Thursday, July 28, 2016

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - 28.07.2016 தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 27.07.2016 வியாழக்கிழமை, தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் எண் 1:
கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமய - தனியார் மய - உலக மயமாக்கல் கொள்கை அனைத்துத் துறைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. சமச்சீரற்ற வளர்ச்சியால் ஏற்றத் தாழ்வுகள் பெருகிவிட்டன. ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடக்கின்றது. மறுபுறம் பெரும்பான்மையான மக்கள் உணவுக்கு வழியின்றித் தவிக்கின்றனர்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசு மீண்டும் அதையே தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றது. இரண்டு ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பு வகிக்கும், பா.ஜ.க. அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறி விட்டது. முன்பேர வணிகம், இணையதள வணிகம் (Online Trade) ஆகியவை பொருள்களின் விலையேற்றத்திற்குக் காரணமாக உள்ளன. அவற்றை இரத்து செய்வதற்கு பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்கவில்லை. அதனால் விலைவாசி உயர்வு என்ற பெரும் சுமை மக்கள் மீது ஏற்றப்படுகிறது.

சில்லரை வணிகத்திலும் இன்றியமையாத துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கி வருகின்றது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, மக்கள் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான சிறு, குறு, தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், இலட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு பா.ஜ.க. அரசு பன்னாட்டு நிறுவங்களின் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றது. ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. சம வேலைக்கு - சம ஊதியம் என்பதை நடைமுறைப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தயாராக இல்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குச் சமூக பாதுகாப்பு இல்லை.

எனவே, புதிய தாராளமயக் கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை இரத்து செய்யக் கோரியும், 2016 செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டில்அனைத்து மத்திய-மாநில அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 2:
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை நேரிடையாகத் தேர்வு செய்யும் முறையை மாற்றி, மாநகராட்சி உறுப்பினர்களின் மூலம் தேர்வு செய்கின்ற வகையில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மக்களின் வாக்கு அளிக்கும் உரிமையைப் பறிக்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். எனவே இந்தத் திருத்தத்தை இரத்து செய்து, மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது வரவேற்கத்தக்கது. எனினும் சுழற்சி முறையில் பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர் உள்ளாட்சிப் பதவிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 3:
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகம் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது. வட தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடிக்கும், இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பாலாற்றில் வரும் சொற்ப நீரையும் தடுக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்திற்கு உரியது ஆகும்.

1892 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு மாகாண அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி காவிரி, பாலாறு உள்ளிட்ட 15 ஆறுகளில் நீரின் போக்கைத் தடுக்கும் வகையில் கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்குத் தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால் ஆந்திர அரசு, அம்மாநிலத்தில் பாலாறு பாயும் மொத்தம் 33 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 22 தடுப்பு அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வருகின்ற நீரைத் தடுத்து இருக்கின்றது. தற்போது வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் புல்லூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 15 அடியாக உயர்த்தி உள்ளது. மேலும், பெகிலிரேவு, கங்குந்தி போன்ற இடங்களிலும் தடுப்பு அணையின் உயரத்தை அதிகரிக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதே நிலை தொடருமானால் பாலாற்றில் ஒரு சொட்டு நீர் கூடத் தமிழ்நாட்டுக்கு வரும் வாய்ப்பு இல்லை. எனவே ஆந்திர மாநில அரசின் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய -மாநில அரசுகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 4:
காவிரி பாசனப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், விவசாயிகளைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருக்கின்றார். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை அழித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2015 அக்டோபர் 8 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையின்படி, மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்தது.

ஆனால், தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தைத் திட்டமிட்டவாறு செயல்படுத்துவோம் என்று தெரிவித்து இருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீத்தேன் திட்டத்தால் சோழ மண்டலமே முற்றிலும் சீரழியும் நிலைமை உருவாகும் என்று எச்சரிக்கை செய்வதுடன், தமிழக அரசு மீத்தேன் எரிவாயு மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க., வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 5:
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்விக் கடன் பெற்று பொறியியல் பட்டப் படிப்பு பயின்ற மதுரையைச் சேர்ந்த மாணவர் லெனின், கல்விக்கடனைச் ஒட்டுமொத்தமாகச் செலுத்துமாறு வங்கியின் சார்பில் முகவர்கள் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு, தமிழ்நாட்டில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

தமிழகத்தில் சுமார் 10 இலட்சம் மாணவர்கள், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கல்விக் கடன் பெற்றுள்ளனர். நிலுவையில் உள்ள இத்தொகையில் சுமார் 1875 கோடி ரூபாய் வாராக் கடன்கள் என்று வங்கிகள் மதிப்பீடு செய்துள்ளன. இதில் பாரத Þடேட் வங்கி 872 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை ரிலையன்Þ நிறுவனத்திற்கு அதன் 45 சதவீத விலையில் விற்பனை செய்து இருக்கின்றது. எனவே, அக்கடன்களை வசூலிப்பதற்கு ரிலையன்Þ நிறுவனம் அடியாட்களை ஏவி கல்விக் கடன் பெற்றவர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். எனவே, தேர்தலின்போது முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவர்களின் கடன்களையும் தமிழக அரசே செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 6:
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்த தமிழக அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்பதை பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 7:
தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்றது. கூலிப்படைகள் புற்றீசல் போல் பரவி வருகின்றன. படுகொலைகள் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன. வீடு புகுந்து கொள்ளையடித்தல், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய சட்டம் ஒழுங்கு சீரழிவுகளைக் கண்டு பொதுமக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.

கூலிப்படைகளை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கவும், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 8:
புதியக் கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு அமைத்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. அதன் ஒருசில பகுதிகளை மட்டும் வெளியிட்டு, ஜூலை 31 ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது.

கல்வியாளர்கள், பல்துறை அறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் விரிவான கருத்துக்கேட்பு நடத்தாமலும், மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்காமலும் புதிய கல்விக்கொள்கையை டி.எÞ.ஆர்.சுப்பிரமணியம் குழு வரைந்துள்ளது.

மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் கல்வித்துறையை மத்திய அரசின் வரம்புக்குள் முழுமையாகக் கொண்டு செல்ல புதிய கல்விக் கொள்கை பரிந்துரை செய்கின்றது. பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்து, அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவியை நிறுத்தவும், பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி ஊடுருவவும் புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கின்றது.

திறன் பயிற்சி என்ற பெயரால் எட்டாம் வகுப்பில் இருந்தே தொழிற்கல்வியைக் கற்றுத் தர வேண்டும் என்று, குலக்கல்வித் திட்டத்திற்கு நவீன முறையில் உயிரூட்டவும், அரசியல் சட்டம் வழங்குகின்ற இட ஒதுக்கீடு, சமூக நீதி உரிமையைப் பறிக்கவும் புதியக் கல்விக் கொள்கை இடம் அளிக்கின்றது. நாட்டின் விடுதலைக்குப் பின்னர் கடந்த 69 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, இந்துத்துவா செயல்திட்டத்தைப் புகுத்த முயற்சிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தமிழக அரசு இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதை உறுதியாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 9:
தமிழ்நாட்டில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் அரசு கலைக் கல்லூரிகளில்தான் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள மொத்தம் 87 அரசு கலைக் கல்லூரிகளில் 46 கல்லூரிகளில் முதல்வர் பணி இடங்கள் காலியாக உள்ளன; ஆறாயிரம் ஆசிரியர் பணி இடங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால் அரசு கல்லூரிகளின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. கௌரவ விரிவுரையாளர்களாக 1800 பேரை நியமனம் செய்து, அவர்களுக்கு சொற்ப ஊதியமே அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையும், உயர்கல்வித்துறையும் சீர்குலைந்து கிடக்கும் நிலையில், மூன்று பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவியும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. உயர் கல்வித்துறைச் செயலாளர் பதவியும் காலியாக இருக்கின்றது.

அதிமுக அரசின் கல்வித்துறை செயல்பாடுகளுக்கு இவை சான்றாக உள்ளன. எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.வேண்டுமென மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 10:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளையே பா.ஜ.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பட்டு வருகின்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை மோடி அரசு தீவிரமாக்கி வருகிறது. மத்திய அரசு 2015 -16 நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் 41,000 ஆயிரம் கோடி ரூபாயும், பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக தனியாரிடம் தாரை வார்ப்பதன் மூலம் 28,500 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 69,500 கோடி ரூபாய் நிதி மூலதனத்தைத் திரட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்கும் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் இயங்கி வரும் சேலம் உருக்கு ஆலையை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.

2010 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ.100 கோடி லாபம் ஈட்டிய சேலம் உருக்காலையில் நிரந்தரப் பணியாளர்கள் 1300 பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள்1,200 பேரும் பணியாற்றுகின்றனர். மேலும் மறைமுகமாகசுமார் 5,000 பேருக்கு இந்நிறுவனம் வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.

எஃகு உற்பத்திக் கூடம் அமைப்பதற்கு ரூபாய் 2000 கோடி முதலீடு செய்யப்பட்டதால் தற்போது சேலம் உருக்காலை நிறுவனம் கடன் சுமையில் இருக்கின்றது. மத்திய அரசு இந்நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, சேலம் உருக்காலையைத் தொடர்ந்து இயங்கிட வழிவகை செய்யாமல், தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு சேலம் உருக்காலை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்தியஅரசின் முடிவை தடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து மாநாடு நடத்தி மிக சிறப்புடன் கொண்டாடி வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ஆண்டு செப்டம்பர் 15 இல் அறிஞர் அண்ணாவின் 108 ஆவது பிறந்த வாள் விழா மாநாட்டை காவிரி நதிக்கரையில், திருச்சி மாநகரில் சீரும் சிறப்புடனும் வெற்றிகரமாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது என தலைமை கழகமான தாயகம் தெரிவித்துள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, July 27, 2016

தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

வருகிற 28-07-2016 வியாழன் காலை 10 மணி அளவில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கழக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது என்ற செய்தியை மதிமுக அதிகாரபூர்வ ஏடான சங்கொலியில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் அறிவிப்பு!

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று 27-07-2016 மாலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கு பின்னர் ‪‎மாவை‬ ‎மகேந்திரன்‬ அவர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் கழக கண்மணிகள் இணைந்து பணியாற்றி ஒத்துளைப்பு வழங்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பழங்குடி மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வனச்சரக காவலர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்க! வைகோ அறிக்கை!

தேனி -மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பளியர் குடியிருப்பில் முப்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலையில் விளையும் பொருட்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.


கடந்த ஜூலை 16 ஆம் தேதி, கம்பம் கிழக்கு வனச்சரகம் பெரிய சுருளி மலைப்பகுதியில் தேன் மற்றும் வேர்க்கிழங்குகளைச் சேகரித்துகொண்டு பழங்குடிகளான ஐந்து ஆண்களும், நான்கு பெண்களும் திரும்பி வந்துகொண்டு இருந்தனர். அப்போது சுருளிப்பட்டிக்கு அருகே வனச்சரகக் காவலர்கள் ஐந்து பேர் அவர்களை மறித்து, அவர்களிடம் இருந்த தேன், கடுக்காய், நன்னாரி வேர் மற்றும் இதர மலைப் பொருட்களைப் பறித்துக் கொண்டனர். சோதனை செய்வதாகக் கூறி பெண்கள் கட்டியிருந்த சேலையை அவிழ்க்கச் செய்தனர். மேலாடையுடன் நின்றிருந்த அவர்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர். ஆண்களையும் சட்டை, வேட்டிகளை அவிழ்த்து உள்ளாடையுடன் நிற்க வைத்துக் கேவலப்படுத்தியுள்ளனர். நியாயம் கேட்ட பழங்குடியின ஆண்களை அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர்.

வனச்சரகக் காலவர்களின் அத்துமீறலைக் கண்டித்து பழங்குடியின ஆண்கள் வருசநாடு வனச்சரக அலுவலகத்தில் நியாயம் கேட்கப் போனபோது, அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி இழிவுபடுத்தியது மட்டுமின்றி, வனச்சரக அலுவலகத்தைத் தாக்க வந்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வருசநாடு காவல்நிலையத்தில் அடைத்து வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

வனச்சட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு வனப்பகுதிகளில் பொருட்கள் சேகரிக்க உரிமை உண்டு என்பதை அறிந்திருந்தும், வனச்சரகக் காவலர்கள் சோதனை என்கிற பெயரில், பழங்குடிப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததும், ஆண்களை அடித்து உதைத்து இரத்தக் காயம் ஏற்படுத்தியதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

அப்பாவி ஏழை, எளிய பழங்குடியின மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வனச்சரகக் காவலர்களை தமிழக அரசு உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, July 26, 2016

திருமண அழைப்பிதழை வைகோவிடத்தில் வழங்கினார் கொளத்தூர் பகுதி செயலாளர்!

கொளத்தூர் பகுதி செயலாளர் திரு.ஜி.ஆர்.பி ஞானம் அவர்கள் இன்று 26-07-2016 காலை தனது மகன் ராஜசேகர் அவர்களின் திருமண உறுதி அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்களிடம்  அளித்து ஆசி பெற்றார்கள்.

அப்போது வடசென்னை கிழக்கு மாவட செயலாளர் சு.ஜீவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, July 25, 2016

வழக்கறிஞர்கள் போராட்டம் - வைகோ அறிக்கை!

தமிழகத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்த புதிய விதிகளைத் திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கும் நீதித்துறையின் அங்கமாக இருக்கும் வழக்கறிஞர்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அகில இந்திய பார் கவுன்சில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள 126 வழக்கறிஞர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது.

இயற்கை நீதிக்கு முரணாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் நீதிமன்றம் அங்கீகரிப்பதில்லை. நீதியை நிலைநாட்ட மக்களுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள் மீதே இயற்கை நீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் பெற்ற தமிழக பார் கவுன்சிலும், அதன் பொறுப்பாளர்களும் இருக்கும்போது அகில இந்திய பார் கவுன்சில் ஏன் அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளது? உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களைப் பழிவாங்கும் செயலாகவும் இது பார்க்கப்படுகின்றது.

அகில இந்திய பார் கவுன்சில் 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற்று அமைதி ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.

ஒரு சில நாட்களிலேயே இந்தப் பிரச்சினையை சென்னை உயர் நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். இன்று கூட மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள், உயர் நீதிமன்றம் இதுவரை புதிய சட்ட விதிகளின்படி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கும்போது, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பில் இருக்கும் பார் கவுன்சில், தங்களது உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து அவசர முடிவாக அறிவித்துள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 44 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையையும் திரும்பப் பெற வேண்டும்; வழக்கறிஞர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட விதிகளை உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெறுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.

கடந்த 55 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர்களின் குடும்பங்களும், நீதிமன்றத்தை நாடும் பொது மக்களும் பெரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றங்கள் மூலம் பெற வேண்டிய பாதுகாப்பையும், உரிமையையும் பெறுவதற்கு வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் முடிவு காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்கிவிடும் என வைகோ எச்சரிக்கை!

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக அரசிடம் பேசி, விவசாயிகளைப் பாதிக்காத வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

காவிரி பாசனப் பகுதியைப் பாலைவனம் ஆக்கி, சுமார் 50 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்குவது மட்டுமின்றி, வேளாண்மைத் தொழிலையே அழிக்கும் திட்டம்தான் மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகும். கிலோ மீட்டர் கணக்கில் துளையிட்டு, வேதி கரைசல்களை உயர் அழுத்தத்தில் பூமிக்குக் கீழ் செலுத்தி பாறைப் படிமங்களை உடைக்க வேண்டும். ‘நீரியல் விரிசல் முறை’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். நிலத்தடி நீரை வெளியேற்றி, மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்வளம் குறைந்துவிடும். மேலும் பூமியின் கீழே இராசயனக் கழிவுகள் செலுத்தப்படுவதால், பூமியின் மேற்புறம் நஞ்சாக மாறி விடும். இதனால் விவசாய சாகுபடி நிலம் முற்றாக அழிந்து, விவசாயிகள் தங்கள் தொழிலையே கைவிட்டுவிட்டு இடம் பெயரும் பெரும் ஆபத்து சூழும்.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்ட மக்களின் வாழ்வைப் பாதிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் தொடுத்த வழக்கைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 2015 அக்டோபர் 8 ஆம் தேதி தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது இல்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்தது.

இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு, மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்த முனைவது தமிழக மக்கள் மீது காட்டும் அக்கறையை பிரதிபலிக்கிறது. மத்திய அரசுக்கு தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து, மீத்தேன் எரிவாயு திட்டத்தையே முற்றாக இரத்து செய்து, காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, July 24, 2016

தென்சென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

எம்.ஜி.ஆர் நகர், ஓம் சர்மா திருமண மண்டபத்தில் தென்சென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று 24-07-2016 மாலை நடந்தது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இழப்புகள் எங்கள் வேகத்தை தடுக்காது. இழப்புகள் எங்களுக்குப் புதிதல்ல. மீத்தேனை மத்திய அரசு திணிக்க முயல்கின்றது. தமிழக அரசு தடுக்க வேண்டும். படிம பாறை வழக்கிலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழ மண்டலத்தை வேளாண் காப்பு மண்டலமாக இருக்க வேண்டும். கெயில் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லக் கூடாது.

பியூஸ் அவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதச்சார்பற்ற தன்மையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். விமான விபத்து மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து சந்திக்கும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் Aug 3 மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

நிகழ்வு தொடக்கமாக தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் Saidai P Subramani அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். பின்னர் நிர்வாகிகள் உரையாற்றினார்கள். சிறுவன் பிரபாரகன் அந்த பெயருக்கேற்ற வீரத்துடன் உரையாற்றி தலைவர் வைகோ அவர்களின் நன் மதிப்பை பெற்றது பாராட்டுக்குரியதாகும்.

இறுதி சிறப்புறையாற்றிய கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை தொடங்கையிலே, இயக்கத்தின் உயர்வே தன் வாழ்வு என்று பாடுபட்டு வந்த,22 ஆண்டுகளுக்காக பாடுபட்டு வருகின்ற ஆருயிர்த் தம்பி Saidai P Subramani அவர்களே என பேச தொடங்கினார்.

கடுமையான தாக்குதலுக்கு மத்தியில்,சோதனைகளுக்கு மத்தியில் இன்ப அதிர்ச்சியான நிகழ்ச்சி. உங்களால் தான் நான் இயங்குகின்றேன். உங்கள் உயர்வை நினைத்து, பட்ட பாட்டுக்கு பலன் கிடைக்கவில்லையே என்று நீங்கள் வருகின்ற பொழுது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மறக்க முடியும். நான் நன்றி உணர்ச்சி மிக்கவன்.

இந்த சூழ்நிலையிலும் 3 இலட்சத்து 22 ஆயிரம் கொடுத்திருக்கின்றீர்கள். நீங்கள் தான் முதல் மாவட்டம். 22ஆண்டுகளாக கட்சியை நடத்தி வருகின்ற நீங்கள்,100 தான் என்று அறிவித்தேன். எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால், எல்லோரும் அண்ணன் தம்பிகளாக ஒருங்கிணைந்து பணியாற்றியிருக்குன்றீர்கள். தம்பி சுப்பிரமணி இந்த அணுகுமுறை கழகத்தை உயர்த்தும். தொண்டர்களின் உதிரத் துளியிலே உருகி உருவான கட்சி. நம்மை போன்று சோதனைகள் நம் கட்சி போல் இந்தியாவில் யாருக்கும் கிடையாது. தோற்பதைப் பற்றி கவலைப்படாதே என்பதற்கு வரலாற்றைச் சொல்வார்கள். ஆறு முறை போர்க்களத்திலே தோற்றான் ஸ்காட்லாந்து மன்னன் இராபர்ட் புருஷ்.தோற்பவர் வெல்வார் என்பதற்கு இராபர்ட் புருஷ். அரசியல் கட்சிகளின் வரலாற்றை பற்றி எழுதும் போது, கிரேக்கத்து பீனிக்ஸ் பறவை போல நின்றார்கள் என்பார்கள். நம் தலைவரின் பெயரைத் தாங்கியிருக்கின்ற தம்பி பேசினார். எதிர்காலத்தில் ஒரு சொற்பொழிவாலனாக வருவான். அந்தக் குடும்பத்தின் தியாக உணர்வை சத்யா சொன்னார். சின்னவன் (எ) சேக் அப்துல்லா இருக்குறாரே அவருக்கு வந்த துன்பம் யாருக்கும் வராது. அப்படி இருப்பினும் இயக்கப் பணியாற்றுகின்ற ,சின்னவன்கள் இருக்கின்ற பொழுது கழகத்தை யாரும் சாய்க்க முடியாது.

வானம் பொழிகின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் தேடிய பொழுது, வேட்டை நாயை முயல் விரட்டியது போல, அது போல எவ்வளவு தான் பழிச்சொற்களைத் தாங்குவோம், யார் மீதும் எங்களுக்கு கோபம் இல்லை. யார் குடியைக் கெடுத்தோம். மனதில் இருக்கின்ற துயரத்தை வைத்துத் தான் பேசினேன்.

இந்த வைகோ உங்களை ஒரு நாளும் தலைகுனிய விட மாட்டான். உங்களுக்கு புகழ் கொடுக்காவிட்டாலும், பழிச்சொல்லுக்கு ஆளாக விட மாட்டான். ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் ஆதரித்துப் பேசியதால் வழக்கு தொடுக்கப்பட்டது. 2009 இல் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. நான் சிறை செல்வேன் என்று கவலைப்பட்டதில்லை. எந்த பழிச்சொல்லும் நிற்காது. நீங்கள் கொடுக்கின்ற 3 இலட்சத்தை 30 கோடியாக நினைக்கிறேன்.

அடுத்தடுத்த களங்களில் நல்ல முயற்சி எடுத்தோம். ஊழலற்ற ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கப் பாடுபட்டோம். மதுரை மாநாடு அதிர்வலைகளை உருவாக்கியது. நான் என்னை முன்னிலைப்படுத்தியதில்லை என்பது தோழர்களே உங்களுக்குத் தெரியும். ஸ்லைர்லைட் வழக்கில் 7 மணி நேரம் வாதாடினேன். உங்கள் நேர்மை அனைவரும் அறிந்த ஒன்று என்று லிபரான் சொன்னார். நீங்கள் பெருமைப்படுகின்ற ஒரே விசயம் நேர்மை. அதை சிதைக்க முயன்றார்கள். அது முடியாது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சென்றவர்கள் பற்றி கவலையில்லை. ஒருவர் போனால் அங்கே வேகமாகப் பணியாற்றுகின்ற கழக குமார், சுப்பரமணி வருகின்றார்.

எல்லா இடத்திலும் தோற்றுப் போன இந்தக் கட்சியில் இவ்வளவு உறுதியான தோழர்கள் என்று நினைப்பார்கள். நம் இலக்கு தூய்மையானது என்று பேசினார்.

தகவல்: தீபன்

ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, July 21, 2016

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம்! தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து வைகோ கருத்து!

தமிழக நிதி அமைச்சர் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், புதிய வரிகள் இல்லாதது, ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவது போன்றவற்றைத் தவிர, சிறப்பாக வேறு எதுவும் இல்லை.

ஜெயலலிதா அரசின் 5 ஆண்டுக் காலத்தில் மாநிலத்தின் மொத்தக் கடன் 2 இலட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. தமிழக அரசு கடனுக்காக செலுத்தும் வட்டித் தொகை 24185.86 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. கடனில் மூழ்கி தத்தளிக்கின்ற தமிழக அரசு இதிலிருந்து மீள்வதற்கு நிதிநிலை அறிக்கையில் வழிவகை கூறப்படவில்லை.

வருவாய் பற்றாக்குறை 15854.47 கோடி ரூபாயாகவும், மொத்த நிதி பற்றாக்குறை 40533.84 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ள நிலையில், இலவசத் திட்டங்களுக்கான மானியமாக 68211.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. நிதி வருவாய்க்கான ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில், முதல்வர் அறிவித்த தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற இலக்கை எவ்வாறு அடைய முடியும்?

வேளாண்மைத் துறையில் நீடித்த நிலையான வளர்ச்சி என்பதை கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த அரசு வெற்று முழக்கமாக சொல்லி வருகின்றது. ஆனால், வேளாண்மைத் துறையின் வளர்சசி விகிதம் தொடர்ந்து சரிவை நோக்கியே போகின்றது. நடப்பு ஆண்டில் 147 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை அரசே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அரசு ஏறெடுத்துக்கூடப் பார்க்கத் தயாராக இல்லை. வேளாண் துறைக்காக நிதி ஒதுக்கீடு 1680.73 கோடி ரூபாய் என்பது போதுமானது அல்ல.

நதிநீர் பிரச்சினையில் தமிழகம் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது. முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு பிரச்சினை குறித்தும், காவிரி பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மீத்தேன், ஷேல் எரிவாயு திட்டங்களை இரத்து செய்வது குறித்தும், மேற்கு மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மாற்றுவது பற்றியும் மத்திய அரசுக்கு நிதிநிலை அறிக்கையில் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. அதுபோலவே நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர் பிரச்சினை, கச்சத் தீவு பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தாலும், உயர் கல்விக்காக ஒதுக்கீடு வெறும் ரூ.3679.10 கோடிதான் என்பது குறைவுதான். அதேபோல, சுகாதாரத்துறைக்கு ரூ.9073 கோடி என்பதும் போதுமானது அல்ல.

முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கின்றது என்று நிதி அமைச்சர் கூறி உள்ளார். ஆனால், முதலீடுகள் வெறும் ரூ.23 ஆயிரம் கோடிதான் வந்திருக்கிறது. தமிழகத்தில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இன்றித் தவிக்கும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும் என்று தேர்தல் நேரத்தில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் சிறு, குறு தொழிலகளின் வளர்ச்சிக்கும், ஊக்குவிப்புக்கும் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

உள்ளாட்சித் துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் என்கிற அறிவிப்பு வரவேற்கக் கூடியதுதான். ஆனால், சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி அரசின் முடிவு என்ன என்பதை தெரிவிக்கவில்லை. 7 அவது ஊதியக்குழு பரிந்துரைகள் பற்றி ஆராய உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள், குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்திருந்த முதலமைச்சர், அதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. 500 மதுக்கடைகளை மூடியதால், 6636 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று கூறுவது சரியல்ல.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், கூலிப்படை கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், தமிழகத்தில் அமைதி - வளம் - வளர்ச்சிக்காக அதிமுக அரசு பாடுபடுவதாக நிதி அமைச்சர் கூறுவது பற்றி மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கமான சடங்கு போல தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கின்றது என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

வடசென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ சிறப்புரை!

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் அம்பேத்கர் கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள குருச்சந்திரா திருமண மண்டபத்தில் 20-07-2016 மாலை 5 மணி அளவில் மதிமுக வடசென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், 20.07.2016 இன்று மறைந்த மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவரும், மதிமுக முன்னோடிகளுள் ஒருவருமான புதுவை செ.முத்து அவர்கள் மறைவிற்கும், நமது நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இணையதள வேங்கை பொறியாளர்‪ வடசென்னைசெல்வா‬ அவர்களின் மறைவிற்கும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக இணையதள தோழர் வட சென்னை வடசென்னை செல்வா அவர்களின் திருவுருவப் படத்தை தலைவர் வைகோ அவர்கள் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் இணையதள அணியினர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதில் உரையாற்றிய வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜீவன் அவர்கள், 5700 கோடியை பதுக்கியதை முதன்முதலில் உலகத்திற்கு அறிவித்த தலைவர் வைகோ அவர்கள் மீதா 1500 கோடி குற்றச்சாட்டு எனவும் கேள்வி எழுப்பினார்?

துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசும்போது, அழைத்தவன் எமன் என்று அறியாமலேயே சென்று விட்டாயே கண்ணதாசா, என்று அன்று எழுதிய இரங்கற்பாவை ஞாபகபடுத்தி உரையாடினார். மோடியும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரு தட்டில் வைத்தாலும் இன்னொரு தட்டில் இருக்கும் எங்கள் வைகோவுக்கு ஈடாகாது என்றார்.

இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பொதுச் செயலாளர் வைகோ முன்னினையில் கழகத்தில் இணைந்தார்கள். அவர்களை வைகோ பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இறுதி பேருரையாற்றிய பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசும்போது, என் ஊனோடும், உதிரத்தோடும் கலந்திட்ட என் சகோதரர்கள் ஏற்படுத்திய மன ஊக்கம். என்ன தவம் செய்தேன். எந்த பிரதிபலனும் பெறாமல், காணாமல் எனக்கு அரணாக இருக்கின்ற அந்த நன்றி உணர்ச்சியோடு உங்கள் முன்னால் நிற்கின்றேன்.

நான் ஆபத்துக்களுக்கு அஞ்சியதில்லை. தோல்வியைப் பற்றி எப்பொழுதும் பெரிதும் கவலைப்பட்டதில்லை.நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று முறை தோற்றிருக்கின்றேன். இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கின்றேன். வைகோவின் கார்கள் பெட்ரோல் போடப் பணம் இல்லாமல் தேங்கி நிற்பதாக ஒரு வாரப் பத்திரிகையில் செய்தி வந்ததால்,திமுக தோழர்கள் பெருமளவு கொடுத்தார்கள்.வேலூர் மருத்துவமனையில் என் தந்தையார் கிசிக்சை பெற்ற போது, நான் செலவளிக்க யோசிக்க மாட்டேன் என்று தந்தையார் சொன்னாராம்.

ஈழத்திற்கு சென்ற பொழுது 3 என்ஜின் பொருத்திய படகை தலைவர் முதன் முதலாக சோதனை ஓட்டம் செய்தார். படகில் என்னை ஏற்றி விட வந்தவர் பால்ராஜ். ஆனையிறவு சமர்க்கள நாயகன்.நாங்கள் தொடுவாயில் இடையில் தங்கினோம்.காட்டுக்குள் இருந்த புலிகளுக்கு எள் உருண்டை தயாரித்து வைத்து இருந்தார்கள்.படகை ஓட்டியவர் பாலன். குமரப்பாவின் உடன்பிறந்த சகோதரர். இப்பொழுது இலண்டனில் இருக்கின்றார். என்னுடைய டைரியில் தலைவருடன் எடுத்த வீடியோ இருந்தது. என் மனைவி சொன்னார்கள், உங்களால் புலிகள் படகை இழந்தார்கள்.எனவே தேர்தலில் வந்த மீதம் பணத்தை புலிகளுக்கு கொடுத்து விடுங்கள் என்றார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் துணிந்து நின்றோம்.ஆனால் பழிச்சொல் மனிதனை தாங்க விடாது. புகழுக்காக உலகைக் கொடுப்போம். என் பிறவி இப்படி ஏன் ஆயிற்று என்று தெரியவில்லை. அண்ணா அவர்கள் மீதும்,இந்த மண்ணின் மீதும் கொண்ட பற்றால் இயக்கத்தில் உழைத்தேன். கட்சியின் புகழை உயர்த்தினேன். பல ஆண்டுகள் கழித்து அவரையே கொலை செய்வதற்கு என்று கொலைப்பழி சுமத்திய பொழுது நொருங்கிப் போனேன்.தீக்குளித்தால் நீதி கேட்கின்ற போராட்டத்திற்குத் தள்ளப்பட்டேன். கொலைப்பழியை எந்த திமுகவினரும் நம்பவில்லை.

கடற்கரையில் என் கதை முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பல முறை நினைத்தேன். அப்படி நடத்திருந்தால் வரலாற்றில் எவ்வளவு பெரிய பெயர்? உடன்பிறப்பு கடிதத்தில் என்னை வர்ணித்து கலைஞர் எழுதியிருப்பார். நான் அதிகாரத்தில் இல்லை.என்னிடம் அவ்வளவு பணம் கொடுக்க என்னிடம் 1 கோடி வாக்காளார்களா இருக்கின்றார்கள். சாஞ்சி வரை படையெடுத்து சென்றான். மக்கள் மத்தியில் கம்பீரமாக நடக்கின்றானே? திட்டமிடுவதில் வல்லவர் நம்மை அழிக்க நினைப்பவர். திட்டமிட்ட ஓர் அபாண்டத்தை முகநூலில் பதிவு செய்தார்கள்.

நான் சாதாரண மனிதன்.என் மனதில் கேட்ட பொழுது கண்ணன், நான் கேள்வி பிரதானம் என்று பதில் சொல்லவில்லை.கலைஞரை நினைத்து சொல்லவில்லை.என் தாய் மீது சத்தியம் செய்தேன். என் கொடும்பாவி எரித்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை. உங்கள் மனம் இந்த பழிச்சொல்லை சுமத்திய பொழுது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? உங்கள் அன்பு தான் என்னை இயக்கும் மூலதனம்.எனக்கு என்ன சுயநலங்க இருக்கு.சிறையில் இருந்து வெளியே வந்த பொழுது நிற்கவில்லையே? கலைஞரை வீட்டில் சந்திக்க மாட்டேன் என்று சொன்ன அட்டர்னி ஜெர்னல் ஜி.ஆர் என்னை தாயகத்தில் சந்தித்தார்.ஸ்லைர்லைட் அதிபர் உங்களை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.I am very sorry Mr G.R.நான் பணத்துக்கு ஆசப்பட்டா ,உங்களுக்கு பொதுச்செயலாளராக இருக்க தகுதி இருக்காது.இதை நினைத்து என் உள்ளம் சுக்கு நூறாயிருக்கும்.

அதாவது பழிச்சொல்,தன்மானத்துக்கு இழுக்கு என்றால் உயிர் போகி விடும்.என்னுடைய சகோதரி குடும்பம் நூறாண்டாக நூற்பாலை நடத்தி வருகின்றார்கள்.டி.வி ஆரம்பிப்பது என்று சொன்னார்.நான் என்ன நினைச்சேன்.இந்த Ammapet G Karunakaran மாறி இணையத்தில் இருக்குற பம்பரம் டி.வி ன்னு நினைச்சேன்.டி.வி எப்படி வைகோ ஆரம்பிச்சாரு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நான் மந்திரியாக ஆசைப்படவில்லை.நான் மந்திரியாகாகதன் காரணம், இந்த இயக்கத்தில் கஷ்டப்படுபவன் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டும் என்று தவிர்த்தேன். பழிச்சொல்லும், நிந்தையும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் என்று தான் ஒவ்வொரு இரவும் நினைக்கிறேன்.

பாலச்சந்திரன் கொலையாக காரணமான அவர்களோடு கூட்டணி வைத்து பிச்சை எடுத்து பதவி பெற வேண்டிய அவசியம் இல்லை.போனவர்களை விடுங்க.இந்த வேதனை என் இருதயத்தை கசக்கிப் பிழிகின்றது.அவன் தோழர்களுக்காக வாழ்ந்தான்.அண்ணன் தம்பியாக பழகியவர்கள் விலகும் பொழுது தாங்க முடியவில்லை.ஒரே ஒரு ஆறுதல்.இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று.நீங்கள் என்மீது சந்தேகப்படவில்லை.என் நாணயத்தை நம்பினீர்கள்.கட்சியை நீங்கள் தான் உருவாக்கினீர்கள்.காப்பாற்றி வருகின்றீர்கள்.தோழர்களே நீங்க இருக்கீங்க. உண்மையும்,சத்தியமும் வெளிச்சத்துக்கு வரும். நம்ம என்ன தப்பு பண்ணினமா ? எங்களை அழிக்க முடியாது. உலகத்திலேயே தொண்டர்கள் உருவாக்கிய ஒரே கட்சி மதிமுக தான். இதை அழிக்க முடியாது என வைகோ பேசினார்.

ஓமன் மதிமுக