்கை அதிபராக வேண்டும் என நரேந்திர மோடி வாழ்த்தியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத துரோகமாகும். மேலும் இந்தியப் பிரதமர் எவரும் செய்யாத, செய்யத் துணியாத ராஜ்ஜிய வரம்பு கடந்த கண்ணியக் குறைவான செயலும் ஆகும்.
இலங்கையில் இந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறிசேனா ஈழத்தமிழர்களை கருவறுக்கத் துடித்த ஜே.வி.பி. அமைப்பில் செயல்பட்டவர். 2009 தமிழினக் கொலையை நடத்திய ராஜபக்சே அரசின் இராணுவ அமைச்சராக செயல்பட்டவர். இந்திய அரசும், இலங்கை அரசும் ஈழத் தமிழர்களின் உரிமை உணர்ச்சியையும் நியாயமான எழுச்சியையும் அடியோடு அழித்து ஒழிக்கின்ற வேலைக்கு திட்டம் தீட்டி விட்டார்கள் என்பதை பல்வேறு முனைகளில் இருந்து அறிய நேர்ந்தது.
‘ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒருபோதும் கிடையாது. இங்கு ஒற்றை ஆட்சிமுறைதான்’ என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துவிட்டார். ‘தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை ஒருபோதும் வெளியேற்ற மாட்டோம்’ எனறு புதிய அதிபர் பாலசிறிசேனா சொல்லிவிட்டார்.
ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் நியமித்த விசாரணைக்குழு அறிக்கை, அடுத்த மாதம் மார்ச்சில் கூட இருக்கிற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்வதாக இருந்தது. இதனைத் தாக்கல் செய்யக்கூடாது என்று பால சிறிசேனா அரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதற்காகவே இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பயணம் செய்தார்.
இந்த நிலையில் இலங்கையின் வடக்கு மாகாண சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேÞவரன் அவர்கள், சட்டசபைத் தீர்மானத்தை அறிவித்தார். அதன்படி, “ஈழத்தில் நடந்தது போர்க் குற்றமல்ல; இனப்படுகொலை என்றும், இது குறித்து 1950 களில் இருந்து அண்மைக்காலம் வரை நடைபெற்ற தமிழினக் கொலைகள் குறித்து ஐ.நா.மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், இனப்படுகொலை குற்றவாளியான சிங்கள அரசை சர்வதேச நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் ஐ.நா. பாதுகாப்புச் சபை நிறுத்த வேண்டும்” என்றும் நீதி கோரப்பட்டது.
இந்தப் பின்னணியில் சிங்கள அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இலங்கை அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகிவிட்டன. இதைவிட தமிழினத்திற்கு ஒரு துரோகத்தை எவரும் செய்ய முடியாது.
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் பொறுப்பேற்ற பின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனக்கொலை நடத்திய இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். அதன் பின்னர், 2013 மார்ச் 27 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழ் ஈழத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஜனநாயக இருதயமான தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொலைகார சிங்கள அரசை தோளில் தூக்கி வைத்துப் பாராட்டி, சிங்கள அரசின் வர்த்தகப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒப்பந்தம் போட்டது அயோக்கியத்தனமானது; ரணமாகிப் போன தமிழர் நெஞ்சங்களில் சூட்டுக்கோலைத் திணிக்கின்ற மூர்க்கமான கொடுமையாகும்.
பிரதமர் அறிவித்துள்ள ஒப்பந்தங்கள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை - தமிழக மக்களை மிகத் துச்சமாக மதித்து எடுக்கப்பட்ட எதேச்சதிகார நடவடிக்கையாகும். நரேந்திர மோடி அரசு வினையை விதைத்திருக்கிறது. விரைவிலேயே எதிர் வினையை அறுவடை செய்ய நேரும்.
ஒரு உண்மையை தாய்த் தமிழகத்திலும் தரணி எங்கும் உள்ள தன்மான உணர்ச்சிகொண்ட தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். ஈழத் தமிழ் குலத்தையும், தமிழ் இனத்தையும் அநீதியின் இருட்டில் நிரந்தரமாக அழுத்துவதற்கு இன்றைய நரேந்திர மோடி அரசும் தீட்டம் தீட்டிவிட்டது என்பது தான் அந்த உண்மையாகும்.
ஐ.நா.வின் புதிய மனித உரிமை ஆணையாளர் ரவுத் அல் உசைன், இலங்கை குறித்து விசாரணை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படாது என்றும், செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது என்றும் நேற்று அறிவித்தது மிகவும் அதிர்ச்சி தருகிறது. ஆறு மாதத்திற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் இதே ஆணையாளர் உசைன்தான் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள்கூட சொல்லமுடியாத அநீதி நடக்கிறது என்று அதிர்ச்சியுற்றதாகக் கூறினார். அதே ஆணையாளர்தான் விசாரணை அறிக்கையை செப்டம்பரில் வெளியிடுவேன் என்கிறார்.
ஐ.நா.மன்றத்தில் நீதி இருப்பது உண்மையானால், மனித உரிமைக் கவுன்சிலுக்கு மனித உரிமைகள் மீது அக்கறை இருப்பது உண்மையானால், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் இலங்கைத் தீவிற்குச் சென்று இனக் கொலையுண்டு மடிந்த ஈழத்தமிழர் தாயகத்திற்கு குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்கின்ற நிலையை ஏற்படுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதனைச் செய்யா விட்டால், மனித உரிமை கவுன்சில் என்பது உலகத்தை ஏமாற்றுகின்ற விளம்பரக் கவுன்சில் என்றுதான் பொருள்படும்.
புதிய அதிபர் விசாரணைக் குழுவை அனுமதிக்காவிட்டால், சிங்கள அரசின் கோரமுகம் மீண்டும் உலகுக்கு வெளிப்படும். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பொறுப்பில் முன்னர் இருந்த ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்தியா-இலங்கை போட்டுள்ள பொருளாதார ஒப்பந்தங்கள் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களுக்கு எதிரானது எனக் கண்டித்தும், மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக் குழுவினர் இலங்கையின் தமிழர் தாயகத்திற்குச் சென்று விசாரணை நடத்துவதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றப்படும் தீர்மானம், தமிழர்களின் இதயங்களில் சூழ்ந்துள்ள வேதனை இருட்டுக்கு மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக விளங்கும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’ 
சென்னை - 8

No comments:

Post a Comment