எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு, இரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து இருக்கின்றது.
2014 இல் பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற உடனேயே பயணிகள் கட்டணம் 14.2 விழுக்காடு, சரக்குக் கட்டணம் 6.5 விழுக்காடு உயர்த்தப்பட்டது. தற்போது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துள்ள நிலையில், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தைக் குறைப்பதற்கு இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முயற்சிக்கவில்லை.
இரயில்வே துறையின் வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் 8.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் தேவை என்றும், தனியார்-அரசு பங்கேற்புடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துவிட்டு, இரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று கூறுவது முரணாக இருக்கிறது.
இரயில்வே துறையின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அந்நிய நேரடி முதலீடுகளும் பெறப்படும் என்று அறிவித்து இருப்பதால், உண்மையில் இரயில்வே துறை தனியார் மயம் நோக்கிப் போய்க்கொண்டு இருப்பது தெளிவாகிறது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள ‘தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய திட்டங்களுக்கு இரயில்வே முன்னுரிமை கொடுக்கும் என்று இரயில்வே அமைச்சர் கூறுகிறார். ஆனால், இத்திட்டங்களை முழுக்கமுழுக்கத் தனியார்துறையின் பங்கேற்பில் மட்டுமே நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வந்த மோடி அரசு, அதே நோக்கத்திற்காக இரயில்வே துறையின் நிலங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆபத்து உருவாகி இருக்கின்றது.
தமிழ்நாட்டின் இன்றியமையாத தேவைகளான இராயபுரத்தில் புதிய முனையம் அமைப்பது, சென்னை-கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை, அகலப்பாதைத் திட்டங்கள், ஆய்வு செய்யப்பட்ட புதிய வழித்தடங்கள் அமைத்தல், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் புதிய இரயில் சேவை, மற்றும் புறநகர் இரயில்சேவை விரிவாக்கம் போன்றவை குறித்து இந்த இரயில்வே பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் பற்றி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று இரயில்வே அமைச்சர் குறிப்பிட்டு இருப்பது, இதுவரையில் இல்லாத நடைமுறை ஆகும்.
இரயில்வே திட்டங்களுக்காக மாநிலங்கள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து கையேந்த வேண்டிய நிலைமையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.
இரயில்வே துறை மேம்பாட்டுக்காக வங்கிக் கடனுடன், லட்சக்கணக்கான ஊழியர்களின் ஓய்ñதிய நிதியைத் திருப்பி விடுவது ஏற்கத்தக்கது அல்ல.
இரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துதல், பயணிகள் குறை தீர்க்க இலவச தொடர்பு எண்கள் அறிவிப்பு, இணைய வழி சேவைகள் அறிவிப்பு போன்றவற்றை வரவேற்கலாம்.
இரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தல், இரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல், பசுமைக் கழிவறைகள் ஏற்படுத்துதல், பெண் பயணிகள் பாதுகாப்பு, முக்கிய இரயில் நிலையங்களில் வைஃபை வசதி, குறைந்த விலையில் தரமான குடிநீர் விற்பனை போன்றவை அனைத்தும் கடந்த இரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.
மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட், காகித அறிவிப்பாகவும், கானல் நீராகவும் காட்சி அளிக்கின்றது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment