உலகத் தமிழர்களின் நெஞ்சத்தை துன்ப இடி தாக்கிய துயரமான நாள்தான் இன்றைய பிப்ரவரி 20 ஆம் நாள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2011 இல் இதே நாளில் தமிழ்க்குலத்தின் தவமைந்தன் நான் நெஞ்சால் பூஜிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனை தன் மணிவயிற்றில் சுமந்த வீரத்தாய் பார்வதி அம்மையார் தாங்க முடியாத சித்தரவதைகளை மனதில் சுமந்துகொண்டே இம்மண்ணைவிட்டு மறைந்தார்.
தமிழர்களின் வரலாற்றில் அழியாத புகழ் படைத்த பிரபாகரன் அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளையும், தாயார் பார்வதி அம்மாளும் வழிபடத்தக்கவர்கள். சிங்கள பேரினவாத அரசு இராணுவத்தை ஏவி இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்த நாட்களில் உள்ளம் உடைந்து இவ்விருவரும் நொறுங்கிப்போனார்கள்.
சின்னஞ்சிறு பிராயத்தில் தாயக விடுதலைக்காக வல்வெட்டித்துறை இல்லத்தைவிட்டு வெளியேறிச் சென்ற தங்கள் வீர மைந்தனை பல கட்டங்களில் வருடக்கணக்கில் சந்திக்க இயலாமலே இருந்தார்கள்.
2010 ஜனவரி 7 ஆம் நாள் உத்தமர் வேலுப்பிள்ளை சித்தரவதைகளைத் தாங்கியவாறு சிங்கள இராணுவ முகாமில் மறைந்தார். உள்ளம் சுக்கல் நூறாகிப்போன அன்னை பார்வதி அம்மையார் பிணி வயப்பட்டு மிகவும் நலிந்த நிலையில் மலேசிய நாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் தாய்த் தமிழகத்தில் உயர்தர சிகிச்சையைப் பெறுவதற்காக உடல் நலம் மிகவும் நலிவுற்ற நிலையில், மலேசியாவில் இருந்து விமானத்தில் பயணித்து 2010 ஏப்ரல் 16 ஆம் நாள் இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அவர்களை விமான நிலையத்திலிருந்து எந்த ஆரவாரமும் இன்றி அழைத்துச்செல்ல வேண்டும் என்று அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், நானும், கவிஞர் காசிஆனந்தனும் காத்திருந்தோம். அப்பொழுதுதான் மனிதாபிமானத்தை அடியோடு குழிதோண்டிப் புதைக்கின்ற அக்கிரமம் நடந்தது.
அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உத்தரவின்படி, சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் குவிந்தனர். முதல்வரின் விருப்பப்படியே இந்தியாவின் அன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஏற்பாட்டின் பேரில், அன்னை பார்வதி அம்மையார் விமானத்தைவிட்டே கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. அண்ணன் நெடுமாறன் அவர்களும், நானும் அனுமதிச் சீட்டு பெற்றிருந்தும், காவல்துறையினர் எங்களை பார்வையாளர்கள் பகுதிக்கே அனுமதிக்கவில்லை.
அன்னை பார்வதி அம்மையாரின் புனிதக் காலடிகள் தமிழக மண்ணில் படாமலே திருப்பி அனுப்பப்பட்டார். நாங்கள் வேதனையால் துடித்தோம். பின்னர் இலங்கையின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களின் முயற்சியால் அன்னை பார்வதி அம்மையார் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். யாழ் மருத்துவமனையிலேயே உள்ளமும், உடலும் நலிந்து படுக்கையில் இருந்தார். அன்னை பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு மத்திய-மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து அண்ணன் நெடுமாறன் அவர்களும், நானும் ஏற்பாடு செய்த உண்ணாவிரத அறப்போர் சென்னையில் நடந்தது.
2011 பிப்ரவரி 20 ஆம் தேதி, அன்னை பார்வதி அம்மையார் மறைந்தார். வல்வெட்டித் துறையில் அம்மையார் அவர்களின் இறுதிச் சடங்குகளின்போது நான் தொலைபேசி வாயிலாக இரங்கல் உரை ஆற்றினேன். நமது அன்னை பார்வதி அம்மையாரின் நல்லுடல் சிதையில் வைத்து நெருப்பு மூட்டப்பட்ட பின், சிங்கள இராணுவத்தினர் மூன்று நாய்களைச் சுட்டுக்கொன்று, அந்த நாய்களின் உடல்களை அன்னையின் சிதையில் வீசிய கொடூரச் செயல் நடந்தது.
உலகத்தில் இப்படிப்பட்ட மாபாதகச் செயல் எங்கும் நடந்தது இல்லை. இக்கொடுஞ்செயலைக் கண்டித்து பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று இலங்கைத் தூதரகத்தை அகற்றக்கோரி சென்னையில் பழ.நெடுமாறன் அவர்களும், நானும் அறப்போர் செய்து கைது செய்யப்பட்டோம்.
தாய்குலத்தின் அந்த மணிவிளக்கையும், அந்த உத்தம தந்தையையும் மனதால் வணங்கியவாறு பலமுறை சந்தித்தேன். நமது அன்னையார் உடல்நலம் குன்றி திருச்சியிலும், முசிறியிலும் சிகிச்சை பெற்றபோதும் பலமுறை சென்று பார்த்திருக்கிறேன்.
எனது மூத்த மகளின் ஆண் பிள்ளையை பார்வதி அம்மையார் மடியில் வைத்து, வேலுப்பிள்ளை அவர்கள் 1997 ஆம் ஆண்டு என் பேரனுக்கு பிரபாகரன் என்னும் பெயர் சூட்டும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 1998 நவம்பரில் என் மகன் திருமணத்துக்கு இருவருமே வந்து ஆசி வழங்கிய பேறும் கிட்டியது.
தமிழகத்தில் உணர்வுள்ள பல தலைவர்கள் பார்வதி அம்மையார் அவர்கள் தமிழ் நாட்டில் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டபோது கண்டனம் தெரிவித்தார்கள்.
அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச் சாம்பலை ஈழத்துச் சகோதரர்கள் அனுப்பி வைக்க, அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்பாட்டின் பேரில் 22.3.2011 அன்று சென்னை மெரினா கடலிலும், 31.3.2011 அன்று கன்னியாகுமரி கடலிலும் கடல் அலைகளில் கரைக்கப்பட்டது.
ஈழத் தமிழ்க் குலத்தின் வழிபாட்டுக்குரிய அன்னை பார்வதி அம்மையாரின் நினைவு நாளாகிய இன்று அவரது இதயக் கனவுகளை நனவாக்க சுதந்திரத் தமிழ் ஈழ விடுதலையை நிலைநாட்ட சபதம் ஏற்போம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment