பொறியியல் பட்டம் பெற்ற மாணவர் ஒருவர், கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கி கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் லெனின் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் வங்கியில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. அதோடு மட்டுமின்றி, கடனை வசூலிக்க அடியாட்களை பணியாளர்களாக சேர்த்து, மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் மிரட்டி வருகின்றனர்.
படிப்பை முடித்து ஒரு மாத காலமே ஆன நிலையில், அவர் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தனியார் முகவர் மூலம் கடனை வசூலிக்க நிர்பந்தப்படுத்தி இருக்கிறது. பொறியியல் பட்டம் பெற்று பணி நியமனம் பெறும் நிலை ஏற்பட்டால்தான் மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியும். ஆனால், வங்கி நியமித்துள்ள தனியார் முகவர்கள் பேட்டை ரவுடிகளைப் போல மாணவர் லெனினுக்கு நெருக்கடி தந்ததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாழவேண்டிய 24 வயது மகனை பறிகொடுத்துவிட்ட லெனின் தந்தை, கல்விக் கடன் பெற்றுள்ள மற்ற மாணவர்களையாவது இது போன்ற கொடுமைக்கு உள்ளாகாமல் அரசு காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசுத்துறை வங்கிகளின் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய -மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் லெனின் போன்ற மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகிவிடும்.
இந்தியாவில் பெரு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஜி.எம்.ஆர்.அதானி, லான்கோ, ஜேய்பி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட பத்து நிறுவனங்கள் இந்திய வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன்களில் 12 சதவீதத்தைப் பெற்று திருப்பிச் செலுத்த முன்வரவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் கடன்கள் மட்டும் ஏழு மடங்காக உயர்ந்திருக்கின்றன. பெரு நிறுவனங்களால் வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூபாய் 7.33 இலட்சம் கோடிகள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ள பெரு நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க துணிவில்லாத வங்கிகள், எளிய விவசாயிகளையும், கல்விக்கடன் பெற்ற மாணவர்களையும் துன்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
சட்டமன்றத் தேர்தலின்போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடனை இரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் முழுவதையும் தமிழக அரசே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மதுரை மாணவர் லெனின் தற்கொலைக்குக் காரணமான வங்கி மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment